ஹஸரங்கவின் டெஸ்ட் மீள் வருகை திட்டமா? விளக்கமளிக்கும் SLC

Sri Lanka Cricket

126

வனிந்து ஹஸரங்கவை T20 உலகக்கிண்ணத்தில் விளையாட வைப்பதற்காக அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இணைக்கப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த வனிந்து ஹஸரங்க ஓய்விலிருந்து திரும்பி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக அறிவித்திருந்தார்.

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் பெதும் நிஸ்ஸங்க

இதன் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆரம்பமாகும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் நடுவருடன் முரண்பட்ட காரணத்துக்காக அவர் முதலில் வரும் இரண்டு டெஸ்ட், 4 ஒருநாள் அல்லது 4 T20I போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என ஐசிசி அறிவித்தது.

அதன்படி வனிந்து ஹஸரங்க பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது. குறித்த இந்த விடயம் சமுகவலைத்தளங்களில் பரவலான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரையடுத்து நேரடியாக T20 உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ளது. அதற்கிடையில் எந்தவித போட்டிகளும் இல்லை. எனவே இலங்கை கிரிக்கெட் சபை வனிந்து ஹஸரங்கவை உலகக்கிண்ண போட்டிகளில் விளையாட வைப்பதற்காக டெஸ்ட் குழாத்தில் இணைத்ததாகவும், ஐசிசியின் தடையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இவ்வாறான நிலையில் வனிந்து ஹஸரங்க மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னர் தீர்மானித்துவிட்டார் என இலங்கை அணி முகாமையாளர் மஹிந்த ஹலாங்கொட தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “வனிந்து ஹஸரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட தீர்மானித்து, அதற்கான கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு அனுப்பியிருந்தார். எனவே அவர் டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டார். ஹஸரங்க டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பும் முடிவானது பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்” என்றார்.

வனிந்து ஹஸரங்கவின் டெஸ்ட் வருகை தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர் அஜந்த மெண்டிஸ், “இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக வனிந்து ஹஸரங்க எமக்கு அறிவித்தார்.  இந்த முடிவு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<