ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கையிலிருந்து 12 மெய்வல்லுனர்கள் பங்கேற்பு

210

18 ஆவது ஆசிய விளையாட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமாத்ராவின் தலைநகர் பாலம்பேர்க்கிலும் ஆரம்பமாகவுள்ளது.

45 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்கேற்கும் ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 177 வீர, வீராங்கனைகளும், 66 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

ஆசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி வாய்ப்பை இழந்த அனித்தா

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்…

இந்த நிலையில், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் மெய்வவ்லுனர் போட்டிகளுக்காக இலங்கையிலிருந்து 12 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதில் 7 வீரர்களும், 5 வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வீரர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அதற்காக 25 பேர் கொண்ட அணியொன்றையும் அறிவித்திருந்தது.

எனினும், ஆசிய விளையாட்டு விழாவுக்காக இலங்கை மெய்வல்லுனர் அணிக்கு தெரிவாகியிருந்த வீரர்களின் தகுதியை மீள்பரிசீலனை செய்யும் நோக்கில் இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற 96 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களை மாத்திரம் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றச் செய்யவும், ஆசிய தகுதி மட்டத்தினை பூர்த்தி செய்ய தவறியவர்களை நீக்கவும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த தவறிய ஈட்டி எறிதல் வீரர் சுமேத ரணசிங்க, நீளம் பாய்தல் வீரர் தனுஷ்க பிரியரத்ன மற்றும் 1500 மீற்றர் ஓட்ட வீரர் ஹேமந்த குமார் ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த வாரம் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 100 மீற்றரில் எந்தவொரு வீரரும் எதிர்பார்த்தளவு நேரப் பெறுமதியைப் எட்டாத காரணத்தால் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருந்த 4 x 100 அஞ்சலோட்ட அணியையும் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இருந்து நீக்குவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், கடந்த பெப்ரவரி மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவை நோக்கிய பயணத்திற்கான பரீட்சார்த்த மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த இலங்கை 4 x 100 அஞ்சலோட்ட அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தது.

இது இவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கான அடைவு மட்டத்தினை பூர்த்தி செய்த 14 பேர் கொண்ட இறுதிக் குழாமை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் அனுமதிக்காக தேசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது.

  • அருண தர்ஷன

ஜப்பானின் கிபு நகரில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற பாடசாலை வீரரான அருண தர்ஷனவும், அதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மற்றுமொரு பாடசாலை வீரரான பசிந்து கொடிக்காரவும் இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட குழாமில் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் முறையே முதலாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கனிஷ்ட அதிவேக வீரர் மொஹமட் சபானுக்கு 200 மீற்றரில் தங்கப் பதக்கம்

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் இந்த மாதம்..

இதேநேரம், இம்முறை தேசிய மெய்வல்லுனரில் 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்ட காலிங்க குமாரகே மற்றும் திலிப் ருவன் மற்றும் அஜித் பிரேமகுமார ஆகிய வீரர்களும் இலங்கை அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர, ஆண்களுக்கான 400 மீற்றர் தனிநபர் போட்டியில் கனிஷ்ட வீரர் அருண தர்ஷனவுடன், காலிங்க குமாரகே பங்குபற்றவுள்ளார். எனவே இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் 4 x 400 அஞ்சலோட்டம் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கமொன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், கடந்த பெப்ரவரி மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவை நோக்கிய பயணத்திற்கான பரீட்சார்த்த மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட அணி வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • பிரசாத் விமலசிறி

இவர்களைத் தவிர, பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 7 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட ஜானக பிரசாத் விமலசிறி மற்றும் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளின் (800 மீற்றர்) தேசிய சம்பியனும், கடந்த சில மாதங்களாக கென்யாவில் விசேட பயிற்சிகளைப் பெற்றுவருகின்ற இந்துனில் ஹேரத் ஆகியோர் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்காக பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்கின்ற முக்கிய வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், பெண்கள் அணியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியனான கயந்திகா அபேரத்ன மற்றும் ஆசிய சம்பியனான நிமாலி லியனாரச்சி ஆகியோர் பதக்கங்களைப் பெற்றுக்கொடுக்கின்ற முன்னிலை வீராங்கனைகளாக இடம்பெற்றுள்ளனர்.

அதேபோன்று, அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்ற நிலானி ரத்னாயக்கவும், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டலில் பதக்கமொன்றை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக கடந்த பெப்ரவரி மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவை நோக்கிய பயணத்திற்கான பரீட்சார்த்த மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த நிலானி ரத்னாயக்க, 3000 மீற்றர் தடைதாண்டலில் தங்கப் பதக்கத்தையும், 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • நிமாலி மற்றும் கயந்திகா

இதேநேரம், அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற தெற்காசியாவின் அதிவேக வீராங்கனையான ருமேஷிகா ரத்னாயக்க, பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட ருமேஷிகா, அரையிறுதிப் போட்டி வரை முன்னேறி ஆறாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், அமெரிக்காவில் தற்போது வசித்து வருகின்ற இலங்கையின் அரை மரதன் தேசிய சம்பியனான ஹிருனி விஜேரத்ன, பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் போட்டியிடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் தங்கப் பதக்கத்தை வென்ற 20 வயதுடைய இளம் வீரரான உஷான் திவங்க மற்றும் பெண்களுக்கான 400 மீற்றரில் சிறந்த காலத்தைப் பதிவு செய்த உபமாலி ரத்னகுமாரி ஆகிய இருவரையும் ஆசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்ட மெய்வல்லுனர் குழாமிலிருந்து நீக்குவதற்கு ஆசிய விளையாட்டு விழா தொழில்நுட்பக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த வீரர்களின் பதிவுகள் தொடர்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களது விண்ணப்பங்கள் இவ்வாறு நிராகரிக்கப்படுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • உஷான்

இதேவேளை, ஆசிய விளையாட்டு விழாவில் முதல் தடவையாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 4 x 400 மீற்றர் கலவை அஞ்சலோட்டத்திலும் இலங்கை அணி களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அறிவிக்கப்பட்ட இலங்கை குழாமில் அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ருமேஷிகா ரத்னாயக்க மற்றும் உபமாலிகா ரத்னகுமாரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

எனினும், பெண்களுக்கான 400 மீற்றரில் இருந்து உபமாலி ரத்னகுமாரியை ஏற்கனவே ஆசிய தொழில்நுட்ப குழு நீக்கியதால், 4 x 400 மீற்றர் கலவை அஞ்சலோட்ட அணியில் உபமாலியின் பங்குபற்றுதல் இல்லாமல் போனது. எனவே, 4 x 400 மீற்றர் கலவை அஞ்சலோட்டத்தில் இருந்து இலங்கை அணியை நீக்கவும் தொழில்நுட்ப குழு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு அதிகளவான பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்த கௌரவம் மெய்வல்லுனர் விளையாட்டை சாரும்.

இதில் 27 வீரர்கள் 46 பதக்கங்களை இதுவரை வென்றுள்ளதுடன், 1951 ஆம் ஆண்டு இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் எம். ஏ. அக்பர் வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இறுதியாக 2014 ஆம் (தென் கொரியா) மற்றும் 2010 ஆம் (சீனா) ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாக்களில் இலங்கை மெய்வல்லுனர் அணியால் எந்தவொரு பதக்கத்தையும் வெல்ல முடியாது போனது. எனினும், 2002 ஆம் ஆண்டு தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் தமயன்தி தர்ஷா (400 மீற்றர்) மற்றும் சுசந்திகா ஜயசிங்க (100 மீற்றர்) ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், ரொஹான் பிரதீப் குமார (400 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

அத்துடன், 2006 கட்டாரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 100 மீற்றரில் சுசந்திகா ஜயசிங்க வெள்ளிப் பதக்கத்தையும்,  சுகத் திலகரத்ன தலைமையிலான 4 x 400 அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

மாலிங்கவின் எதிர்காலம் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு

முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவின் திறமையை..

எனவே, ஆசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளில் சுமார் 12 வருடங்களாக எந்தவொரு பதக்கத்தையும் வெற்றிகொள்ளாத இலங்கை அணி இம்முறை வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எனினும், அண்மைக்காலமாக சர்வதேச மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற பல வீரர்கள் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இடம்பெற்றுள்ளதால், குறைந்தபட்சம் 4 பதக்கங்களையாவது இலங்கை மெய்வல்லுனர் வீரர்கள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்ப்படுகின்றது.

18 ஆவது ஆசிய விளையாட்டு விழா தொடர்பான உடனடித் தகல்கள் மற்றும் போட்டி முடிவுகளை அறிந்துகொள்ள இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapre.com உடன் இணைந்திருங்கள்.

ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை மெய்வல்லுனர் குழாம்

பெயர் போட்டி

 

அஜித் பிரேமகுமார 4 x 400 அஞ்சலோட்டம்

 

அருண தர்ஷன 400 மீற்றர், 4 x 400 அஞ்சலோட்டம்

 

காலிங்க குமாரககே 400 மீற்றர், 4 x 400 அஞ்சலோட்டம்

 

பசிந்து கொடிக்கார 4 x 400 அஞ்சலோட்டம்

 

திலிப் ருவன் 4 x 400 அஞ்சலோட்டம்

 

ஜானக பிரசாத் விமலசிறி உயரம் பாய்தல்

 

இந்துனில் ஹேரத் 800 மீற்றர்

 

கயன்திகா அபேரட்ன 800 மீற்றர்

 

நிமாலி லியனாரச்சி 800 மீற்றர்

 

நிலானி ரத்னாயக்க 3000 மீற்றர் தடைதாண்டல்

 

ருமேஷிகா ரத்னாயக்க 200 மீற்றர்

 

ஹிருனி விஜேரட்ன 10,000 மீற்றர்

 

முகாமையாளர் – சமன் குமார குணவர்தன

பயிற்றுவிப்பாளர்கள் – பத்ரா குணவர்தன, சஜித் ஜயலால், மிரான்டா ரமிரஸ்