மெய்வல்லுனர் தகுதிகாணில் பிரகாசித்த வக்ஷான், அரவிந்தன், மிதுன்ராஜ்

National Athletics Trials 2024

349
National Athletics Trials 2024

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான முதலாவது தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் தொடர் மற்றும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் டுபாயில் நடைபெறவுள்ள 20 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கான தெரிவுப் போட்டி என்பன தியகம, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் (02) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழா உள்ளிட்ட சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் பங்குபற்றும் இலங்கை வீரர்களை தேசிய மெய்வல்லுனர் குழாத்துக்காக தேர்ந்தெடுக்கும் நோக்கில் இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் இதில் பங்குபற்றியிருந்தனர்.

இதனிடையே, கடந்த 2 நாட்களாக நடைபெற்ற முதலாவது தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் தொடரில் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மலையக வீரர் சி. அரவிந்தன் முதலிடம் பிடித்து அசத்தினார். போட்டி தூரத்தை நிறைவுசெய்ய ஒரு நிமிடமும் 50.87 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

அண்மைக்காலமாக தொடர்ச்சியாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அரவிந்தன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலிடத்தைப் பிடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த மலையகத்தைச் சேர்ந்த மற்றுமொரு இளம் வீரரான விக்னராஜ் வக்ஷான், 3 நிமிடங்கள் 51.82 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பிடித்தார்.

குறித்த போட்டியை 3 நிமிடங்கள் 52.70 செக்கன்களில் நிறைவு செய்த எஸ். சந்திரதாசன் 2ஆவது இடத்தையும், 3 நிமிடங்கள் 52.70 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் நிப்ராஸ் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதுஇவ்வாறிருக்க, ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட விக்னராஜ் வக்ஷான் 2ஆவது இடத்தையும், ஜே.கே பிரசான் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இதேவேளை, ஆண்களுக்கான தட்டெறிதலில் இலங்கை இராணுவ மெய்வல்லுனர் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட யாழ். பருத்தித்துறை ஹார்ட்லிக் கல்லூரியின் முன்னாள் மாணவரான சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், 46.34 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து முதலிடம் பிடித்தார். இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர்கள் பங்கேற்ற தேசிய ரீதியிலான தகுதிகாண் போட்டித் தொடரொனறில் முதல் தடவையாகக் களமிறங்கிய மிதுன்ராஜுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். அத்துடன், இந்த தூரமானது அவரது தனிப்பட்ட சிறந்த தூரப் பெறுமதியாகவும் இடம்பிடித்தது.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டங்கில் நடைபெற்ற 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் முதல் தடவையாகக் களமிறங்கிய அவர், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய இளையோர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் தட்டெறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை அவர் சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியிலும் பங்குகொண்ட மிதுன்ராஜ், 14.66 மீற்றர் தூரத்தை எறிந்து 2ஆவது இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் 2ஆவது இடத்தைப் பிடித்தார். குறித்த போட்டியை 31 நிமிடங்கள் 16.08 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் கிழக்கு மாகாண வீரர் மொஹமட் நௌஷாத் 3ஆவது இடத்தைப் பிடித்தார். போட்டி தூரத்தை நிறைவுசெய்ய 53.61 செக்கன்களை அவர் எடுத்தார்.

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 21.50 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

அதேபோல, ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் முன்னாள் தேசிய சம்பியனான சப்ரின் அஹமட், 15.59 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், அண்மைக்காலமாக ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரது ரதுஷான், 67.49 மீற்றர் தூரம் எறிந்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். தோள்பட்டை உபாதையின் பிறகு பங்கேற்ற முதல் போட்டியிலேயே அவர் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே முதலிடத்தைப் பிடித்தார். போட்டி தூரத்தை நிறைவுசெய்ய 45.83 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். அதேபோல, பெண்களுக்கான 400 மீற்றரில் தேசிய சம்பியனான நதீஷா ராமநாயக்க, 53.26 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார்.

இதேவேளை, பெண்களுக்கான குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக வலம் வருகின்ற கண்டியைச் சேர்ந்த பாத்திமா சபியா யாமிக், பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் (12.19 செக்.) பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் (24.78 செக்.) முறையே 2ஆவது இடங்களைப் பிடித்தார்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<