வட மத்திய மாகாண அணிக்கு நெருக்கடி கொடுத்த ஜதுசன் மற்றும் கபில்ராஜ்

1276

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரில் மேல் மாகாண வடக்கு அணியிடம், கிழக்கு மாகாணம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இரண்டு நாட்கள் கொண்ட இந்த போட்டிகளில் மேலும் மூன்று ஆட்டங்கள் இன்று வியாழக்கிழமை (27) ஆரம்பமாயி ன. இதில் வட மத்திய மாகாணத்தை எதிர்கொண்ட வட மாகாண அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. வட மேல் மாகாணத்திற்கு எதிரான போட்டியில் மேல் மாகாண மத்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென் மாகாணத்துடனான போட்டியில் ஊவா மாகாணம் நிதானமாக ஆடி தனது முதல் இன்னிங்ஸை பூர்த்தி செய்துள்ளது.


                                                                                                                               

கிழக்கு மாகாணம் எதிர் மேல் மாகாணம் வடக்கு

மாத்தறை, உயன்வத்த மைதனத்தில் நடைபெற்ற போட்டியில் மேல் மாகாண வடக்கு அணிக்கு எதிராக கிழக்கு மாகாணம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்த்துக்கொண்டபோதும் 10 விக்கெட்டுகளால் தோல்வியை எதிர்கொண்டது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 21.1 ஓவர்களில் 64 ஓட்டங்களுக்கே சுருண்டது. வசன்த டி சில்வா பெற்ற 25 ஓட்டங்களுமே அதிகமாகும். நுவன் துஷார 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் முதல் நாள் பகல்போசன இடைவேளைக்கு முன்னரே தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேல் மாகாண வடக்கு அணிக்கு கவீன் பண்டார கை கொடுக்க 9 விக்கெட்டுக்கு 282 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பண்டார 144 ஓட்டங்களை பெற்றார். சன்ஜிக ரித்ம 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 218 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று வியாழக்கிழமை (27) தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கிழக்கு மாகாண அணி சரியாக 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ரமேஷ் நிலன்த (79) மற்றும் சச்சித ஜயதிலக்க (59) அரைச்சதம் பெற்றனர். எனினும் துவின்து திலகரத்ன 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியில் வெற்றிபெற ஒரு ஓட்டத்தை பெற்றால் போதும் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேல் மாகாண வடக்கு அணி 4 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

B குழுவில் உள்ள கிழக்கு மாகாண அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும். அவ்வணி ஒரு போட்டியை சமநிலையில் முடித்தது. ஆனால் மேல் மாகாண வடக்கு அணி 4 போட்டிகளிலும் வென்று அந்த குழுவில் முதலிடத்தில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

கிழக்கு மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 64 (21.1) – வசன்த டி சில்வா 25, நுவன் துஷார 5/13, பினுர பெர்னாண்டோ 4/26

மேல் மாகாணம் வடக்கு (முதல் இன்னிங்ஸ்) –  282/9d (61.1) – கவீன் பண்டார 144, சிலின்த உஷான் 50, சன்ஜிக்க ரித்ம 4/50

கிழக்கு மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 218 (51.5) –  ரமேஷ் நிலன்த 79, சச்சித ஜயதிலக்க 59, துவின்து திலகரத்ன 5/62

மேல் மாகாணம் வடக்கு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 4/0 (2.2)

போட்டி முடிவு – மேல் மாகாண வடக்கு அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி


வட மாகாணம் எதிர் வட மத்திய மாகாணம்

கொழும்பு, புளும்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் வட மாகாண அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களமிறங்கிய வட மாகாண அணி 51.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை பெற்றது.

சிறப்பாக ஆடிய முஹமது அல்பார் 82 ஓட்டங்களை பெற்றார். வி. ஜதூஷன் 23 ஓட்டங்களை குவித்தார். வட மத்திய மாகாணத்திற்காக ஆகாஷ் செனரத்ன 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வட மத்திய மாகாணம் வடக்கு வீரர்களின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க தடுமாறியது. குறிப்பாக சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் வி. ஜதூஷன் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வட மத்திய மாகாண அணி 36 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஜதூஷன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கபிலராஜ் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இன்னும் 3 விக்கெட்டுகளே கைவசம் இருக்க வட மத்திய மாகாணம் 52 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் பின்தங்கி உள்ளது.

போட்டியின் சுருக்கம்

வட மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (51.5) – முஹமது அல்பார் 82, ஜி. ஜதூஷன் 23, சன்தீப நிசன்சல 2/19, ஆகாஷ் செனரத்ன 5/65

வட மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) 138/7 (36) – யொஹான் மெண்டிஸ் 61, தினெத் ஹேவாதன்திரி 34, வி. ஜதூஷன் 3/18, கே. கபிலராஜ் 2/39

நாளை போட்டியின் இரண்டாவது நாள்


ஊவா மாகாணம் எதிர் தென் மாகாணம்

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஊவா மாகாண அணி நிதானமாக ஆடி 76 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. ஹர்ஷ ராஜபக்ஷ 88 ஓட்டங்களை பெற்று சதம் ஒன்று பெறுவதை தவறவிட்டார். பந்து வீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 53 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய நாள் ஆட்டத்தின் கடைசி தறுவாயில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென் மாகாண அணி 3 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஊவா மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 198 (76) – ஹர்ஷ ராஜபக்ஷ 88, மீதும் தினெத் 26, ரமேஷ் மெண்டிஸ் 4/53, சரித் அசலங்க 2/17

தென் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 73/3 (24) – பசின்து இசிர 35

நாளை போட்டியின் இரண்டாவது நாள்


மேல் மாகாணம் மத்திய எதிர் வட மேல் மாகாணம்

கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் இன்று ஆரம்பமான இந்த மோதலில் A குழுவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் வட மேல் மாகாண அணி அந்த குழுவில் நான்காவது இடத்தில் இருக்கும் மேல் மாகாண மத்திய அணியிடம் நெருக்கடியை சந்தித்தது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேல் மாகாண மத்திய அணி நிதானமாக ஆடி 204 ஓட்டங்களை குவித்தது. ஹிமேஷ லியனகே (72) மற்றும் லஹிரு விமுக்தி (60) அரைச்சதம் பெற்றனர். தரின்து ரத்னாயக்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வட மத்திய மாகாணம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 138 ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்துள்ளது. யொஹான் மெண்டிஸ் 63 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் மத்திய (முதல் இன்னிங்ஸ்) – 204 (46.1) – ஹிமேஷ லியனகே 72, லஹிரு விமுக்தி 60, தரின்து ரத்னாயக்க 5/50, அசித்த பெர்னாண்டோ 3/52

வட மேல் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 128/7 (32) – சச்சின் ஜயவர்தன 27*, ருக்ஷான் பெர்னாண்டோ 27, ஜனித் லியனகே 3/38, சஹான் நாணயக்கார 2/28

நாளை போட்டியின் இரண்டாவது நாள்.