ஜனாதிபதிக் கிண்ண அரையிறுதிக்குள் ஜாவா லேன் : செளண்டர்சிடம் கோட்டை விட்ட மொறகஸ்முல்ல

154
City league President cup

சிடி கால்பந்து லீக் ஜனாதிபதிக் கிண்ண தொடரின் இரண்டாவது வாரப் போட்டிகளில் முதல் வாரப் போட்டியிலும் வெற்றி பெற்ற ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் மற்றும் தமது முதல் போட்டியை சந்தித்த சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழக அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் எதிர் குரே விளையாட்டுக் கழகம்

கடந்த போட்டியில் பிரபல ரினௌன் அணியை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஜாவா லேன், இப்போட்டியில் மொஹமட் அப்துல்லாவின் ஹட்ரிக் கோலின் உதவியுடன் 6-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ரினௌன், கொழும்பு அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மொறகஸ்முல்ல மற்றும் ஜாவா லேன்

ஜாவா லேன் அணியின் முதல் கோல் இம்மானுவெல் உஷென்ன மூலம் 17ஆவது நிமிடத்தில் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கோல்கள் இன்றி இரு தரப்பினராலும் ஆட்டம் கொண்டு செல்லப்பட்டது.

எனினும், முதல் பாதியின் இறுதி 5 நிமிடங்களில் ஜாவா லேன் அணிக்கு அடுத்தடுத்து இரண்டு கோல்கள் கிடைக்கப் பெற்றன. 42ஆவது நிமிடத்தில் அலீம் மூலமும், முதல் பாதியின் மேலதிக நேரத்தில் அப்துல்லா மூலமும் அவ்வணி கோல்களைப் பெற்றுக்கொண்டது.

முதல் பாதி: ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 03 – 00 குரே விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆரம்பமாகியவுடனேயே குரே அணிக்கான முதல் கோல் நிலன்க ஜயவீர மூலம் பெறப்பட்டது. எனினும், நடுவரால் ஓப் சைட் என தெரிவிக்கப்பட்டு அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

எனினும் அதற்கு அடுத்த நிமிடம் அப்துல்லா தனது இரண்டாவது கோலைப் பெற்றார். அதற்கு பதில் கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் நிலன்க மூலம் குரே அணிக்கான முதல் கோல் பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முதல் பாதியைப் போன்றே நீண்ட நேரத்திற்கு கோல் பெறுவதற்கான இடைவெளி காணப்பட்டது. இந்நிலையில் போட்டியின் மாற்று வீரராக மைதானத்தினுள் வந்த 16 வயதின் கீழ் தேசிய அணி வீரர் சபீர் மூலம் 85 ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் அணிக்கான 5ஆவது கோல் பெறப்பட்டது.

பின்னர், ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது, அப்துல்லா தனது ஹட்ரிக் கோலைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின்மூலம் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் சுற்றுத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

முழு நேரம்: ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 06 – 01 குரே விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – இம்மானுவெல் உஷென்ன 17’, மொஹமட் அலீம் 42’, மொஹமட் அப்துல்லா 45+2’, 47’, 90, மொஹமட் சபீர் 58’

குரே விளையாட்டுக் கழகம் – நிலன்க ஜயவீர 50’

2018ஆம் ஆண்டிற்கான 23 வயதிற்கு உட்பட்ட ஆசிய கால்பந்து தகுதிகாண் போட்டித் தொடரிற்கு இலங்கை தகுதி

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்

தொடரில் குழு B இல் அங்கம் வகிக்கும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் பிரபல வீரர் கிறிஷான்த அபேசேகரவின் ஆச்சரியமான ப்ரீ கிக் மூலம் சௌண்டர்ஸ் அணி மொறகஸ்முல்ல அணியை வெற்றி கொண்டது.

ஏற்கனவே, இடம்பெற்ற முதல் போட்டியில் டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் சம்பியனான கொழும்பு கால்பந்து கழகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த மொறகஸ்முல்ல அணி, செண்டர்ஸ் அணிக்கும் அதிர்ச்சி கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது.

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில், ஆரம்பத்தில் சவுன்தர்ராஜ் நிரேஷ் மூலம் சௌண்டர்ஸ் அணிக்கு முதல் கோலுக்கான சிறந்த வாய்ப்பு கிடைத்தது. எனினும், அவர் வேகமாக உதைந்த பந்து கம்பங்களுக்கு வெளியால் சென்றது.

எனினும், போட்டியின் 33ஆவது நிமிடத்தில் சௌண்டர்ஸ் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது அவர்களுக்கான முதல் கோல் கிடைத்தது. இதன்போது, நீண்ட தூரத்தில் இருந்து கிறிஷான்த அபேசேகரவினால் உதையப்பட்ட பந்து, கோலின் மேல் கம்பத்தில் பட்டு கோலுக்குள் சென்றது.

இவரது கோல் பெறப்பட்ட விதத்தினைக் கண்டு ஆச்சரியமடைந்த சௌண்டர்ஸ் ரசிகர்கள் தமது மகிச்சியை சிறந்த முறையில் கொண்டாடினர்.

முதல் பாதி: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 01 – 00 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழம்

எனினும் இரண்டாவது பாதியில் சிறந்த வாய்ப்புக்களைப் பெற்ற சௌண்டர்ஸ் கழக அணியினருக்கு அவற்றை முழுமையாக நிறைவு செய்துகொள்ள முடியாமல் போனது. குறிப்பாக ரவிந்து ருக்ஷானின் சிறந்த தடுப்புக்கள் செளண்டர்ஸ் அணியின் வாய்ப்புக்களைத் தடுத்தன.

மறு முனையில் இளம் வீரர் டிலான் மதுஷங்கவின் அதிரடி ஆட்டம், சௌண்டர்ஸ் அணியின் பின்கள வீரர்களுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது.

இரண்டாவது பாதியில் மொறகஸ்முல்ல வீரர்களான மதுஷங்க, பிரியவன்ச ஆகியோருக்கும், சௌண்டர்ஸ் அணியின் சனோஜ் சமீரவுக்கும் சிறந்த வாய்ப்புகள் கிடைத்தும், அவர்களால் கோல் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

போட்டியில் முறையற்ற விதத்தில் ஆடியமைப்பாக இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்ற பிரியவன்ச மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எனினும் இறுதி வரை ஆட்டத்தில் ஒரு கோல் மாத்திரமே பெறப்பட்டது.

முழு நேரம்: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 01 – 00 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – கிறிஷான்த அபேசேகர 33’

தண்ட அட்டைகள்

மஞ்சள் அட்டை

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – ஜனித் பியுமல் 68’, S.M. பிரியதர்ஷன 78’

மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம் – S. சமன்த 25’, பிரியவன்ச 27’, மதுஷன்க 77’

சிவப்பு அட்டை

மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம் – பிரியவன்ச