இலங்கையின் சுழலுக்கு முன் இங்கிலாந்தின் பலமான துடுப்பாட்டம் தாக்குப்பிடிக்குமா?

692

தம்புள்ளை – ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், அதே மைதானத்தில் நாளை (13) நடைபெறவுள்ள தங்களுடைய இரண்டாவது மோதலுக்கு இலங்கை அணி தயாராகியுள்ளது.

“நேற்றைய போட்டியை திட்டமிட்டப்படி நகர்த்தியிருந்தோம்” – குசல் பெரேரா

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று.

சுமார் 11 வருடங்களுக்கு பின்னர் தம்புள்ளை மைதானத்தில் மோதிக்கொள்வதற்கு இரண்டு அணிகளும் தயாராகினாலும், இறுதியில் மழை குறுக்கிட்டு, இரண்டு அணிகளது எதிர்பார்ப்பையும் வீணாக்கியது. 15 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டிருந்த காரணத்தால் இரண்டு அணிகளும் தங்களுக்கு வகுத்து வைத்திருந்த திட்டங்களும் பிரயோசனமற்றுப் போனது.

முதல் போட்டியில் இலங்கை அணியானது இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், இரண்டு சகலதுறை வீரர்கள் மற்றும் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் என தங்களுடைய அணியை வரிசைப்படுத்தியிருந்தது. இதில் அகில தனன்ஜய மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் மேலதிக சகலதுறை வீரர்கள் என்ற ரீதியில் அணியால் பெயரிடப்பட்டிருந்தனர்.

இதேபோன்று இங்கிலாந்து அணி, தங்களுடைய பதினொருவரில் மொயீன் அலியை மேலதிக சகலதுறை வீரராகக் கொண்டு, இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், இரண்டு சகலதுறை வீரர்கள் மற்றும் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் என இலங்கை போன்ற ஒரே வகையான அணியை களமிறக்கியிருந்தது. எனினும், போட்டி முழுமையாக நடைபெறவில்லை என்பதால் எந்த அணியின் கணிப்பு சரியாக இருக்கும் என்பதை அறியக்கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை. தற்போது அதே மைதானத்தில் இரண்டாவது போட்டி என்பதால் குழாம்களில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது போட்டிக்கான இலங்கை உத்தேச பதினொருவர்

உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால் (தலைவர்), குசல் ஜனித் பெரெரா, தசுன் சானக, திசர பெரேரா, அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகன், துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க

இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட் அணியை பொருத்தவரையில் கடந்த இரண்டு வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மோசமான நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. இறுதியாக விளையாடிய 41 போட்டிகளில் வெறும் 10 போட்டிகளில் மாத்திரமே வெற்றியை பெற்றுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் உலகக் கிண்ணத்தை நோக்கிய பயணமானது இலங்கைக்கு மிகக் கடுமையானதாகவே இருக்கும். எனினும், தற்போது இலங்கை அணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.

தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், அடுத்த நான்கு போட்டிகளும் இலங்கை அணிக்கு முக்கியமான போட்டியாக அமையவுள்ளன. இந்த போட்டிகளில் கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு, அணியை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியுமானால், உலகக் கிண்ணத்தை நோக்கிய இலங்கை அணியின் பயணம் சிறப்பாக அமையும்.

முக்கியமாக, இலங்கை அணியின் பந்து வீச்சை விடவும் துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு பக்கம் அதிக முன்னேற்றங்களை கொண்டுவருவது அணிக்கு அவசியமானதொன்றாகும். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணம், அணி 300 ஓட்டங்களை நெருங்கியதாகும். துடுப்பாட்ட வீரர்கள் தங்களுடைய கடமையை செவ்வனே செய்வார்களாயின் இலங்கை அணிக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம். அத்துடன் களத்தடுப்பிலும் இலங்கை அணி முன்னேறும் பட்சத்தில்தான் அணி மேலும் வலிமை பெறும்.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணியை பொருத்தவரையில் ஒருநாள் போட்டிகளில் அதிசிறந்த பிரதிகளை பதிவுசெய்துள்ளது. தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு, அவர்களது துடுப்பாட்ட வரிசை மிக அதிகமான பங்களிப்பை அளித்து வருகின்றது. முக்கியமாக ஒருநாள் போட்டிகளில் அதிசிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட ஓட்ட விகிதத்தை இங்கிலாந்து அணி கொண்டுள்ளது. மத்திய வரிசையில் ஜோ ரூட், இயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் மற்றும் மொயீன் அலி ஆகியோர் சிறப்பாக தொடர்ந்து ஓட்டங்களை குவித்து வருகின்றமை அணிக்கு மேலும் பலமளித்து வருகின்றது.

Photos: Sri Lanka practice session before 2nd ODI against England

ThePapare.com | Viraj Kothalawala | 12/10/2018…

அதுமாத்திரமின்றி, இலங்கை வருகைதந்துள்ள இங்கிலாந்து அணி பயிற்சிப் போட்டி மற்றும் இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் இதனையடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில், இலங்கை போன்ற துடுப்பாட்டத்துக்கு மிகவும் கடினமான ஆடுகளங்களில் இங்கிலாந்து அணி எவ்வாறு ஓட்டங்களை பெறும் என்பதே கேள்வியாக முன்வைக்கப்படுகின்றது.  

சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்து அணி முதலிடத்தையும், இலங்கை அணி எட்டாவது இடத்தையும் வகிக்கின்றன. எனினும், சுழற்பந்துக்கு சாதகமான அவர்களுடைய சொந்த மைதானத்தில் இலங்கை அணியை வீழ்த்துவது இலகுவான விடயமாக இருக்காது. எனவே, இந்த சவாலை எதிர்கொண்டு இங்கிலாந்து அணி, இலங்கையை வீழ்த்துமா? அல்லது தங்களுடைய மோசமான தோல்விகளை மறக்க முதல் நிலை அணியை இலங்கை வீழ்த்துமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச பதினொருவர்

ஜேசன் ரோய், ஜொனி பெயார்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொஹீன் அலி, அடில் ரஷீட், செம் கரன், கிரிஸ் வோகஸ், மார்க் வூட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<