தேசிய கபடிப் போட்டியில் பிரகாசித்த கிரான் மத்திய கல்லூரி மற்றும் நிந்தவூர் அல் – மதீனா கல்லூரி

621

பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தேசிய மட்ட கபடிச் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மத்திய கல்லூரி வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான 17 வயதுக்குட்பட்ட பிரிவில் அம்பாரை மாவட்டத்தின் நிந்தவூர் அல் – மதீனா மகா வித்தியாலயம் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்துள்ளது.

கேகாலை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த தேசிய மட்ட கபடிச் சுற்றுப் போட்டியில் நாட்டின் 9 மாகாணங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அணிகள் கலந்து கொண்டன.

19 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு

இதில் இறுதிப் போட்டிக்கு கேகாலை புனித மரியார் கல்லூரி அணியும் மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி அணியும் தெரிவாகின. போட்டி நிறைவில் 36 – 29 என்ற புள்ளிகள் அடிப்படையில் புனித மரியார் கல்லூரி அணி வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது. கிரான் மத்திய கல்லூரி அணி இரண்டாமிடத்தைப் பெற்று, வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கியது.

கிரான் மத்திய கல்லூரி அணி அரையிறுதிப் போட்டியில் ஹொரனை மத்திய கல்லூரி அணியுடன் மோதியது. அதில் கிரான் மத்திய கல்லூரி அணி 41 – 38 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றே இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

கிரான் மத்திய கல்லூரி அணி, தேசிய மட்டத்திலான இந்த தொடரில் தனது முதல் போட்டியில் தம்புத்தேகம மகா வித்தியாலய அணியை 25 – 17 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், கால் இறுதிப் போட்டியில் கேகாலை தக்ஸிலா மத்திய கல்லூரி அணியை 24 – 23 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் வெற்றி கொண்டது.

Kiran Central Collage Team
கிரான் மத்திய கல்லூரி அணி

கிரான் மத்திய கல்லூரி அணி விபரம்

கே.விவேகானந்தராஜா, ஆர்.கிசோகாந், கே.வினுஜன், வீ.நவகாந், கே.பிரதீஸ், எஸ்.அனுசாந்தன், ஆர்.புவிகாந், வீ.சதீஸ்குமார், ஏ.நிலுசாந், எம்.அருண்குமார், ஆர்.கோபீதன், கே.அபிநயன்.

அணியின் முகாமையாளர் – எஸ்.சதீஸ்குமார்

பொறுப்பாசிரியர் – ஆர்.கோவிந்திரன்

பயிற்றுவிப்பாளர் – டி.மதன்சிங்

உதவிப் பயிற்றுவிப்பாளர் – பி.பத்மஹம்சன், எஸ்.தனஞ்சயன்


17 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு

17 வயதுக்குட்பட்ட அண்களுக்கான கபடிப் போட்டியின் மூன்றாமிடத்திற்கான போட்டியில் அம்பாரை மாவட்டத்தின் நிந்தவூர் அல் -மதீனா மகா வித்தியாலய அணியும், வெலிமடை மத்திய கல்லூரி அணியும் போட்டியிட்டன.

இதில் நிந்தவூர் அல் – மதீனா மகா வித்தியாலய அணி 28 – 27 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தம்வசப்படுத்தியது.

அல் – மதீனா மகா வித்தியாலய அணி தனது அரையிறுதிப் போட்டியில் கேகாலை வித்தியாலய அணியுடன் மோதியது. அதில் 31 – 16 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடைந்தமையினாலேயே அவ்வணிக்கு மூன்றாம் இடத்திற்கான போட்டியில் வெலிமடை மத்திய கல்லூரி அணியுடன் மோத வேண்டி ஏற்பட்டது.

அல் – மதீனா மகா வித்தியாலய அணி சுற்றுத் தொடரில் தமது முதலாவது போட்டியில் காலி மத்திய கல்லூரியுடன் போட்டியிட்டது. அதில் 28 – 13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்டதுடன், இரண்டாவது போட்டியில் தம்புத்தேகம வித்தியாலய அணியை 25 -23 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Nindavur Al-Madeena Maha vid.
நிந்தவூர் அல் – மதீனா மகா வித்தியாலய அணி

நிந்தவூர் அல்மதீனா மகா வித்தியாலய அணி விபரம்

எம்.பீ.எம்.சாஜீத், ஏ.எம்.எம்.ஹலீஸ், எம்.எம்.அஸ்லம், எம்.ஏ.எம்.ஆதீல், எஸ்.எம்.மிஸ்பா, ஜே.எம்.பியாஸ், ஏ.ஏ.றாஸீத், ஏ.ஏ. அல் -மக்கரீம்

அணியின் பயிற்றுவிப்பாளர் – எஸ்.எம்.இஸ்மத்