புய்ரேன், டொன்டர் ஆகியோரின் இணைப்பாட்டத்துடன் இலங்கையை வீழ்த்திய தென்னாபிரிக்க கனிஷ்ட அணி

2874
Image Courtesy - Ashley Vlotman/Gallo Images/Cricket South Africa
Image Courtesy - Ashley Vlotman/Gallo Images/Cricket South Africa

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகியது. இப்போட்டியில் நான்காவது விக்கெட்டுக்காக சிறப்பாக செயற்பட்டு மிச்சேல் வான் புய்ரேன், ரெய்னாட் வான் டொன்டர் ஆகியோர் பெற்றுக்கொண்ட இணைப்பாட்டத்தின் மூலம், தென்னபிரிக்க கனிஷ்ட அணி  இலங்கை கனிஷ்ட அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தியதோடு இத்தொடரில் 1-0 என முன்னிலையினையும்  பெற்றுக்கொள்கின்றது.

முக்கோண இளையோர் ஒரு நாள் தொடரினை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும், இலங்கை கனிஷ்ட அணியானது, அத்தொடரின் வெற்றி மூலம் கிடைத்த புத்துணர்ச்சியுடன் இப்போட்டியில் களமிறங்கியது.

முன்னதாக, ஔட்ஸ்ஹூன் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் அவிஷ்க பெர்னாந்து முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான விஷ்வ சத்துரங்க, அவிஷ்க பெர்னாந்து ஆகியோருடன் போட்டியினை ஆரம்பித்த இலங்கை கனிஷ்ட அணியானது ஆரம்பத்தில் எதிரணியினால் வீசப்பட்ட பந்துகளை பவுண்டரிகளாக மாற்றி ஒரு நல்ல ஆரம்பத்தினை தந்திருந்தது.

இதன் போது, இலங்கை கனிஷ்ட அணி 8.1 ஓவர்களில் 53 ஓட்டங்களினை பெற்றிருந்த போது மைக்கல் கொஹேனின் பந்து வீச்சினை எதிர்கொண்டிருந்த இலங்கை அணியின் தலைவர் அவிஷ்க பெர்னாந்து 26 ஓட்டங்களுடன் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டினை  இலங்கை பறிகொடுத்திருந்த போதும் சீரான வேகத்திலேயே ஓட்டங்களினைக் குவித்தது. இந்நிலையில், இரண்டாவது விக்கெட்டாக மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான விஷ்வ சத்துரங்க இலங்கை கனிஷ்ட அணி 93 ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரை அடுத்து புதிதாக களத்திற்கு வந்த கமிந்து மெண்டிஸ், சம்மு அஷான் ஆகியோர் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஓய்வறை திரும்ப இலங்கை கனிஷ்ட அணி 95 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இந்த நிலையினை சுதாகரித்துக்கொண்ட கிரிஷான் ஆராச்சிகே மற்றும் மிஷென் சில்வா ஆகியோர் நிதானமாக ஓட்டங்களினை சேர்க்க ஆரம்பித்தனர். இந்த தருணத்தில் 5 ஆவது விக்கெட்டாக இலங்கை கனிஷ்ட அணிக்காக போராடிக்கொண்டிருந்த கிரிஷான் ஆராச்சிகே ஆட்டமிழந்து செல்ல இலங்கை கனிஷ்ட அணி தமது பின்வரிசை ஆட்டக்காரர்களின் துடுப்பாட்டத்தினை எதிர்பார்த்தது.

பின் வரிசை வீரர்களும் சொல்லிக்கொள்ளும் விதமாக ஆடாமல் ஆட்டமிழந்து சென்றதன் காரணமாக, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இலங்கை கனிஷ்ட அணி இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை கனிஷ்ட அணி சார்பாக, இந்த துடுப்பாட்டத்தில் அரைச்சதம் கடந்த கிரிஷான் ஆராச்சிகே 79 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இவரைத் தவிர விஷ்வ சத்துரங்க 42 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில், தென்னாபிரிக்க கனிஷ்ட அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட  ருஆன் டி ஸ்வார்ட், மைக்கல் கொஹேன், லுத்தோ சிபம்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 215 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற களமிறங்கிய தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் முதல் விக்கெட்டானது, போட்டியின் முதல் பந்திலேயே நிப்புன் ரன்சிக்கவின் வேகத்திற்கு இரையானது.

இதனால் கவனமாகவே ஆட ஆரம்பித்திருந்த தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுக்களை புனித செபஸ்தியன் கல்லூரியின் சுழல் பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம வீழ்த்தியிருந்தார். இதனால், ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க கனிஷ்ட அணி 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் காணப்பட்டது.

எனினும், இந்த நிலையில் ஜோடி சேர்ந்த தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் ரெய்னாட் வான் டொன்டர் மற்றும் மிச்சல் வான் புய்ரேன் ஆகியோர், நிதானமாக துடுப்பாடி நான்காவது விக்கெட்டுக்காக 169 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இதனால், தென்னாபிரிக்க கனிஷ்ட அணியானது 48 ஓவர்களில் மேலதிக விக்கெட் இழப்பின்றி (மூன்று விக்கெட்டுக்களை இழந்து) 215 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கினை அடைந்தது.

இந்த வெற்றி இலக்கினை தென்னாபிரிக்க கனிஷ்ட அணி அடைவதற்கு பின்னணியில் செயற்பட்ட மிச்சேல் வான் புய்ரேன் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களைப் பெற்றதோடு மறுமுனையில் ரெய்னாட் வான் டொன்டர் 89 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார்.

இப்போட்டியில், வெற்றி பெற்றுக்கொண்டதன் மூலம், தென்னாபிரிக்க கனிஷ்ட அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.

இத்தொடரின் இரண்டாவது இளையோர் ஒரு நாள் போட்டி, பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இன்றைய போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கனிஷ்ட அணி: 214 (49) – கிரிஷான் ஆராச்சிகே 53(79), விஷ்வ சத்துரங்க 37(42), அவிஷ்க பெர்னாந்து 26(26), ஜெஹான் டேனியல் 23(50), மைக்கல் கொஹேன் 37/2 (9), லுத்தோ சிபம்லா 30/2(7), ருஆன் டி ஸ்வார்ட் 44/2 (10)

தென்னாபிரிக்க கனிஷ்ட அணி: 215/3 (48) – மிச்சேல் வான் புய்ரேன் 92*(114), ரெய்னாட் வான் டொன்டேர் 89*(131), பிரவீன் ஜயவிக்ரம 52/2 (10)

போட்டி முடிவு – தென்னாபிரிக்க கனிஷ்ட அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி