சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் அன்ட்ரிச் நோர்கியே

63

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான அன்ட்ரிச் நோர்கியே சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் தொடரில் ஆடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>அவுஸ்திரேலிய – இலங்கை போட்டித் தொடர் அட்டவணையில் மீண்டும் திருத்தம்

கடந்த ஆண்டு நிறைவுக்கு வந்த T20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதிலும் ஆடாது போயிருந்த நோர்கியே – பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்காவுடன் ஆடவிருந்த T20 தொடர் மூலம் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு குறிப்பிட்ட தொடரிலும் விரல் உபாதை ஏற்பட்டிருந்தது.

விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையில் மீண்டும் முதுகு உபாதைக்குள்ளாகியிருக்கும் நோர்கியே அடுத்த மாதம் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலும் பங்கெடுக்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நோர்கியே தொடர்பிலான வைத்திய பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே நோர்கியே சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து விலகுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதேநேரம் நோர்கியே தனக்கு ஏற்பட்டிருக்கும் முதுகு உபாதை காரணமாக புதிய பருவத்திற்கான SA20 லீக் தொடரிலும் தனது அணியான ப்ரேடொரியா கெபிடல்ஸ் அணிக்கு ஆடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

நோர்கியேவின் பிரதியீட்டு வீரர் தொடர்பில் தென்னாபிரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவிக்காத போதிலும் அவரின் இடத்தினை கெரால்ட் கொயேட்சி பூர்த்தி செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தென்னாபிரிக்கா சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி கராச்சியில் வைத்து எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<