தேசிய வேகநடைப் போட்டியில் துனுகர, மதிரிகாவிற்கு முதலிடம்

National 20Km Race Walking Championship 2024

83

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் முதல் தடவையாக நடாத்தப்பட்ட 20 கிலோ மீற்றர் தேசிய வேகநடைப் போட்டியின் ஆடவர் பிரிவில் இலங்கை இராணுவத்தின் சந்தருவன் துனுகர மற்றும் மகளிர் பிரிவில் கல்ஹாரி மதிரிகா ஆகிய இருவரும் வெற்றியீட்டினர்.

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று (18) நடைபெற்ற இப் போட்டியின் ஆடவர் பிரிவில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சந்தருவன் துனுகர முதலிடத்தைப் பிடித்தார். போட்டியை அவர் ஒரு மணித்தியாலம் 37.35 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

இவர் முன்னதாக நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா வேகநடைப் போட்டியில் பல தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவ வீரர்களான வை.எஸ் விமலசூரிய (ஒரு மணி. 39.22 செக்.) இரண்டாவது இடத்தையும், எஸ்.கே சம்பத் (ஒரு மணி. 42.58 செக்.) மூன்றாவது இ;டத்தையும் பிடித்தனர்.

இதேநேரம், இந்தப் போட்டியில் முதல் 9 இடங்களையும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே மகளிர் பிரிவில் முதலிடத்தை இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கல்ஹாரி மதிரிகா பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் ஒரு மணித்தியாலம், 51 நிமிடங்கள், 45 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார்.

இராணுவத்தைச் சேர்ந்த பி.பி. கயானி (ஒரு மணி. 52.12 செக்.) இரண்டாவது இடத்தையும், விமானப் படையைச் சேர்ந்த தினுஷா திஹானி (ஒரு மணி. 57.03 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, இலங்கை விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்திய எல் கல்யாணி 5ஆவது இடத்தையும், யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆர். கௌஷியா 9ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய வேகநடை சம்பியன்ஷிப் தொடருக்கான தெரிவுப் போட்டியாக இந்தப் போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<