புனித பேதுரு கல்லூரிக்கு அதிர்ச்சி கொடுத்த தர்மபால கல்லூரி

154
Singer U19 Schools Cricket

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் புனித பேதுரு கல்லூரியுடனான போட்டியில் தர்மபால கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது. இன்று நிறைவுற்ற மற்றைய போட்டிகள் அனைத்தும் மழையின் காரணமாக சமநிலையில் முடிவடைந்தன.

அதேவேளை, இன்று ஆரம்பமான போட்டிகளும் மழையினால் தடைப்பட்டதன் காரணமாக குறைந்தளவு ஓவர்களே வீசப்பட்டன.

தர்மபால கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் புனித பேதுரு கல்லூரியை எதிர்த்து தர்மபால கல்லூரி போட்டியிட்டது. அதிகாலை பெய்த மழையின் காரணமாக இன்றைய தினத்திற்கான ஆட்டம் தாமதமாகியே ஆரம்பமானது.

முதல் நாள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்றிருந்த தர்மபால கல்லூரி இன்று 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.  அவிஷ்க ஹசரிந்த 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், புனித பேதுரு கல்லூரி சார்பாக சதுர ஒபேசேகர மற்றும் மொஹமட் அமீன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக 125 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பந்து வீச்சில் மஹீம வீரகோன் 4 விக்கெட்டுக்களையும், சமிந்து சமரசிங்க மற்றும் டில்ஷான் சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்த, புனித பேதுரு கல்லூரி 83 ஓட்டங்களுக்கே சுருண்டது.

போட்டி நிறைவடைய சொற்ப நேரமே எஞ்சியிருந்த நிலையில் களமிறங்கிய தர்மபால கல்லூரி 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறைவு செய்து கொண்டது.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 124 (56.1) – அவிஷ்க ஹசரிந்த 31, சதுர ஒபேசேகர 4/29, மொஹமட் அமீன் 4/37

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 83 (34.5) – சந்துஷ் குணதிலக 23, மஹீம வீரகோன் 4/14, சமிந்து சமரசிங்க 3/28, டில்ஷான் சில்வா 3/12

தர்மபால கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 17/2 (6)

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. தர்மபால கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


டி மெசனொட் கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி

இன்று நிறைவுற்ற குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் டி மெசனொட் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன. முதல் நாள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 5 ஓட்டங்களை பெற்றிருந்த புனித ஜோசப் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 151 ஓட்டங்கள் தேவையான நிலையில் களமிறங்கியது.

நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக இப்போட்டியும் தாமதமாகியே ஆரம்பித்தது. சிறப்பாக பந்து வீசிய டி மெசனொட் கல்லூரியின் மிதில கீத் 18 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 6 விக்கெட்டுகளை பதம்பார்க்க, புனித ஜோசப் கல்லூரி 83 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அப்பொழுது போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

முன்னர், நேற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டி மெசனொட் கல்லூரி 47.3 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் நதுன் டில்ஷான் 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன், பந்து வீச்சில் ஹரீன் குரே 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

போட்டியின் சுருக்கம்

டி மெசனொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 155 (47.3) – நதுன் டில்ஷான் 44, ஹரீன் குரே 5/55, நிபுன் சுமனசிங்க 3/20

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 83/7 (35) – ஜெஹான் டேனியல் 47, மிதில கீத் 6/18

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.


திரித்துவக் கல்லூரி எதிர் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி

குழு ‘A’ இற்கான மற்றுமொரு போட்டியில் திரித்துவக் கல்லூரியும் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியும் மோதிக் கொண்டன. இன்றைய தினம் மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக ஒரு ஓவரேனும் வீசப்படாத நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

நேற்றைய தினம், முதலில் களமிறங்கிய திரித்துவக் கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களைக் குவித்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ட்ரெவர் பெர்சிவேல் ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தார். அதேவேளை புனித அந்தோனியார் கல்லூரி சார்பாக கவிந்து ஹெட்டியாரச்சி 4 விக்கெட்டுகளைப் பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 231/8 (63) – ட்ரெவர் பெர்சிவேல் 38*, ஹசிந்த ஜயசூரிய 37, கவிந்து ஹெட்டியாரச்சி 4/58

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

இதேவேளை குழு ‘B’ இற்கான போட்டியொன்றில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியை எதிர்த்து புனித பெனடிக்ட் கல்லூரி விளையாடியது. இப்போட்டியிலும் மழை குறுக்கிட்டதனால் இன்றைய தினம் வெறும் 2 ஓவர்களே வீசப்பட்டன. இதன் காரணமாக போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

நேற்றைய தினம், போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 5 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றிருந்தது. அற்புதமாக துடுப்பெடுத்தாடிய சனோஜ் தர்ஷிக மற்றும் திலான் இமேஷ் முறையே 104 மற்றும் 76 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது களத்திலிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 247/5 (61.5) – சனோஜ் தர்ஷிக 109*, திலான் இமேஷ் 86*, சமிந்த விஜேசிங்க 3/30

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.


புனித சேர்வேஷஸ் கல்லூரி எதிர் அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம்

இன்று ஆரம்பமான இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டியும் மழை காரணமாக தாமதித்தே தொடங்கியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய புனித சேர்வேஷஸ் கல்லூரி 36.1 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் இசுரு உதயங்க அதிகபட்சமாக 44 ஓட்டங்களை குவித்ததுடன் பந்து வீச்சில் மதுரங்க சந்திரரத்ன, சித்தும் நிலுமிந்த, ரவித பிரபாஸ்வர ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பேதுமின்றி 20 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித சேர்வேஷஸ் கல்லூரி -154 (36.1) – இசுரு உதயங்க 44, மதுரங்க சந்திரரத்ன 3/53, சித்தும் நிலுமிந்த 3/11, ரவித பிரபாஸ்வர 3/41

அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம் – 20/0 (6)


புனித அலோசியஸ் கல்லூரி எதிர் ஸாஹிரா கல்லூரி

புனித அலோசியஸ் கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி அணிகள் மோதவிருந்த குழு ‘C’ இற்கான போட்டி அடைமழையின் காரணமாக ஒரு ஓவரேனும் வீசப்படாத நிலையில் இன்று கைவிடப்பட்டதுடன், பிறிதொரு தினத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது.