கனிஷ்ட அதிவேக வீரர் மொஹமட் சபானுக்கு 200 மீற்றரில் தங்கப் பதக்கம்

724

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு இலங்கை அணிக்காக தெரிவாகியுள்ள வீரர்களின் தகுதியினை மீள்பரிசீலனை செய்யும் நோக்கில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று (05) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் லங்கா லயன்ஸ் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட 20 வயதுடைய இளம் வீரர் மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 21.34 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.

4 தேசிய சாதனைகள், 11 போட்டிச் சாதனைகளுடன் தேசிய மெய்வல்லுனர் தொடர் நிறைவு

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு..

இதன்மூலம், சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க வீரர்களை முந்திச் சென்ற மொஹமட் சபான், தேசிய மட்ட திறந்த (Open Nationals) மெய்வல்லுனர் போட்டியொன்றில் முதற்தடவையாக தங்கப் பதக்கத்தை வெற்றியீட்டி புதிய மைல்கல்லை எட்டினார்.

ஆண்களுக்கான 200 மீற்றரில் தேசிய சம்பியனான வினோஜ் சுரன்ஜய டி சில்வா, டெங்குக் காய்ச்சல் காரணமாக இம்முறை போட்டிகளில் பங்கேற்கவில்லை.

அதேபோல, நேற்றுமுன்தினம் (04) நடைபெற்ற 200 மீற்றர் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றிகளைப் பதிவுசெய்து இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய 100 மீற்றர் சம்பியன் ஹிமாஷ ஏஷான் மற்றும் 400 மீற்றர் முன்னாள் சம்பியன் காலிங்க குமாரகே ஆகியோர் உபாதை காரணமாக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

>> சபானின் ஓட்டத்தைப் பார்வையிட 

எனினும், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெற்று வருகின்ற ஜி. பிரேமகுமார உள்ளிட்ட ஒரு சில முன்னணி வீரர்கள் ஆண்களுக்கான 200 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

இந்த நிலையில், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஆரம்பமாகிய இப்போட்டியில் பிரமேகுமார சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொண்டு இறுதி 150 மீற்றர் வரை முன்னிலை பெற்றிருந்தார். எனினும், போட்டியின் இறுதிவரை பிரேமகுமாரவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த மொஹமட் சபான், இறுதி 20 மீற்றரில் பிரமேகுமாரவை பின்தள்ளி வெற்றி இலக்கை எட்டினார்.

200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சபான்

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று…

இதன்படி, போட்டியை 21.34 செக்கன்களில் நிறைவு செய்த சபான், முதலிடத்தையும், 21.41 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த ஜி. பிரேமகுமார இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொள்ள, எஸ்.எஸ் குமார மூன்றாவது இடத்தை தனதாக்கினார்.

நிகவெரட்டிய அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலத்தின் பழைய மாணவரான மொஹமட் சபான், 2013ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த இளம் வீரராவார்.

200 மீற்றரில் பிரேமகுமாரவுடன் சரிசமமாகப் போட்டியிடும் மொஹமட் சபான்

எனினும், 2015ஆம் ஆண்டில் எந்தவொரு தேசிய மட்டப் போட்டியிலும் வெற்றியையும் பெற்றுக்கொள்ளாத சபான், 2016இல் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 200 மீற்றரில் முதலிடத்தையும், 100 மீற்றரில் 2ஆவது இடத்தையும் பெற்று அசத்தினார்.

இந்நிலையில், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.96 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தையும், 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.61 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் லங்கா லயன்ஸ் விளையாட்டுக் கழத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மொஹமட் சபான், போட்டியை 10.83 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார்.

அதேபோன்று, 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றரில் கலந்துகொண்ட அவர், போட்டியை 21.50 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு சபான் வழங்கிய விஷேட செவ்வியில், தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் முதல்தடவையாகக் களமிறங்கி, அனுபவமிக்க வீரர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த எனது கழகத்துக்கும், பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் சிறுவயது முதல் இன்றுவரை மெய்வல்லுனர் துறையில் ஆர்வத்துடன் விளையாடி வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற எனது பெற்றோர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

இதேநேரம், 23 வயதுக்குட்பட்ட மெய்வல்லுனர் குழாத்திற்கு தற்போது தெரிவாகியுள்ள சபான், எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு மேலும் பல பதக்கங்களை வெல்வதற்கும், சர்வதேச மட்டப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்பதற்கு விரும்புவதாகவும் இதன்போது தெரிவித்தார்.

வட மேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், நிகரவெரட்டிய தேர்தல் தொகுதியில் உள்ள அம்புக்காகம என்ற சிறிய கிராமத்தில் இருந்து தேசிய மெய்வல்லுனர் அரங்கில் இளம் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கின்ற சபானின் திறமைகளை மேலும் ஊக்கப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், நிச்சயம் இலங்கையின் மெய்வல்லுனர் துறை அரங்கில் மற்றுமொரு சிறந்த குறுந்தூர மெய்வல்லுனர் வீரர் ஒருவரை உருவாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<