இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணியை வைட் வொஷ் செய்த இலங்கை

525
Sri lanka

இலங்கை மற்றும் இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் (Indoor) அணிகளுக்கு இடையிலான இரு தரப்பு தொடரின் இறுதி நாள் டெஸ்ட் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (7) தலவத்துக்கொடையிலுள்ள ஓஸ்டேசியா (Austasia) உள்ளக மைதானத்தில் இடம்பெற்றிருந்தன. இறுதி நாளில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணியை தோற்கடித்த இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி ஆறு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 6-0 என வைட் வொஷ் செய்து கைப்பற்றியிருக்கின்றது.

இங்கிலாந்து எதிர் இலங்கை (5 ஆவது டெஸ்ட் போட்டி)

இப்போட்டியில் 7 ஓட்டங்களால் தோல்வியடைந்த இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணி அவர்களின் ஐந்தாவது தொடர் தோல்வியை இலங்கையிடம் பதிவு செய்திருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கினர்.

இலங்கைத் தரப்புக்கு 22 ஓட்டங்கள் இணைப்பாட்டத்துடன் கோலித்த ஹப்புவராச்சி, கமல் குருப்பு ஜோடி நல்ல ஆரம்பத்தை தந்திருந்தது. இவர்கள் தவிர மத்திய வரிசை, பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் பெறுமதியான முறையில் செயற்பட இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி 16 ஓவர்களுக்கு ஆரோக்கியமான 79 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது. இலங்கை அணி சார்பில் தரிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்கள் பெற மல்ஷான் ரொட்ரிகோ 18 ஓட்டங்களை சேர்த்திருந்தார். இங்கிலாந்து உள்ளக அணியின் பந்துவீச்சு சார்பில் அனீஷ் பட்டேல் ஓட்டமேதுமின்றி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான உள்ளக டெஸ்ட் தொடர் இலங்கை வசம்

இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து உள்ளக அணி ஒரு ஓட்டத்தை மாத்திரம் ஆரம்ப இணைப்பாட்டமாகப் பெற்று மோசமான ஆரம்பம் ஒன்றை வெளிக்காட்டியது. எனினும், சேம் ஸ்டேக்ஸ் ப்ளேக் வன்டேர் லின்டே உடன் இணைந்து 34 ஓட்டங்களை இணைப்பாட்டமாக வழங்கினார். தொடர்ந்து பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்படாத காரணத்தினால் இங்கிலாந்து உள்ளக அணி 72 ஓட்டங்களை மட்டும் பெற்று 7 ஓட்டங்களால் போட்டியில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து உள்ளக அணியின் துடுப்பாட்டத்தில் சேம் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 22 ஓட்டங்களைப் பெற இலங்கைத் தரப்பின் பந்துவீச்சு சார்பாக கிஹான் குணத்திலக்க 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிறப்பாக துடுப்பாடிய இங்கிலாந்தின் சேம் ஸ்டேக்சிற்கு வழங்கப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 79 (16) – தரிந்து மெண்டிஸ் 19, மல்ஷான் ரொட்ரிகோ 18, அனீஷ் பட்டேல் 2/0

இங்கிலாந்து – 72 (16) – சேம் ஸ்டேக்ஸ் 22, கிஹான் குணத்திலக்கக 3/5, தரிந்து மெண்டிஸ் 2/7

முடிவு – இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி 7 ஓட்டங்களால் வெற்றி


இலங்கை எதிர் இங்கிலாந்து (6 ஆவது டெஸ்ட் போட்டி)

இலங்கை மற்றும் இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 28 ஓட்டங்களால் இலங்கை வீழ்த்தியது.

இங்கிலாந்து அணி போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் 18 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுத்தந்தனர். இதனை அடுத்து சேம் ஸ்டேக்ஸ் ப்ளேக் ஜோடி 35 ஓட்டங்களைப் பெற்றுத்தந்தது. எனினும், கடந்த போட்டி போன்று பின்வரிசை வீரர்கள் இங்கிலாந்து அணியில் ஓட்டங்கள் சேர்க்க தடுமாற அவர்களால் 16 ஓவர்களுக்கு 72 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் துஷ்மன்த சமீர சந்தேகம்

இங்கிலாந்து உள்ளக அணியின் துடுப்பாட்டத்தில் இம்முறையும் அதிக ஓட்டங்கள் (19) பெற்றவராக சேம் ஸ்டேக்ஸ் பதிவானார். மறுமுனையில் கோலித்த ஹப்புவராச்சி 4 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இலங்கை சார்பாக கைப்பற்றியிருந்தார்.

இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி மிகவும் லாவகமாக துடுப்பாடி எதிரணியை விட கூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனினும், இங்கிலாந்து உள்ளக அணியின் அதிசிறந்த களத்தடுப்பு இலங்கை வீரர்கள் ரன் அவுட் மூலம் 3 விக்கெட்டுக்களை இழக்க காரணமாக அமைந்துவிட்டது. பின்னர் மத்திய வரிசை சிறப்பாட்டத்தினால் 28, 26   மற்றும் 35 என வேகமாக இலங்கை அணியின் ஓட்டங்கள் உயர்ந்தது. இதனால், 16 ஓவர்கள் நிறைவில் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி 100 ஓட்டங்களை குவித்து வெற்றியாளர்களாக மாறியது. இலங்கை அணி சார்பில் கிறிஷாந்த பீரிஸ் 18 ஓட்டங்களைப் பெற்றிருக்க இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் ப்ளேக் மற்றும் சல்மான் பாரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியில் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய கோலித்த ஹப்புவராச்சி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 72 (16) – சேம் ஸ்டேக்ஸ் 18, ப்ளேக் வன்டேர் லின்டே 17, கோலித்த ஹப்புவராச்சி 3/4

இலங்கை – 100 (16) – கிறிஷாந்த பீரிஸ் 18, தரிந்து மெண்டிஸ் 17, அனீஷ் பட்டேல் 2/3, ப்ளேக் வன்டேர் லின்டே 2/7

 விருதுகள் 

  • தொடரின் ஆட்ட நாயகன் – சேம் ஸ்டேக்ஸ் (இங்கிலாந்து) – 101 ஓட்டங்கள்
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – சேம் ஸ்டேக்ஸ் (இங்கிலாந்து) – 101 ஓட்டங்கள்
  • சிறந்த பந்துவீச்சாளர் – கோலித்த ஹப்புவராச்சி (இலங்கை) – 11 விக்கெட்டுக்கள்