தென்னாபிரிக்க தொடரிலிருந்து வெளியேறும் இந்திய வீரர்!

India vs South Africa 2022

108

தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான குழாத்திலிருந்து இந்திய அணியின் சகலதுறை வீரர் தீபக் ஹூடா நீக்கப்பட்டுள்ளார்.

தீபக் ஹூடாவின் கீழ் முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இந்திய அணியுடன் இவர், திருவானந்தபுரம் செல்லவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

>> அபுதாபி T10 லீக்கில் ஏழு இலங்கையர்கள்

தீபக் ஹூடா இவ்வருடம் இந்திய அணிக்காக அறிமுகமாகியிருந்த போதும், தொடர்ச்சியாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடிவந்தார். இவருடைய வேகமான ஓட்டக்குவிப்பு மற்றும் வலதுகை சுழல் என்பன இந்திய அணியின் கட்டமைப்புக்கு மிகச்சிறந்த விடயமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டது. இதன்காரணமாக T20 உலகக்கிண்ணத் தொடருக்கான குழாத்திலும் இணைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் முன்னணி வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்பிய காரணத்தால், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று T20I போட்டிகளிலும் விளையாடவில்லை. தற்போது உபாதை காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்த வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சமி, பூரண குணமடையாத காரணத்தால் அவரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாடமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தீபக் ஹூடா மற்றும் மொஹமட் சமி ஆகியோருக்கு பதிலாக ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் சபாஷ் அஹ்மட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளபோதும், இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் போட்டி, புதன்கிழமை (28) திருவானந்தபுரத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<