IPL இல் மீண்டும் தலைவராக அவதாரம் எடுக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்

Indian Premier League 2025

58
Shreyas Iyer

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 2ஆவது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.

2025ஆம் ஆண்டுக்கான 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவராக யார் என்ற விபரத்தை அந்த அணியின் நிர்வாகம் இன்று (13) அறிவித்துள்ளது.

இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு மூன்றாவது ஐபிஎல் சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். இருப்பினும், ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே அவரை கொல்கத்தா அணி நிர்வாகம் விடுவித்தது.

அதன்பின் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயரின் அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயிக்கப்பட்டது. அந்தவகையில் அவரை ஏலத்தில் எடுப்பதற்காக பல அணிகள் போட்டியிட்ட நிலையில், இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில், இம்முறை ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதனை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொலிவுட் நடிகர் சல்மான் கான் அறிவித்தார். அதன்பின்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களிலும் இந்த அறிவிப்பினை வெளியிட்டது.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், ‘ பஞ்சாப் கிங்ஸ் அணி என் மீது நம்பிக்கை வைத்ததில் நான் பெருமைப்படுகிறேன். பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங்குடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். திறமையான மற்றும் நிரூபிக்கப்பட்ட வீரர்களின் சிறந்த கலவையுடன் எங்களது அணி வலுவாகத் தெரிகிறது. இதனால் இம்முறை ஐபிஎல் தொடரில் எங்கள் அணிக்காக முதல் சம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்காக அணி நிர்வாகம் காட்டிய நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அதன் பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங் மற்றும் தலைமை செயல் அதிகாரி சதிஷ் மேனன் ஆகியோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பொண்டிங்குடன் இணைந்து செயல்பட்ட அனுபவம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு உள்ளது. இருவரது கூட்டணியில் டெல்லி கேபிடல்ஸ் அணி கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது.

இதேவேளை, இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி கிண்ணத் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணி சம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். மேற்கொண்டு சையத் முஷ்டாக் அலி, இரானி கிண்ணத் தொடர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி சம்பியன் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<