சர்வதேச T20 லீக்குகளில் அதிரடி காட்டும் குசல், மதீஷ

752

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற ILT20 லீக் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்ற SA20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், குறித்த 2 தொடர்களிலும் இலங்கையைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் விளையாடி வருவதுடன், நேற்று (04) நடைபெற்ற போட்டிகளில் பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணிக்காக குசல் மெண்டிஸும், டெசர்ட் வைபர்ஸ் அணிக்காக மதீஷ பத்திரனவும் திறமைகளை வெளிபடுத்தியிருந்தனர்.

MI கேப் டவுன் எதிர் பிரிட்டோரியா கெபிடல்ஸ்

SA20 லீக் தொடரில் நேற்று (04) நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் MI கேப் டவுன், பிரிட்டோரியா கெபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய MI கேப் டவுன் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஸ்ஸி வெண்டர் டூசெனின் (51) அரைச் சதத்தின் உதவியுடன் 19.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களைக் குவித்தது.

பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணி தரப்பில் ஈதன் போஷ்க், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்பின் 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திக் களமிறங்கிய பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ் 39 (25), ரிலே ரூசோவ் 40 (19) ஆகியோர் அபாரமாக விளையாடி அசத்தினார்கள். இருப்பினும், பிலிப் சோல்ட் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததால், பிரிட்டோரியா அணி திடீர் பின்னடைவை சந்தித்தது.

இறுதியில் கடைசி 3 ஓவர்களில் 22 ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது டெய்ல் என்டர்ஸ் ஷனுரான் முத்துச்சாமி, நோர்ட்ஜே ஆகியோர் மட்டும்தான் களத்தில் இருந்தார்கள். நோர்ட்ஜே இரண்டு பௌண்டரிகள் அடித்து ஆட்டமிழந்த பிறகு, முத்துச்சாமி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.

இதில் கடைசி ஓவரின் 3ஆவது பந்தில், சாம் கரண் வேகத்தில் முத்துச்சாமி 25 (23) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 3 பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோஸுவா லிட்டில் கடைசி பந்தில் இரண்டு ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.

இதன்மூலம், பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ஓட்டங்களைக் குவித்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் MI கேப் டவுனை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்த வெற்றியின் மூலம் இதுவரை 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 27 புள்ளிகளை எடுத்து பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பிரிட்டோரியா அணிக்கு இன்னும் 2 போட்டிகள் எஞ்சியிருப்பதால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

இதனிடையே, இம்முறை SA20 லீக் தொடரில் பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணிக்காக ஆடி வரும் குசல் மெண்டிஸ், இதுவரை அந்த அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி முறையே 37, 29 மற்றும் 39 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

டெசர்ட் வைபர்ஸ் எதிர் கல்ஃப் ஜயண்ட்ஸ்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ILT20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் கல்ஃப் ஜயண்ட்ஸ் – டெசர்ட் வைபர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழறற்சியில் வென்ற டெசர்ட் வைபர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கல்ஃப் ஜயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டொம் பெண்டன் (20), ஜேம்ஸ் வின்ஸ் (39) மற்றும் கிறிஸ் லின் (12) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷிம்ரnhன் ஹெட்மயர் அதிரடியாக விளையாடி அரைச் சதம் கடந்தது 54 ஓட்டங்ளைக் குவித்தார்.

டெசர்ட் வைபர்ஸ் அணியின் சார்பில் மதீஷ பத்திரன 4 ஓவர்கள் பந்துவீசி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் கிறிஸ் லின் மற்றும் கிய ஷிம்ரnhன் ஹெட்மயர் ஆகியோரது முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இலக்கை துரத்திய டெசர்ட் வைபர்ஸ் அணியில் ரொஹான் முஸ்தபா 28, அலெக்ஸ் ஹேல்ஸ் 26 என சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய அணித் தலைவர் கொலின் முன்ரோ (2), சாம் பில்லிங்ஸ் (22), ரூதர்ஃபோர்ட் (2) சொற்ப ஓட்டங்களுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

பின்னர் களமிறங்கிய டொம் கரண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் டெசர்ட் வைபர்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்;களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் கல்ஃப் ஜயண்ட்ஸ் அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இம்முறை ILT20 லீக் தொடரில் அதிவேக பந்துவீச்சை வீசிய வீரர்களில் முதலிடத்தைப் பிடித்த குட்டி மாலிங்க என்றழைக்கப்படுகின்ற 20 வயது வேகப் பந்துவீச்சாளரான மதீஷ பத்திரன, இதுவரை 7 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<