விறுவிறுப்பிற்காக பிக் பேஷ் லீக்கில் மூன்று புதிய விதிமுறைகள்

332

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நடாத்தும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான பிக் பேஷ் லீக் (BBL) T20 தொடரில் மூன்று புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. 

>>ஹம்பாந்தோட்டையை சென்றடைந்தது ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி<<

பிக் பேஷ் லீக் தொடரில் விறுவிறுப்புத் தன்மையினை அதிகரிக்க புதிய விதிமுறைகளை கொண்டு வருவது வழமையாக நடைபெறுகிறது. அதன்படி, இந்த தொடரில் கடந்த ஆண்டு நாணய சுழற்சிக்குப் பதிலாக துடுப்புமட்டை சுழற்சி அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தது.  

இவ்வாறான நிலையில் இந்தமுறை தொடரின் விறுவிறுப்புத்தன்மையினை மேலும் அதிகரிக்கும் நோக்கில் மூன்று புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. 

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விதிமுறைகள்

  1. Power Surge ஓவர்கள் 
  2. X-Factor வீரர் 
  3. Bash Boost புள்ளிகள்

இந்த விதிமுறைகளில் Power Surge ஓவர்கள் பற்றி நோக்குவோம். T20 போட்டிகளில் வழமையாக பவர்பிளே (Power Play) எனப்படுவது துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றில் வீசப்படும் முதல் ஆறு ஓவர்களினை குறிக்கும். ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Power Surge ஓவர்களின் அடிப்படையில் இனி பிக் பேஷ் லீக் போட்டிகளில் துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றில் முதல் 4 ஓவர்கள் மாத்திரமே பவர்பிளே ஓவர்களாக இருக்கும். (குறிப்பு – பவர்பிளே ஓவர்களில் பந்துவீசும் அணி பௌண்டரி எல்லைகளுக்கு அருகாமையில் தமது இரண்டு களத்தடுப்பாளர்களை மாத்திரமே பயன்படுத்த முடியும்)

>>ஹம்பாந்தோட்டையை சென்றடைந்தது ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி<<

தொடர்ந்து, போட்டியின் 11ஆவது ஓவரில் இருந்து துடுப்பாடும் அணி பவர்பிளே ஓவர்கள் இரண்டை தங்கள் விரும்பிய நேரத்தில் தெரிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறு துடுப்பாடும் அணி (11ஆவது ஓவரின் பின்னர் தெரிவு செய்து கொள்ளும்) குறித்த இரண்டு ஓவர்களுமே Power Surge ஓவர்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த Power Surge ஓவர்கள் மூலம் துடுப்பாடும் அணிக்கு களத்தடுப்பாளர்களின் தடை குறைவாக இருப்பதால் தமது இன்னிங்ஸின் இறுதிப் பகுதியில் அதிக ஓட்டங்களை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கின்றது. 

>>மே.தீவுகள் தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட், T20I குழாம் அறிவிப்பு<<

X-Factor வீரர் எனக் குறிப்பிடப்படுவது பிக் பேஷ் லீக் போட்டி ஒன்று  நடைபெறும் போது இரு அணிகளும் வீரர் ஒருவரினை பிரதியீடு செய்து கொள்வதனை குறிக்கின்றது. இவ்வாறு வீரர் பிரதியீடு செய்யப்படுவது இன்னிங்ஸ் ஒன்றின் நடுப்பகுதியில் (அதாவது 10ஆவது ஓவர் வீசப்பட்ட பின்னரே) நடைபெற வேண்டும். இதேநேரம், பிரதியீடு செய்யப்படும் வீரர் துடுப்பாட்டவீரர் எனில் ஏற்கனவே துடுப்பெடுத்தாடாத ஒருவராகவும், பந்துவீச்சாளர் எனில் ஏற்கனவே ஒரு ஓவருக்கு மேல் பந்துவீசாத ஒருவராகவும் காணப்பட வேண்டும்.  

அதேநேரம், Bash Boost புள்ளிமுறை மூலம் பிக்பேஷ் தொடரின் போட்டியொன்றில் விளையாடும் அணிகள் இரண்டுக்கும் மேலதிக புள்ளியொன்று கிடைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கின்றது.  அதாவது, பிக்பேஷ் லீக் தொடரில் வெற்றி பெறும் அணி 3 புள்ளிகளை வழமையாகப் பெற்றுக் கொள்ளும். ஆனால்,  Bash Boost புள்ளிமுறை மூலம் அணிகளுக்கு இன்னும் ஒரு மேலதிக புள்ளி கிடைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. இந்த மேலதிக புள்ளி இரு அணிகளும் முதல் 10 ஓவர்களில் பெறும் ஓட்டங்களை வைத்து தீர்மானிக்கப்படுகின்றது.  

உதாரணமாக, முதலில் துடுப்பாடும் அணி 180 ஓட்டங்கள் பெறுகின்றது என வைத்துக்கொள்வோம். இந்த அணி முதல் 10 ஓவர்களில் பெற்ற ஓட்டங்கள் 90 என கருதுக. இந்த நிலையில், இரண்டாவது துடுப்பாடும் அணி 181 ஓட்டங்கள் பெற்று போட்டியில் வெற்றி பெற்றது. எனினும் இரண்டாவது துடுப்பாடும் அணி தமது முதல் 10 ஓவர்களில் 90 ஓட்டங்களை (90 ஓட்டங்கள் என்பது முதல் துடுப்பாடிய அணி 10 ஓவர்களில் பெற்ற ஓட்டங்கள்) விட குறைவான ஓட்டங்கள் பெற்றிருந்தால், இப்போட்டியின் வெற்றிக்காக அவர்களுக்கு 3 புள்ளிகள் மாத்திரமே கிடைக்கும். 

இந்த சந்தர்ப்பத்தில் தோல்வியடைந்த அணி முதல் 10 ஓவர்களிலும் வெற்றி பெற்ற அணியினை விட கூடுதல் ஓட்டங்கள் பெற்ற காரணத்தினால் Bash Boost புள்ளிமுறை மூலம் மேலதிக புள்ளியினைப் பெற்றுக்கொள்ளும். மறுமுனையில் தோல்வியடைந்த அணி முதல் 10 ஓவர்களில் வெற்றி பெற்ற அணியினை விட குறைவான ஓட்டங்களைப் பெற்றிருந்தால், வெற்றி பெற்ற அணி Bash Boost புள்ளிமுறை மூலம் கிடைக்கப்பெறும் மேலதிக புள்ளியுடன் தமது வெற்றிக்காக 4 புள்ளிகளை பெற்றுக்கொள்ளும். எனவே, இந்த முறை மூலம் தோல்வியடையும் அணிக்கும் வெற்றி பெறும் அணிக்கும் மேலதிக புள்ளி ஒன்றினை பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. 

இதேநேரம், பிக் பேஷ் லீக் தொடரில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய விதிமுறைகளுக்கு இரசிகர்களிடையே ஆதரவும், சில இடங்களில் விமர்சனங்களும் வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விதிமுறைகள் எந்தளவிற்கு செயலாக்கம் கொண்டிருக்கும் என்பதனை பிக் பேஷ் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதியில் ஆரம்பித்த பின்னரே எமக்கு தெரியவரும். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<< –