மஷ்ரபீ மொர்டஷாவை ஓய்வுபெற கட்டாயப்படுத்துகிறதா BCB?

116

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தன்னை கட்டாயப்படுத்தி ஓய்வுபெறும் வகையில் செயற்படுவது மிகவும் ஏமாற்றத்தை கொடுப்பதாக பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பங்களாதேஷ் கிரிக்கெட் பக்கம் மஷ்ரபீ மொர்டஷா தொடர்பில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. அத்துடன், கிரிக்கெட் சபையின் பக்கமிருந்து மொர்டஷா ஓய்வுபெற வேண்டும் என்ற அழுத்தம் உருவாகியிருப்பாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இன்ஸ்டாகிராமிலும் அதிகம் சம்பாதிக்கும் விராட் கோஹ்லி

அதேநேரம், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரசல் டொமிங்கோ, மஷ்ரபீ மொர்டஷா எதிர்வரும் காலங்களில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் திட்டங்களுக்கு உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் தனது கருத்தை பகிர்ந்துக்கொண்ட மஷ்ரபீ மொர்டஷா, “எனது அடிப்படை திட்டம் கிரிக்கெட் விளையாடுவது. ஏனையவர்களின் திட்டங்களில் மற்றுமொருவர் இருக்க முடியாது. முதலில் நான் கூற விரும்புவது உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மூன்று தொடர்களிலும் அதீகூடிய விக்கெட்டுகளை நான் வீழ்த்தியிருக்கிறேன். உலகக் கிண்ணம் எனது தரத்தில் கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த ஒரு தொடரை வைத்துக்கொண்டு ஏனையவர்கள் என்னை கணிக்க முற்படுகின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள தவறவில்லை. ஆனால், என்னை பொருத்தவரை, நான் என்னை உயர்வாகவே எண்ணுகிறேன்” என்றார்.

உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணி லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய இறுதிப் போட்டியுடன் மஷ்ரபீ மொர்டஷா ஓய்வுபெறுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுதொடர்பில் குறிப்பிட்ட மொர்டஷா, ஓய்வுபெறும் எண்ணம் இருந்ததாகவும், எனினும், குறித்த தொடரில் பிரகாசிக்க முயடியாததால், அந்த எண்ணம் நிறைவேறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனக்கு பிரியாவிடை போட்டியொன்றை வேகமாக ஏற்பாடு செய்தமை தொடர்பிலும் மொர்டஷா கவலை தெரிவித்திருந்தார்.

“எனக்கு ஒரு பிரியாவிடை போட்டியொன்றை நடத்துவதில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை காட்டிய அவசரம் எனக்கு அதிகமான வலியை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் (கிரிக்கெட் சபை) எனக்காக ஒரு பிரியாவிடை போட்டியை ஏற்பாடு செய்தனர். அது இருதரப்பு தொடராக இருந்த போதும், அதில் ஒரு போட்டியை விஷேடமான போட்டியாக நடத்த திட்டமிட்டனர்.

குறித்த இந்த பிரியாவிடை போட்டிக்காக 2 கோடி பங்களாதேஷ் டகாவை செலவிட தீர்மானித்திருந்தனர். இதில் முக்கியமாக குறிந்த சந்தர்ப்பத்தில் எமது முதற்தர வீரர்களுக்கான சரியான தொகை பணத்தை கூட கிரிக்கெட் சபை வழங்கியிருக்கவில்லை”

இதேவேளை, தனது ஓய்வு குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஷ்முல் ஹசனுடன் கலந்துரையாடியதாக மொர்டஷா மேலும் குறிப்பிட்டார். “எனது ஓய்வு தொடர்பில், கிரிக்கெட் சபை தலைவர் என்னுடன் கலந்துரையாடினார். அந்த சந்தர்ப்பத்தில், எனது முடிவு தொடர்பில் கூறுமாறு குறிப்பிட்ட அவர், குறித்த முடிவு தொடர்பில் யாரிடமும் எதனையும் கூற மாட்டேன் என கூறினார். அத்துடன், இறுதி முடிவை என்னை எடுக்குமாறு கூறினார்.

அதன் பின்னர் நான் BPL தொடர் முடியும் வரை விளையாடுகிறேன் என அவரிடம் கூறினேன். அதனை அவர் ஊடகங்களிடம் கூறினார். குறித்த இந்த முடிவை நான் கிரிக்கெட் சபை தலைவரிடம் கூறும் போது, யாரும் அங்கு இருக்கவில்லை. குறித்த சந்தர்ப்பத்தில் கிரிக்கெட் சபை தலைவர் அங்கிருக்கும் அனைவரையும் வெளியேற்றி, என்னுடன் தனியாக கலந்துரையாட வேண்டும் என கூறியது எனக்கு நன்கு ஞாபகமிருக்கிறது. 

கிரிக்கெட் சபை தலைவர் எனக்கு தகுந்த மரியாதையை அந்த சந்தர்ப்பத்தில் கொடுத்திருந்தார். எனினும், அங்கு இல்லாத சிலர் எனது ஓய்வு தொடர்பில் வதந்திகளை பரப்புகின்றனர். அத்துடன், எனக்கும், கிரிக்கெட் சபை தலைவருக்கும் இடையில் நடந்த சந்திப்பு குறித்து யாருக்கும் தெரியாது” என மஷ்ரபி மொர்டஷா மேலும் குறிப்பிட்டார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<