தொடரை தீர்மானிக்கும் டெஸ்ட்டில் வெற்றி யாருக்கு?

69
Sri Lanka tour of Pakistan 2019 2nd Test preview

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 19ம் திகதி கராச்சி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

இரண்டு அணிகளுக்கும் இடையில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி, சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக போட்டி சமனிலையாகியதுடன், இரண்டாவது போட்டியானது தொடரை தீர்மானிக்கக்கூடிய போட்டியாக மாறியுள்ளது.

முதல் போட்டியின் பெரும்பகுதி சீரற்ற காலநிலை, மைதானத்தின் ஈரப்பதன் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.  எனினும், இந்தப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் சில நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய விடயங்களும் நடந்தேறியிருந்தன.

இலங்கை அணியை பொருத்தவரை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக, தனன்ஜய டி சில்வாவின் சதம், திமுத் கருணாரத்ன, மெதிவ்ஸ், ஓசத பெர்னாண்டோ மற்றும் டிக்வெல்ல ஆகியோரின் துடுப்பாட்ட ஆரம்பங்கள் என்பன எதிர்பார்க்கக்கூடியதாக அமைந்திருந்தன.

பந்துவீச்சில் இலங்கை அணி சற்று தடுமாறியிருந்தது. லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். எனினும், இவர்களின் பந்துவீச்சு எதிரணிக்கு அழுத்தத்தை வழங்கயிருக்கவில்லை. ஆனாலும், முதல் போட்டியானது முடிவை எட்டக்கூடிய வாய்ப்பை தரவில்லை என்பதால், அடுத்த போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களும் போட்டிக்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தான் அணியானது 10 வருடங்களுக்கு பின்னர், தங்களது சொந்த மண்ணில் சர்வதேச டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியுள்ளது. இதில், பல நம்பிக்கைக்குறிய விடயங்களை அந்த அணி செய்து முடித்துள்ளது. ஆபீத் அலியின் கன்னி டெஸ்ட் சதம் மற்றும் பாபர் அசாமின் டெஸ்ட் துடுப்பாட்டங்கள் என்பன அணியின் துடுப்பாட்டத்தில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

பந்துவீச்சை எடுத்துக்கொண்டாலும், நஷீம் ஷாஹ், சயீன் ஷா அப்ரிடி ஆகிய இளம் வீரர்களின் மிரட்டலான வேகப் பந்துவீச்சும் அந்த அணியின் பந்துவீச்சு பக்கத்தை பலமாக்கியுள்ளது. 

இரண்டு அணிகளதும் முதல் போட்டிக்கான பிரகாசிப்பானது, அடுத்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அத்துடன், டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முழுமையான புள்ளிகளை பெற்றுக்கொள்வதற்கும், டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கும் இந்தப் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. எனவே, இரண்டு அணிகளும் சமபலமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இதுவரையில் 54 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் 19 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், 16 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளன. இதில்,  19 போட்டிகள் வெற்றித் தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

அத்துடன், பாகிஸ்தானில் இரண்டு அணிகளும் 22 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், பாகிஸ்தான் அணி 8 போட்டிகளிலும், இலங்கை 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

எதிர்பார்ப்பு வீரர்கள்

திமுத் கருணாரத்ன

இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டு வரும் திமுத் கருணாரத்ன அணியின் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார். இவரது அணித் தலைமை அணிக்கு பலம் சேர்ப்பதுடன், முக்கியமாக இவரது ஆரம்ப துடுப்பாட்டம் அணிக்கு தேவையான ஒன்றாக மாறியுள்ளது.

இலங்கை அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் நிலையான தன்மை அதிகமாக பேசப்பட்டு வந்தது. எனினும், தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அணிக்காக ஓட்டங்களை குவித்து வருகின்றார்

அதுமாத்திரமின்றி கடந்த வருடத்துக்கான இலங்கை அணியின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் விருதை வென்றுள்ள இவர், இந்த டெஸ்ட் போட்டியில் எதிர்பார்க்கப்படும் துடுப்பாட்ட வீரராக மாறியுள்ளார். 

பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் இளம் வீரராக இருந்து, தற்போது T20I அணியின் தலைவராகவும், டெஸ்ட் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள பாபர் அசாம் அந்த அணியின் எதிர்பார்க்கப்படும் துடுப்பாட்ட வீரராக உள்ளார்.

கடந்த காலங்களில்  ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டங்களை இவர் வெளிப்படுத்தி வந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் சோபிக்கத் தவறியிருந்தார். எனினும், கடைசியாக நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் கடந்த 12 மாதங்களில் பாபர் அசாம் 431 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியிருந்தார். எனவே, இந்தப் போட்டியிலும் இவர் அணிக்காக ஓட்டங்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பதினொருவர்

இலங்கை அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, உபாதைக்குள்ளாகியிருந்த கசுன் ராஜித இரண்டாவது போட்டிக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அசித பெர்னாண்டோ டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுத் கருணாரத்ன (தலைவர்), ஓசத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவன் பெரேரா, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ 

பாகிஸ்தான் அணி 

முதல் டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி எந்தவித மாற்றங்களும் இன்றி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸார் அலி (அணித்தலைவர்), ஆபித் அலி, பாபர் அசாம், ஹாரிஸ் சுஹைல், மொஹம்மட் அப்பாஸ், மொஹமட் றிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), நஸீம் ஸாஹ், சஹீன் அப்ரிடி, ஷான் மஸூத், உஸ்மான் ஷென்வாரி, அசாட் சபிக்