உருகுவே குடும்பங்களுக்கு உணவளிக்கும் சுவாரெஸ்

78

பார்சிலோனா முன்கள வீரரான லுவிஸ் சுவாரெஸ் தனது சொந்த நாடான உருகுவேயில் கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் நெருக்கடியால் நிர்க்கதிக்கு உள்ளாகி இருக்கும் 500 குடும்பங்களுக்கு உணவு அளிக்க முன்வந்துள்ளார்.    

கொரோனா வைரஸ் தொற்றினால் உருகுவே நாட்டில் 300க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டும், ஒருவர் உயிரிழந்தும் உள்ளார். இதனை அடுத்து அந்நாட்டு அரசு அனைத்து பாடசாலைகளையும் மூடி மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.    

ஊதியக் குறைப்புக்கு பார்சிலோனா வீரர்கள் இணக்கம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பார்சிலோன கழக வீரர்கள் தமது ஊதியத்தில் 70 வீத ………

இந்நிலையில் சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு அவர்களுக்கு உதவ முன் வந்திருக்கும் பார்சிலோனா நட்சத்திரம் சுவாரெஸ் அது தொடர்பில் அந்நாட்டு நிர்வாகத்தை அணுகியுள்ளார்.

குறிப்பாக, உருகுவேயில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் நாளாந்தம் பாடசாலையில் வழங்கும் இலவச உணவில் தங்கியுள்ளனர். அரசு பாடசாலைகளை மூடியது இவ்வாறான சிறுவர்களை பாதித்துள்ளது.  

உருகுவேயின் கசவெல்லா மாவட்டத்திற்கு அத்தியவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி மற்றும் துப்புரவு பொருட்களை அளிப்பதற்கு சுவாரெஸ் உறுதி அளித்துள்ளார்.  

ஐரோப்பிய கால்பந்து கழகங்களில் ஆடும் நட்சத்திர வீரர்கள் பலரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட பெரும் நிதி உதவிகளை அளித்து வரும் நிலையிலேயே சுவாரெசும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதில் தமது சக அணி வீரரான லியோனல் மெஸ்ஸி ஸ்பெயின் மற்றும் தமது சொந்த நாடான ஆர்ஜன்டீனாவுக்கு ஒரு மில்லியன் யூரோ நிதி உதவி அளித்தார்.

தமது சொந்த நாட்டுக்கு அளித்த அன்பளிப்புப் பற்றி சுவாரெஸ் கூறும்போது, அதிக உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு என்னால் வழங்க முடிந்தது குறைந்த உதவிகளாகும்என்றார்

கடந்த ஜனவரியில் மேற்கொண்ட முழங்கால் சத்திர சிகிச்சைக்குப் பின்னர் சுவாரெஸ் அதில் இருந்து மீண்டு வருகிறார். எனினும் அவர் மீண்டும் தென் அமெரிக்காவில் தனது சொந்த நாட்டுக்கு திரும்புவது அந்நாட்டு மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பாக இருக்கும் என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.  

எனது நாட்டிற்கு மீண்டும் செல்வது பற்றி நான் ஆவலுடனேயே இருக்கிறேன். என்றாலும் உருகுவே மக்களை பாதுகாப்பதற்கான சிறந்த வழி நான் வீட்டில் தங்கி இருப்பது தான். எனது உதவி தேவையெனில் நான் தூரத்தில் இருந்து செய்கிறேன். பெருமையுடன் நான் அதனை செய்வேன்.    

நான் எனது பிள்ளைகள் பற்றி அவதானத்துடன் இருக்கிறேன். அதேபோன்று மக்களுக்கு இந்த நோய் தொற்றுவதில் இருந்து தவிர்ப்பதற்காக நான் வீட்டில் தங்கி இருப்பது அவசியம். நான் அனைவரினதும் பாதுகாப்புப் பற்றி கவனம் செலுத்துகிறேன். வீட்டில் இருக்கும்படியே அரசு மற்றும் மருத்துவர்கள் எனக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். அனைவரும் அதனைத் தான் செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன்என்றும் அவர் கூறினார்

இந்தப் பருவத்தில் பார்சிலோனா அணிக்காக சுவாரெஸ் 14 கோல்கள் மற்றும் 11 கோல் உதவிகளை வழங்கியுள்ளார். அட்லடிகோ மெட்ரிட்டுக்கு எதிராக கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஸ்பானிஷ் சுப்பர் கப் போட்டியின்போதே சுவாரெஸ் உபாதைக்கு உள்ளானார்.