அற்புத சுழற்பந்தினால் சென்னை அணிக்கு முதல் வெற்றி

136
IPL Twitter

இந்தியாவில் இன்று (23) ஆரம்பமாகியுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விராட் கோஹ்லியின் தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்ட மகேந்திரசிங் டோனி தலைமையிலான நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இலகுவான வெற்றியை பெற்றுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் இந்தியன் ப்ரீமியர் லீக்

சர்வதேச போட்டிகளுக்கு நிகரான கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும்…

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெங்களூர் அணிக்கு வழங்கியது. சென்னை அணியின் ஆரம்பம் வேகப்பந்து வீச்சுடன் இருந்தாலும், ஆடுகளத்தை அறிந்து டோனியின் மூலமாக சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு  பந்து வீச்சு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை ஹர்பஜன் சிங் கட்டுப்படுத்த, மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களை இம்ரான் தாஹிர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஓய்வறைக்கு அனுப்பினர். சுழலுக்கு மத்தியில் தாக்குப்பிடிக்க முடியாத பெங்களூர் அணி ஐ.பி.எல். வரலாற்றில் தங்களுடைய இரண்டாவது குறைந்த ஓட்டத்தை பதிவுசெய்து 17.1 ஓவர்களில் 70 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதற்கு முன்னர் பெங்களூர் அணி கடந்த 2017ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 49 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது.

பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பார்த்திவ் பட்டேல் 29 ஓட்டங்களை பெற, ஏனைய எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை. சென்னை அணியின் பந்து வீச்சு பிரதியை பொருத்தவரை, இம்ரான் தாஹிர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னையை சுப்பர் கிங்ஸ் அணியை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்திய போதும், குறைந்த ஓட்ட வேகத்துடன் நிதானமாக ஆடிய சென்னை அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 17.4 ஓவர்களில் வெற்றியிலக்கினை அடைந்தது.

>>Photos: Sri Lanka Vs South Africa 2nd T20I in Super Sports Park<<

சென்னை அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷேன் வொட்சன் பத்து பந்துகளை சந்தித்து ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்து வெளியேறிய போதும், அம்பத்தி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இணைப்பாட்டமொன்றினை பகிர்ந்தனர். இதில், ரெய்னா 19 ஓட்டங்களையும், ராயுடு 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, கேதார் ஜாதவ் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதேவேளை, இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சுரேஷ் ரெய்னா, ஐ.பி.எல். வரலாற்றில் 5000 ஓட்டங்களை கடந்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். போட்டியில் பெங்களூர் அணியின் பந்து வீச்சில் மொயீன் அலி, யுஸ்வேந்திர சஹால் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்படி, இந்த பருவகாலத்தின் முதல் வெற்றியினை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பதிவுசெய்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<