மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் துஷ்மன்த சமீர சந்தேகம்

1236

தற்போது நடைபெற்று வரும் மாகாணங்களுக்கு இடையிலான ‘சுப்பர்-4’ கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியின்போது எலும்பு முறிவு உபாதைக்கு உள்ளான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர ஜுன் மாதத்தில் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நான்கு அணிகள் ஆடும் இந்த சுப்பர்-4 போட்டித் தொடரில் சமீர கொழும்பு அணிக்காக ஆடுகிறார். காலி அணிக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் அவர் 11 ஓவர்கள் பந்துவீசிய நிலையில் உபாதை காரணமாக ஓய்வறைக்கு திரும்பினார். அதனைத் தொடர்ந்து அவர் அந்த போட்டியில் ஆடவில்லை. ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நான்கு நாட்கள் கொண்ட அந்தப் போட்டி இரு அணிகளும் அதிக ஓட்டங்கள் குவித்த நிலையில் சமநிலையில் முடிந்தது.

அந்தப் போட்டியில் காயமடைந்த சமீரவுக்கு நான்கு தொடக்கம் ஐந்து வாரங்கள் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் அவரால் ஆட முடியாது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய் குறிப்பிட்டார்.

 

அவர் உடற்தகுதி சோதனைக்கு முகம்கொடுக்க வேண்டும். இன்று (ஏப்ரல் 5) .பி.எல். இல் ஆட இந்தியா புறப்படவிருந்தார். அவர் அங்கு போவதற்கு அவரது உடல் தகுதி போதுமானதாக உள்ளதா என்று சோதனை மூலம் பார்க்கவேண்டி இருந்தது. அதிஷ்டவசமாகவோ அல்லது துரதிஷ்டவசமாகவோ அவர் அந்த சோனையில் தோல்வியடைந்தார் என்றும் லெப்ரோய் மேலும் குறிப்பிட்டார்.

2018 .பி.எல். பருவத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டு இலங்கை வீரர்களில் சமீரவும் ஒருவராவார். அடுத்த வீரரான சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய இந்த வாரம் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளரான முன்னாள் இலங்கை அணித்தலைவர் மஹேல ஜயவர்தனவுடன் அணியில் இணைந்தார்.

சமீர ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காகவே இம்முறை .பி.எல். தொடரில் தேர்வு செய்யப்பட்டார். இந்த இரு வீரர்களும் கடந்த ஜனவரி 27ஆம், 28ஆம் திகதிகளில் நடந்த .பி.எல். வீரர்கள் ஏலத்தில் தலா 5 மில்லியன் இந்திய ரூபாவுக்கு ஏலம்போயிருந்தனர்.

இதேவேளை, துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்கவும் இதே மாகாணங்களுக்கு இடையிலான போட்டியின்போது பின் தொடைப் பகுதியில் உபாதைக்கு உள்ளாகியுள்ளார். இதனால் அவருக்கு நடைபெற்று வரும் சுப்பர்-4 போட்டிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணியின் இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்கவுக்கு மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.