உலகத்தரமான வீரர்கள் இல்லை! ; இலங்கை கிண்ணத்தை வென்றது எப்படி?

Asia Cup 2022

293

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக்கிண்ண பயணமும், வெற்றியும் ஒவ்வொரு இலங்கை ரசிகர்களின் மனதில் மறக்கமுடியாத மகிழ்ச்சியையும், வெற்றியின் உற்சாகத்தையும் தந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் தொடரை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொடர் மாற்றப்பட்டது. வீரர்களிடத்தில் எதிர்பார்ப்பிருந்தபோதும், ரசிகர்களிடம் இலங்கை கிண்ணம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக இருந்ததாக தெரியவில்லை.

பந்துவீச்சளார்களை பதம்பார்த்த இலங்கையின் அற்புத வெற்றிகள்!

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்ற எண்ணம் ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் ஊரியிருந்த நிலையில், கிண்ணத்தை வென்று ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தசுன் ஷானக தலைமையிலான இளம் இலங்கை அணி.

முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வி. 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த இலங்கை அணி, பந்துவீச்சிலும் தடுமாறி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

படுதோல்வியிலிருந்து மீண்டுவருவதற்கும், சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெறுவதற்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் கட்டாய வெற்றியொன்றினை பெறவேண்டிய நிலை. முதல் சுற்றில் வெளியேறினால் அணியின் இத்தனை கால முயற்சியும், திட்டங்களும், எதிர்பார்ப்புகளும், முன்னேற்றமும் ஒட்டுமொத்தமாக சரிந்துவிடும் என்ற அதீத அழுத்தம் வீரர்களிடத்தில் அதிகரித்தது.

ஆனால், போட்டிக்கு முன்னர் இருந்த ஒட்டுமொத்த அழுத்தத்தையும் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற ஒரே ஒரு ஊடகசந்திப்பு அதீத உத்வேகமாகவும், கிண்ணத்தை வெல்வதற்கு மிகப்பெரிய உந்துகோளாகவும் மிகப்பெரிய நம்பிக்கையாகவும் மாறியது.

பங்களாதேஷ் போட்டிக்கு முன்னர் தசுன் ஷானக ஆப்கானிஸ்தானை ஒப்பிடும்போது, பங்களாதேஷ் அணியில் முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் சகீப் அல் ஹஸன் மாத்திரம்தான் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள். எனவே, அவர்களை வீழ்த்துவது இலகுவானது என்ற கருத்தொன்றை பதிவுசெய்தார்.

இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணியின் பணிப்பாளர் கலேட் மஹ்மூட், எமது அணியிலாவது இரண்டு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இலங்கை அணியில் அப்படி யாரையும் நாம் பார்க்கவில்லை என கூற, இந்த கருத்து வைரலானது.

சமுகவலைத்தளங்களில் ரசிகர்களிடம் மாத்திரமின்றி, மஹேல ஜயவர்தன போன்ற முன்னாள் வீரர்கள் இலங்கை வீரர்கள் தாம் யார் என காட்டவேண்டிய தருணம் இது என்ற கருத்துக்களுடன் இலங்கை வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க தொடங்கினர். கலேட் மஹ்மூட்டின் கருத்து இலங்கை வீரர்களையும் உற்சாகமடையவைக்க தவறவில்லை.

இந்த உற்சாகத்துடன் களமிறங்கிய இலங்கை அணி, டுபாய் கிரிக்கெட் மைதானத்தில் அதிகூடிய வெற்றியிலக்கை (184/8) அடைந்து சாதனை வெற்றியை பதிவுசெய்ததுடன், குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ மற்றும் இறுதியில் 2 பௌண்டரிகளை விளாசி அசித பெர்னாண்டோ என பங்களாதேஷிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது இலங்கை.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான வெற்றியுடன் சுபர் 4 சுற்றில் காலடி வைத்தது இலங்கை. ஏற்கனவே படுதோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தானுடன் முதல் போட்டி, அடுத்தடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற ஐசிசி T20 தரவரிசையில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ள அணிகளுக்கு எதிரான போட்டிகள்.

சுபர் 4 சுற்றுக்கு முன்னரும் பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லை. இலங்கை அணியிடத்திலும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருந்ததே தவிர, கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பு இறுதிப்போட்டியின்போதே வந்திருந்தது என்பதை அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பியால் விஜேதுங்க குறிப்பிட்டிருந்தார்.

எந்த இடத்தில் தோல்வியடைந்தோமோ? அதே இடத்தில் வெற்றிபெறுவதே சிறந்த அணிக்கு அழகு என்பதை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நிரூபித்தது இலங்கை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான படுதோல்வியை, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சமன்செய்தது மாத்திரமின்றி, அந்த அணிக்கு எதிராகவும், ஷார்ஜா மைதானத்திலும் அதிகூடிய வெற்றியிலக்கை (176/5) அடைந்து சாதனை படைத்தது.

ஆப்கானிஸ்தான் போட்டியை பொருத்தவரை எந்தவொரு தனி வீரரின் பிரகாசிப்புகள் வெற்றியை பெற்றுக்கொடுக்கவில்லை. பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க, அசித பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷனவுடன் துடுப்பாட்டத்தில் பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினர்.

ரஷீட் கானின் முதல் ஓவரில் குசல் மெண்டிஸ் இரண்டு சிக்ஸர்களை அடித்து, இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை மேலும் பலமாகின்றது என்ற அறிவிப்பை வெளிப்படுத்த, ஆப்கானிஸ்தான் போட்டியிலிருந்து இலங்கை அணியின் நம்பிக்கை உச்சத்தை தொட்டது.

ஆப்கானிஸ்தான் போட்டியின் பின்னர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கு ஒரு வெற்றி இலங்கைக்கு தேவை. அதுவும் சர்வதேச T20I தவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணியை 9வது இடத்திலிருக்கும் இலங்கை அணி எதிர்கொள்ள தயாராகியது.

பலமான இந்திய அணியை எதிர்கொள்வதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டின் கணிப்பின்படி இலங்கை வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. இந்திய அணியில் பலம் பொருந்திய நட்சத்திர வீரர்கள். இலங்கை அணியில் இளம் வீரர்கள். இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுத்துறையின் பந்துவீச்சு அனுபவம் பூஜ்ஜியத்தில் தொடங்கியிருந்தது.

இலங்கை அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் மிகச்சிறந்த ஓட்ட இலக்கை அடைந்து வெற்றியீட்டியதால், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடினால் இலங்கை அணியின் வெற்றிக்கு சிறிதளவு வாய்ப்புகள் கோடிட்டு விடப்பட்டிருந்தன.

இலங்கை கிரிக்கெட்டை பொருத்தவரை எந்த இடத்தில் அவர்களுக்கு எதிராக முழுமையான கணிப்புகள் இருக்கின்றதோ! அந்த இடத்தில் வெற்றிபெற்று ஆச்சரியம் அளிப்பதே வழமை. அதனை 2019ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி, தென்னாபிரிக்காவில் குசல் பெரேராவின் அற்புத சதத்தின் உதவியுடன் டெஸ்ட் வெற்றி போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.

அந்தவகையில் பலமான இந்திய அணிக்கு எதிராக தங்களுடைய இரண்டாவது சுபர் 4 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்து தங்களுடைய இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிசெய்திக்கொண்டது. குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட விதமும், பானுக ராஜபக்ஷ மற்றும் தசுன் ஷானக ஆகியோர் ஆட்டத்தை நிறைவுசெய்த விதமும் இலகுவில் மறக்கக்கூடியவை அல்ல.

இப்படி துடுப்பாட்ட வீரர்களின் பிரகாசிப்பு ஒரு பக்கமிருக்க டில்ஷான் மதுசங்க, விராட் கோஹ்லியை ஆட்டமிழக்கச்செய்த பந்தும், அவருடைய கடைசி ஓவர்களும் அவருடைய திறமையை மேலும் வெளிச்சமிட்டு காட்டியது.

இந்திய அணிக்கு எதிரான வெற்றியின் பின்னர் இலங்கை அணி கிண்ணத்தை வெல்வதற்கான நம்பிக்கை பிறந்தது. பாகிஸ்தானிடம், ஆப்கானிஸ்தான் பெற்ற தோல்வியின் பின்னர் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவது உறுதியாகியது.

இறுதிப்போட்டிக்கு முன்னர் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் சுபர் 4 போட்டியில் மோதின. அணிகளில் சில மாற்றங்கள். இலங்கை அணியில் தனன்ஜய டி சில்வாவுடன், பிரமோத் மதுசானுக்கு T20I அறிமுகம் கிடைத்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்றும், முதலில் துடுப்பெடுத்தாட தயாராகாத இலங்கை அணி, தொடர் வெற்றிகளை நோக்கி சென்றது.

அதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான சுபர் 4 சுற்றில் இலகுவான வெற்றியை பெற்று, 4 வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு தயாராகியது. மறுபக்கம் பாகிஸ்தான் தோல்வியடைந்தாலும் அவர்கள் பலமான அணியென்பதை இலங்கை அணி மறக்கவில்லை.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெறும் அணி களத்தடுப்பை தேர்வுசெய்யும் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தசுன் ஷானக ஏன் சுபர் 4 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்கவில்லை? என்ற விடயமும் விமர்சனங்களாக எழும்பின.

விமர்சனங்களுக்கு ஏற்றவாறு இறுதிப்போட்டியில் நாணய சுழற்சி பாகிஸ்தான் பக்கம். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள். பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சுக்கு தடுமாறியது இலங்கை. தசுன் ஷானகவின் மீது எழுந்த விமர்சனங்கள் உண்மையாகுமா? அல்ல இலங்கை அணி மீண்டு பதிலடி கொடுக்குமா? என்ற கேள்விகள் சமுவலைத்தளங்களில் ஓடிப்பாய்ந்தன.

ஆனால் பானுக ராஜபக்ஷவின் அற்புத இன்னிங்ஸ் (71 ஓட்டங்கள்) மற்றும் ஹஸரங்கவின் வேகமான ஓட்டக்குவிப்பு (36 ஓட்டங்கள்) என்பன இலங்கை அணியை 58/5 என்ற நிலையிலிருந்து 170/6 என்ற ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்துச்சென்றது. இதில் பானுக ராஜபக்ஷ நசீம் ஷாவின் இறுதிப்பந்தில் விளாசிய சிக்ஸர் இப்போதும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள் முன் வந்துசெல்கின்றன.

உளவியல் ரீதியாக பாகிஸ்தானுக்கு ஓட்டங்களால் அழுத்தத்தை கொடுத்தது இலங்கை. ஓட்டங்களின் அழுத்தம் மேலோங்க ஏனைய விடயங்களை பிரமோத் மதுசான் (4 விக்கெட்டுகள்), வனிந்து ஹஸரங்க (3 விக்கெட்டுகள்) ஆகியோர் பந்துவீச்சில் பார்த்துக்கொள்ள 6வது தடவையாக கிண்ணத்தை தமதாக்கியது இலங்கை.

உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை. நாணய சுழற்சி போட்டியின் வெற்றியை தீர்மானிக்கவில்லை. கடந்தகால பிரகாசிப்புகளுக்கும், இன்றைய நாளின் வெற்றிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இவை அனைத்துமே இலங்கை அணிக்கு வெற்றியையும் கொடுக்கவில்லை.

இலங்கை அணி 8 வருடங்களுக்கு பின்னர் ஆசியக்கிண்ணத்தை வென்றதற்கான காரணம் ஒன்றுதான். வீரர்கள் தனியொருவருக்காக விளையாடவில்லை. அணிக்காக விளையாடினர். ஒருவரின் பிரகாசிப்பை எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் பிரகாசித்தனர். கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாடும் விளையாட்டு. குறிப்பிட்ட 11 பேரின் ஒற்றுமையும், திறமையும்தான் இலங்கை ரசிகர்கள் இன்று கொண்டாடும் ஆசியக்கிண்ணத்தை பெற்றுத்தந்திருக்கிறதே தவிர, உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் எவரும் கிண்ணத்தை வென்றுக்கொடுக்கவில்லை!

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<