ஓய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுக்கும் இன்டெர்நெஷனல் மாஸ்டர்ஸ் லீக் (IML) T20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியினை இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்கார வழிநடாத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் அன்ட்ரிச் நோர்கியே<<
IML T20 தொடர் கடந்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்த்த போதிலும் அது அவ்வாறு இடம்பெற்றிருக்கவில்லை. விடயங்கள் இவ்வாறு காணப்பட புதிய அறிவிப்பின் அடிப்படையில் இந்த தொடர் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி தொடக்கம் – மார்ச் 16ஆம் திகதி வரை இந்தியாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
IML T20 தொடரானது இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய ஆறு நாடுகளின் முன்னணி கிரிக்கெட் வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படவிருக்கின்றது.
அதன்படி இந்த அணிகளில் குமார் சங்கக்கார இலங்கையை வழிநடாத்தவிருக்கின்றார். இதன் மூலம் இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு மீண்டும் குமார் சங்கக்காரவினை மீண்டும் மைதானத்தில் வீரராக விளையாடுவதனைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
மறுமுனையில் இந்தப் போட்டித் தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக பிரையன் லாராவும், தென்னாபிரிக்க அணியின் தலைவராக ஜேக் கலிஸூம், இங்கிலாந்து அணியின் தலைவராக இயன் மோர்கனும், அவுஸ்திரேலியா அணியின் தலைவராக ஷேன் வோட்சனும் செயற்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>IPL இல் மீண்டும் தலைவராக அவதாரம் எடுக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்<<
IML T20 மாஸ்டர்ஸ் லீக் தொடரின் போட்டிகள் நவி மும்பை, ராஜ்கோட் மற்றும் ராய்பூர் ஆகிய மைதானங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<