நீண்ட இடைவெளிக்குப்பின் தென்னாபிரிக்க ஒருநாள் குழாமில் இடம்பிடித்த கேஷவ் மஹராஜ்

147
Image courtesy : ESPNcricinfo

சுற்றுலா அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச தொடருக்கான சவால் விடுக்கக்கூடிய அளவிலான தென்னாபிரிக்க அணியின் 15 பேர் அடங்கிய ஒருநாள் குழாம் இன்று (26) தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் லிண்டா ஷொண்டியினால் பெயரிடப்பட்டுள்ளது. 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்சமயம் தென்னாபிரிக்க மண்ணில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் தொடரான டி20 சர்வதேச தொடர் தற்சமயம் நடைபெற்றுவருகின்ற நிலையில் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி டி20 சர்வதேச போட்டி இன்று (26) நடைபெறுகின்றது. 

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்டீவ் ஸ்மித்

சுற்றுலா இந்திய – நியூசிலாந்து மற்றும் சுற்றுலா ஜிம்பாப்வே……

இந்நிலையில் குறித்த சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் குழாம் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென்னாபிரிக்க அணியின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெளியிடப்பட்டுள்ள குழாத்தின்படி தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான அணித்தலைவராக தொடர்ந்தும் செயற்படும் வகையில் இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை தொடர்ச்சியான பின்னடைவு காரணமாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் ஓய்வு வழங்கப்பட்டுவந்த துடுப்பாட்ட வீரர் பாப் டு ப்ளெஸிஸ் கடந்த வாரம் தானாகவே முன்வந்து அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர் அவுஸ்திரேலிய தொடருக்கான தென்னாபிரிக்க டி20 குழாமுக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் குழாமில் பாப் டு ப்ளெஸிஸ் இடம்பெறாமை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு டு ப்ளெஸிஸ் இற்கு மேலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்துடன் 21 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள துடுப்பாட்ட வீரர் ரைஸ் வென் டர் டைஸன் மற்றும் 22 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள பந்துவீச்சு சகலதுறை வீரர் டுவைன் பிரிடோரியஸ் ஆகியோருக்கு அவுஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

தென்னாபிரிக்க டெஸ்ட் அணியில் ஒரு முக்கிய சுழற்பந்துவீச்சாளராக இடம்பெற்றுவரும் 30 வயதுடைய கேஷவ் மஹராஜ் கடந்த 2017 மே மாதம் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்று, 2018 ஆகஸ்ட்டில் இலங்கை அணியுடன் இறுதியாக ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் விளையாடியிருந்தார். இந்நிலையில் A தர உள்ளுர் ஒருநாள் போட்டியில் கேஷவ் மஹராஜ் பந்துவீச்சில் கலக்கிவரும் நிலையில் 2018ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஒருநாள் சர்வதேச குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆசிய பதினொருவர் குழாமில் திசர, மாலிங்க

உலக பதினொருவர் அணிக்கும் ஆசிய பதினொருவர் அணிக்கும்……

கடந்த வருடம் பெப்ரவரியில் பாகிஸ்தான் அணியுடன் டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட 23 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரர் ஜெனீமன் மாலன் மற்றும் 33 A தர உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 22 வயதுடைய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் கெயில் வெர்ரெய்ன் ஆகிய வீரர்கள் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

அவுஸ்திரேலிய அணியுடனான டி20 குழாமில் இடம்பெற்றும் உபாதைக்கு முகங்கொடுத்ததன் காரணமாக டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த துடுப்பாட்ட வீரர்களான டெம்பா பவுமா மற்றும் ஹென்ரிச் கிளாஸன் (விக்கெட் காப்பாளர்) ஆகியோர் உபாதையிலிருந்து மீண்டு ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

தென்னாபிரிக்க அணி இறுதியாக விளையாடிய இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த ககிஸோ ரபாடா மீண்டும் ஒருநாள் குழாமிற்கு திரும்பியுள்ளார். அத்துடன் உபாதை காரணமாக இங்கிலாந்துடனான தொடரை இழந்த வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நோட்ஜியா உபாதையிலிருந்து மீண்டு தற்போது டி20 தொடரில் விளையாடிவரும் நிலையில் இறுதியாக கடந்த 2019 மார்ச்சில் இலங்கை அணியுடன் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய நிலையில் தற்போது ஒருநாள் குழாமில் இடம்பிடித்துள்ளார். 

தொடர் டெஸ்ட் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது பங்களாதேஷ்

ஜிம்பாப்வேயுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ்…..

15 பேர் அடங்கிய தென்னாபிரிக்க ஒருநாள் குழாம்

குயின்டன் டி கொக் (அணித்தலைவர்), டெம்பா பவுமா, டேவிட் மில்லர், ககிஸோ ரபாடா, அண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரிஸ் ஷம்ஷி, லுங்கி ங்கிடி, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாஸன், ஜெனீமன் மாலன், ஜொன் ஜொன் ஸ்மட்ஸ், அன்ரிச் நோட்ஜியா, லுதோ சிபம்லா, கேஷவ் மஹராஜ், கெயில் வெர்ரெய்ன் 

ஒருநாள் சர்வதேச தொடர் அட்டவணை.

  • 29 பெப்ரவரி – முதலாவது போட்டி – பார்ல் (பகலிரவு)
  • 4 மார்ச் – இரண்டாவது போட்டி – ப்ளும்பொன்டெய்ன்
  • 7 மார்ச் – மூன்றாவது போட்டி – போட்செப்ஸ்ட்ரூம் 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<