மாலிங்கவின் எதிர்காலம் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு

2191

முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவின் திறமையை பார்த்து  அவர் இணைக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர் காமினி விக்ரமசிங்க வாக்குறுதி அளித்துள்ளார். அதே போன்று லஹிரு திரிமான்னவை இலங்கை அணிக்கு சேர்ப்பது குறித்தும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில் அந்த தொடர் குறித்து விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (15) நடத்தியிருந்தது. இதில் லசித் மாலிங்கவுக்கு இலங்கை அணியில் இடம் மறுக்கப்படுவது குறித்து ஊடகவியலாளர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பினர்.

உலகக் கிண்ண இலங்கை அணியில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க

கிரிக்கெட் ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகியுள்ள ஆரம்ப துடுப்பாட்ட…

இது குறித்து தேர்வுக் குழு உறுப்பினர் விக்ரமசிங்க கூறியதாவது,

”லசித் மாலிங்கவின் பிரச்சினையில் நாம் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம். இம்முறை டி-20 தொடரில் விளையாட லசித் மாலிங்கவுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறோம். அந்த தொடரில் அவரது ஆட்டத்தை பார்த்து நாம் முடிவொன்றுக்கு வருவோம்” என்று அவர் உறுதி அளித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் மாகாண மட்டத்திலான SLC டி-20 லீக் தொடர் எதிர்வரும் ஆக்ஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நான்கு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லசித் மாலிங்க தொடர்பில் இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவும் இந்த ஊடக சந்திப்பில் இதேபோன்ற ஒரு பதிலையே அளித்தார்.

”இலங்கை அணிக்கு திரும்புவதற்கு ஏனைய வீரர்களுக்கு இருக்கும் அதே அளவு வாய்ப்பு லசித் மாலிங்கவுக்கும் உள்ளது. அவர் உள்ளூர் போட்டிகளுக்கு வந்து போட்டிகளில் ஆடினால் ஏனைய வீரர்கள் போன்று அவரது திறமையின் அடிப்படையில் அணியின் தேவைக்கு அமைய அவரை அணிக்கு தேர்வு செய்வதா இல்லையா என்பதை தேர்வுக் குழுவினரினால் தீர்மானிக்க முடியும்” என்று ஹதுருசிங்க குறிப்பிட்டார். எனினும் இதேபோன்ற கருத்தை ஹதுருசிங்க தொடர்ச்சியாக கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் மாலிங்க உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளிலும் போதுமான அளவில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். அவர் இலங்கை அணிக்கு கடைசியாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதமே விளையாடினார்.

இதனிடையே இலங்கை அணியில் இடம்பெற தொடர்ந்து போராடும் அனுபவ துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன தொடர்பிலும் இலங்கை கிரிக்கெட் சபை தலைமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

குறிப்பாக நடந்து முடிந்த தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிரான இலங்கை வளர்ந்துவரும் அணியிலும் லஹிரு திரிமான்னவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அவர் கடந்த ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் இடம்பெற்ற இலங்கை A அணியில் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் அணித் தலைவராக பங்குபற்றி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்களுடன் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றார்.

சகலதுறை ஆட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தனன்ஜய டி சில்வா

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் ஒருமாத காலமாக நடைபெற்று…

”லஹிரு திரிமான்ன பங்ளாதேஷ் தொடரில் சிறப்பாக செயற்பட்டார். என்றபோது அவரை ஒரேயடியாக தேசிய அணியில் இணைக்க முடியாமல் போனாலும் அவரை அணியில் எவ்வாறு இணைப்பது என்பதை அவதானித்து அவருக்கும் நியாயமான இடத்தை கொடுப்போம்” என்று தேர்வுக் குழு உறுப்பினர் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

”சில நேரங்களில் எத்தனை சிறப்பாக செயற்பட்டாலும் தேசிய அணியில் இடம் இல்லாதபோது அந்த இடத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். அது நியாயமற்றது என்று சிலர் வாதிட முடியும். ஆனால் அந்த சந்தர்ப்பம் வரும் வரை எமக்கு பார்த்திருக்க வேண்டி ஏற்படும். திரிமான்ன எமது பட்டியலில் இல்லாமல் இல்லை. அவர் எமது பட்டியலில் உயரத்திலேயே இருக்கிறார்” என்று விக்ரமசிங்க கூறினார்.

இதேவேளை வீரர்களுக்கு தமது இடத்தில் தம்மை நிலைப்படுத்துவற்கு போதிய சந்தர்ப்பத்தை வழங்குவதாக இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் குறிப்பிட்டார். தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணி 3-2 என தோல்வியை சந்தித்தபோதும் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று திறமையை வெளிப்படுத்த முடிந்தது.

இதில் சிறப்பாக துடுப்பெடுத்தாடக் கூடியவரான தசுன் ஷானக்கவுக்கு மத்திய பின்வரிசையிலேயே இடம் கிடைத்தது. அவரை மேலும் முன் வரிசையில் களமிறக்கலாம் என்ற கேள்வியும் மெதிவ்ஸிடம் எழுப்பப்பட்டது.

”போட்டிகளில் தோற்க தோற்க போட்டிகளுக்கு போட்டி மாற்றங்களை கொண்டுவர நாம் எதிர்பார்க்கவில்லை. வீரர் ஒருவருக்கு அவரது இடத்தில் போதுமான அளவு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதையே எப்போதும் பேசி வருகிறோம்.

ஆம், நாம் மூன்று போட்டிகளில் தோற்றோம். தனஞ்சய டி சில்வாவும் ஆறாவது இடத்திலேயே துடுப்பெடுத்தாடினார். சந்தர்ப்பம் கொடுக்க முடியுமான இடத்தில் தான் கொடுக்கிறோம். அணியின் ஒருங்கிணைப்பின்படி எல்லோருக்கும் அவர்கள் ஆடும் சிறந்த இடம் அல்லது தேவையான இடத்தில் ஆட முடியாமல் போகும்.

எனவே, தசுன் ஷானக்க தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் உச்ச பலனை பெற்றார்” என்று மெதிவ்ஸ் குறிப்பிட்டார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க