கோஹ்லியின் சாதனை இரட்டைச் சதத்தோடு இந்தியா மேலும் வலுவான நிலையில்

333

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவின் போது அணித் தலைவர் விராட் கோஹ்லியின் அபார இரட்டைச் சதத்துடன் இந்தியா வலுவான நிலையில் காணப்படுகின்றது. 

நேற்று டெல்லி பெரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த டெஸ்ட் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடியிருந்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவின் போது, 90 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 376 ஓட்டங்களைக் குவித்து உறுதியான நிலையில் காணப்பட்டது. களத்தில் விராட் கோஹ்லி 156 ஓட்டங்களுடனும், ரோஹித் சர்மா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் நோக்கோடு இந்திய அணி, தமது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்தது. இன்றைய நாளின் பகல் போசண இடைவேளை வரை இந்திய அணியினர் அவர்களது ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டமாக விராட் கோஹ்லியின் தொடர்ச்சியான இரண்டாவது இரட்டைச் சதத்தோடு 135 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த இணைப்பாட்டத்தோடு இந்திய அணி 500 ஓட்டங்களை நெருங்கியிருந்த போது தமது 5 ஆவது விக்கெட்டையும் பறிகொடுத்தது. இந்திய அணியின் ஐந்தாம் விக்கெட்டாக வீழ்ந்த ரோஹித் சர்மா தனது 8ஆவது டெஸ்ட் அரைச் சதத்துடன் 102 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களைக் குவித்திருந்தார். சர்மாவின் விக்கெட்டோடு போட்டியின் மதிய போசண இடைவேளையும் எடுக்கப்பட்டது.

கோஹ்லி – விஜய் இணைப்பாட்டம் மூலம் இந்திய அணி அபார

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான…

மதிய போசண இடைவேளையின் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் டெல்லி நகரின் மாசடைந்த காற்று காரணமாக கிட்டத்தட்ட 22 நிமிடங்கள் வரையில் போட்டி தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மதிய உணவு இடைவேளையை அடுத்து இலங்கை வீரர்கள் மூக்குறை (mask) அணிந்த நிலையில் களத்தடுப்பில் ஈடுபட்டது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கிய ஒரு சம்பவமாக மாறியிருந்தது.

நிலைமை இவ்வாறு இருக்க, இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை விரைவாக இந்த இடைவெளியில் பறிகொடுத்திருந்தது. இதில் ஒன்றாக இரட்டைச் சதம் கடந்த அணித் தலைவர் விராட் கோஹ்லியின் விக்கெட்டை லக்ஷான் சந்தகன் LBW முறையில் கைப்பற்றியிருந்தார். மூன்றாம் நடுவரின் உதவியை இந்த விக்கெட்டின் போது கோஹ்லி நாடியிருந்த போதும் அவருக்கு அது சாதகமாக அமையவில்லை.

இந்திய அணியின் ஏழாம் விக்கெட்டாக பறிபோயிருந்த விராட் கோஹ்லி, மொத்தமாக 287 பந்துகளை எதிர்கொண்டு 25 பவுண்டரிகள் அடங்கலாக 243 ஓட்டங்களைக் குவித்து டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த இன்னிங்ச பதிவு செய்தார்.

ஆறாவது தடவையாக டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதம் குவித்த கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அணித் தலைவராக அதிக  இரட்டைச் சதங்கள் கடந்த வீரராக புதிய சாதனை ஒன்றை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் பிரெய்ன் லாரா ஐந்து தடவைகள் இரட்டைச் சதம் கடந்ததே சாதனையாக இருந்தது.

அணித் தலைவரின் விக்கெட்டை அடுத்து இந்தியா 127.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளுடன் 536 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இலங்கை அணியின் பந்து வீச்சில் லக்ஷான் சந்தகன் 4 விக்கெட்டுகளையும் லஹிரு கமகே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சை தில்ருவான் பெரேரா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோருடன் ஆரம்பித்த இலங்கை வீரர்களுக்கு இந்த இன்னிங்சின் முதல் பந்திலேயே கருணாரத்னவின் விக்கெட்டை சாய்த்து இந்திய அணியின் வேகப்பந்து  வீச்சாளர் மொஹமட் சமி அதிர்ச்சியூட்டினார்.

இதனை அடுத்து சிறிது நேரத்தில் இலங்கை அணி தமது இரண்டாவது விக்கெட்டையும் 14  ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பறிகொடுத்து தடுமாறியிருந்தது. நீண்ட காலத்திற்குப் பின்னர் இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்ட தனஞ்சய டி சில்வா ஒரு ஓட்டத்துடன் வெளியேறி ஏமாற்றினார். சில்வாவின் விக்கெட்டை அடுத்து சிறிது நேரத்தில் வீரர்கள் தேநீர் இடைவேளைக்குச் சென்றனர்.

தலையில் பந்து தாக்கியதால் CT ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சதீர சமரவிக்ரம

டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் போவர்ட் சோர்ட் லெக் (Forward short leg) திசையில்…

தொடர்ந்த ஆட்டத்தில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தில்ருவான் பெரேராவுடன் ஜோடி சேர்ந்த இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கையின் மூன்றாம் விக்கெட்டுக்காக பெறுமதி வாய்ந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினார். 61 ஓட்டங்கள் மூன்றாம் விக்கெட்டுக்காக பகிரப்பட இலங்கையின் மூன்றாம் விக்கெட்டாக தில்ருவான் பெரேரா ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. பெரேரா 54 பந்துகளுக்கு 9 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 42 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இதனையடுத்து அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுடன் இணைந்து மெதிவ்ஸ் தனது 29 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தைப் பெற்று  சிறப்பாக செயற்பட்ட நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன் போது இலங்கை அணி 44.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் இந்திய அணியை விட 405 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது.

மெதிவ்ஸ் 57 ஓட்டங்களோடும், தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் இன்றைய நாளில் இஷாந்த் சர்மா, மொஹமட் சமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

ஸ்கோர் விபரம்

Scorecard