உலகக்கிண்ணம் பயணிக்கும் மீனவ தந்தையின் மகன் ; டில்ஷான் மதுசங்கவின் கதை!

Sri Lanka Cricket

1489
 

இலங்கையில் மென்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கு பஞ்சமில்லை.   மென்பந்து கிரிக்கெட்டுக்கும், கடினப்பந்து கிரிக்கெட்டுக்கும் இடையில் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.

மென்பந்து கிரிக்கெட்டை நினைத்தவுடன் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், கடினப்பந்து என கூறப்படும் தொழில்முறை கிரிக்கெட்டை இலங்கையில் விளையாடுவதென்பது இலகுவான விடமல்ல.

உலகத்தரமான வீரர்கள் இல்லை! ; இலங்கை கிண்ணத்தை வென்றது எப்படி?

திறமை இருந்தால் தொழில்முறை கிரிக்கெட்டில் ஜொலிக்கமுடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தொழில்முறை கிரிக்கெட்டுக்கு வருவதற்கு அன்றாட தேவைக்காக போராடிவரும் சாதாரண ஒருவரின் மகனோ, மகளோ வருவது ஆயிரத்தில் ஒருவர்தான்.

ஆசியக்கிண்ணத்தில் விராட் கோஹ்லியை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச்செய்து மைதானத்தை சுற்றி ஓடிய 22 வயது இளைஞன் டில்ஷான் மதுசங்க பெருமைக்காக ஓடுகிறான் என நம்மில் பலரும் நினைத்திருக்கலாம். ஏன்? நானும் கூட அதில் ஒருவராக இருந்திருக்கலாம்.

ஆனால் டில்ஷான் மதுசங்கவின் ஓட்டத்துக்கு காரணம் அதுவல்ல. சாதாரண பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒருவனுக்கு தன்னுடைய வாழ்க்கையின் கனவாகவும், இலட்சியமாகவும் இருந்த ஒரே விடயம், ஒரு நொடியில் கையருகே கிடைக்கும்போது இருக்கும் பூரிப்பும், உற்சாகத்தையும் வார்த்தைகளால் கூறமுடியாது.

டில்ஷான் மதுசங்க… இலங்கையின் தென் பிராந்தியத்தின் ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 26 கிலோமீற்றர் தூரம் கொண்ட கடற்கரை கிரமமான ஹுங்கமவில் பிறந்து வளர்ந்தவர்.

இவரின் தந்தை மீனவர். தாய் தொழில் புரியவில்லை. இரண்டு சகோதரர்கள். டில்ஷான் மதுசங்க வீட்டுக்கு இரண்டாவது பிள்ளை. ஹுங்கம விஜபா தேசிய கல்லூரி எனும் பின்தங்கிய பாடசாலையொன்றில் கல்வியை ஆரம்பித்த இவருக்கு பாடசாலையில் நடைபெற்ற பெரும் சமர் போட்டியொன்றை பார்த்து கிரிக்கெட் ஆடவேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டது.

கல்வியை ஆரம்பித்த பாடசாலையில் 15 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய இவர், அணித்தலைவராகவும் செயற்பட்டார். ஹுங்கம விஜபா தேசிய கல்லூரியில் எதிர்பார்த்தளவு கிரிக்கெட் என்பது இலகுவாக விளையாடக்கூடிய விளையாட்டாக இருக்கவில்லை.

பாடசாலையானது கிரிக்கெட்டை மெழுகேற்ற நினைத்தாலும், அதற்கான வசதிகளும், பணமும் அவர்களிடத்தில் இல்லை. அணியின் வீரர்கள் அனைவருக்கும் சேர்த்து 3, 4 துடுப்பாட்ட மட்டைகளும், 3 ஜோடி பாதுகாப்பு கவசங்களுமே இருந்தன. பயிற்சிக்கு, போட்டியில் பயன்படுத்திய பழைய பந்துகள் மாத்திரமே இருந்தன. போட்டிக்கு செல்ல வீரர்கள் அனைவரிடமும் பணம் சேர்க்கவேண்டும்.

தந்தைக்கு கிரிக்கெட் பிடிக்காது. தாயின் அரவணைப்பில் கிரிக்கெட் ஆடினாலும், செலவுகளுக்கான பணம் இல்லை. தன்னுடைய 15 வயதில் கடினப்பந்தை விடவேண்டிய கட்டாயம். வழியில்லாமல் கடினப்பந்து கிரிக்கெட்டிலிருந்து வெளியேறிய மதுசஷங்கவை, இருகரம் கூப்பி வரவேற்றது மென்பந்து கிரிக்கெட்.

மென்பந்து கிரிக்கெட்டை விளையாட ஆரம்பித்த சில நாட்களில், மதுசங்கவின் வேகப்பந்துவீச்சு கவனத்தை ஈர்க்க, தன்னுடைய பிரதேசத்தில் சிறந்த மென்பந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக மாறத்தொடங்கினார்.

பாடசாலை கிரிக்கெட்டின் போது, மாவட்ட அணிக்காக விளையாடியிருந்த டில்ஷான் மதுசங்கவுக்கு, கிரிக்கெட்டிலிருந்து வெளியேறிய பின்னரும் மாவட்ட பயிற்றுவிப்பாளர் மஞ்சுல கருணாரத்னவுடன் இணைப்பு இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவர் ஏற்பாடு செய்த பயிற்சி முகாம்களில் மதுசங்க பங்கேற்றிருந்தாலும், முற்றுமுழுதாக மென்பந்து போட்டித்தொடர்களில் கவனம் செலுத்தியதை எமது இணையத்தளத்தின் செவ்வியில்கூட குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் 19 வயதின் கீழ் அணியின் பயிற்சிக்கு வருவதற்கு முன்னர், முற்றுமுழுதாக மென்பந்து கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடினேன். வார இறுதி நாட்களில் மென்பந்து தொடர்களுக்கு சென்றால், இரவு பகலாக தொடர்களில் விளையாடிவிட்டு, அடுத்த நாள் மாலையில் வீட்டுக்கு வருவேன்.”

முழுமையான மென்பந்து கிரிக்கெட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட டில்ஷான் மதுசங்கவுக்கான முதல் வாய்ப்பை மாவட்ட பயிற்றுவிப்பாளர் மஞ்சுல கருணாரத்ன ஏற்படுத்தினார். மாகாண அணிக்கான வீரர்கள் தெரிவுக்கான மாவட்ட ரீதியிலான போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க, 2 போட்டிகளில் ஒரு 5 விக்கெட் குவிப்பு அடங்கலாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இவ்வாறு சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியும் டில்ஷான் மதுசங்கவுக்கு மாகாண அணியில் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. குறித்த அந்த நாளை “என்னுடைய வாழ்வில் கிரிக்கெட்டால் இவ்வளவு மனமுடைந்த நாள் ஒன்று இல்லை” என டில்ஷான் மதுசங்க கூறியிருந்தார்.

எனினும் மஞ்சுல கருணாரத்ன 19 வயதின் கீழ் மாகாண அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்க, 2 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மதுசங்க. இதனைத்தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை. மீண்டும் மென்பந்து விளையாடிய டில்ஷானுக்கு, சுமார் ஒருவருடத்துக்கு பின்னர் மஞ்சுல கருணாரத்னவிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு.

இலங்கை மற்றும் இந்திய 19 வயதின் கீழ் அணிகள் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் போட்டிகளில் விளையாடவுள்ளன. அதற்கான வலைப்பந்துவீச்சாளராக வரும்படி மஞ்சுல கருணாரத்ன கூறினார். ஆனால், அங்கு பந்துவீச செல்வதற்கான சப்பாத்து ஜோடிகள் மதுசங்கவிடம் இருக்கவில்லை.

ஆனால் மென்பந்து போட்டிகளில் விளையாடி சேர்த்துவைத்த கொஞ்சப்பணம் மதுசங்கவிடம் இருந்தது. அதிர்ஷடவசமாக மென்பந்து போட்டிகளில் மதுசங்கவுடன் விளையாடிய நண்பர்களுக்கு, அவருடைய திறமையின் மீது நம்பிக்கை இருந்ததுடன், மதுசங்க மென்பந்துடன் நிற்கக்கூடியவன் இல்லை என்பதை உணர்ந்திருந்தனர். எனவே, அவர்களிடம் உள்ள பணத்தையும் கொடுக்க, புதிய சப்பாத்து ஜோடியுடன் வலைப்பந்துவீச்சாளராக சென்றார்.

காலையில் இந்திய அணியின் பயிற்சி. பகலில் இலங்கை அணியின் பயிற்சி. காலையில் இந்திய அணிக்கு பந்துவீசிய போது, சப்பாத்தின் அளவு சிறியதாக இருந்தால், காலில் வலியை உணர்ந்த இவர், தனக்கு பின்னேர வகுப்பு இருப்பதாகவும், அதனால் வீட்டுக்கு செல்லவேண்டும் எனவும் மஞ்சுல கருணாரத்னவிடம் பொய் கூறினார். ஆனால், அவர் இலங்கை அணிக்கு பந்துவீசவேண்டும் என கட்டாயப்படுத்தினார்.

பயிற்றுவிப்பாளரின் கட்டளையை ஏற்றுக்கொண்டு இலங்கை அணிக்கு மதுசங்க பந்துவீசினார். அப்போது இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த சமிந்த வாஸ், மதுசங்கவின் பந்துவீச்சை கண்டு வியந்து, மதுசங்கவின் தொலைபேசி எண்ணை வாங்கிச்சென்றார்.

சில நாட்கள் கடந்தன… சமிந்த வாஸிடமிருந்து டில்ஷான் மதுசங்கவுக்கு அழைப்பு… 19 வயதின் கீழ் அணியின் பயிற்சிக்காக வருமாறு அழைத்தார். டில்ஷான் மதுசங்கவின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. காத்திருந்த வாய்ப்பு கையருகே வந்தது. கொழும்பில் வந்து பயிற்சிகளில் பந்துவீசிய மதுசங்க, அனைவரதும் கவனத்தை ஈர்த்தார். 19 வயதின் கீழ் அணியின் முதல் பதினொருவரிலும் இடம்பிடித்தார்.

பதினொருவரில் இடம்பிடித்தமை மாத்திரமின்றி 19 வயதின் கீழ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக தன்னை மாற்றிக்கொண்ட இவர், இலங்கை வளர்ந்துவரும் அணியுடன் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மென்பந்தில் தன்னுடைய கிரிக்கெட்டை ஆரம்பித்ததால், அதேபோன்று கடினப்பந்திலும் பந்துவீசிய இவருக்கு, பந்துகளை ஸ்விங் செய்யவும், எவ்வாறு பந்துவீசவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தவர் சமிந்த வாஸ். அவரிடம் கற்றுக்கொண்டேன் என்பதை பல இடங்களிலும் டில்ஷான் மதுசங்க பகிரங்கமாக கூறத்தவறவில்லை.

இலங்கை 19 வயதின் கீழ் அணியில் பிரகாசித்த பின்னர், உள்ளூர் போட்டிகளில் மற்றும் ஏ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிவந்த டில்ஷான் மதுசங்கவுக்கு தேசிய அணியின் வாய்ப்பு வெகுதூரத்தில் இருக்கவில்லை. ஆனால், அவருடைய உபாதைகள் கேள்விக்குறியாக மாறியிருந்தன.

ஆனால், ஆசியக்கிண்ணத்தொடருக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற அழைப்பு T20 தொடரில் அற்புதமாக பந்துவீசினார். இவருடைய பந்துவீச்சு சமுகவலைத்தளங்களில் வைரலானது. துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, லஹிரு குமார மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோரின் உபாதைகள் இவருக்கு வாய்ப்பானது. தேர்வாளர்கள் மதுசங்கவை நோக்கி கையசைத்தனர்.

நேரடியாக ஆசியக்கிண்ணத்துக்கான குழாத்தில் இடம்பெற்றார். முதல் போட்டியில் எதிர்பார்த்த பிரகாசிப்பு இல்லை. இரண்டாவது போட்டியில் எதிரணிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.  இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விராட் கோஹ்லியின் விக்கெட்டினை வீழ்த்தி அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்த இவர், புதிய பந்து மற்றும் பழைய பந்து என இரண்டிலும் தன்னுடைய திறமையை சர்வதேசத்துக்கு காட்டினார்.

சர்வதேசத்தில் உற்றுநோக்கப்பட்ட டில்ஷான் மதுசங்கவுக்கு T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமா? தற்போது தென்னாபிரிக்காவில் முதன்முறையாக நடைபெறவுள்ள SAT20 லீக்கில் விளையாடவுள்ள இலங்கை அணியின் ஒரேயொரு வேகப்பந்துவீச்சாளராக இடம்பிடித்திருக்கிறார்.

கிரிக்கெட்டை பிடிக்காத! கிரிக்கெட்டை பார்க்காத தந்தையை டில்ஷான் மதுசங்க கிரிக்கெட் பார்க்க வைத்தார். அவர் விளையாடுவதை சூரியவெவ மைதானத்தில் தந்தை பார்வையிட்டார் என்பதை பூரித்து மதுசங்க கூறிக்கொண்டார். இலங்கையின் ஏதோ ஒரு மூளையிலிருந்து, எந்தவித வசதி வாய்ப்புகளும் இல்லாமல், அற்புத திறமையும், கொஞ்சம் அதிரஷ்டத்துடனும் தேசிய அணியில் பயணத்தை ஆரம்பித்துள்ள டில்ஷான் மதுசங்க சர்வதேசத்தின் நட்சத்திர வீரராக மாறி, நாட்டில் கிரிக்கெட் நாமத்தை மேலும் உயரச்செய்யவேண்டும் என்பதே எம் அனைவரும் அவா!

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<