T20 உலகக்கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு

ICC Men’s T20 World Cup 2024

131

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட ஆப்கானிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் மே.தீவகளில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் குழாத்தின் தலைவராக ரஷீட் கான் பெயரிடப்பட்டுள்ளார்.

T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

கடந்த 2022ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த குழாத்திலிருந்து கரீம் ஜனாட், மொஹமட் இசாக் மற்றும் நூர் அஹ்மட் ஆகியோர் புதிதாக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் 2022ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்டிருந்த ஹஸ்மதுல்லாஹ் சஹிடி இம்முறை அணியில் இணைக்கப்படவில்லை.

அதேநேரம் மார்ச் மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச அறிமுகத்தை பெற்றுக்கொண்ட இளம் வீரர் நங்கயல் கஹரோடி அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதுமாத்திரமின்றி 2020 மற்றும் 2022ம் ஆண்டு T20 உலகக்கிண்ண குழாத்தில் இடம்பெற்றிருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் மொஹமட் இசாக் இம்முறை T20 உலகக்கிண்ணத்திலும் இடம்பெற்றுள்ளார்.

அணியின் சுழல் பந்துவீச்சை அணித்தலைவர் ரஷீட் கான் வழிநடத்தவுள்ளதுடன், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மட்,  நங்கயல் கஹரோடி மற்றும் மொஹமட் நபி ஆகியோர் ஏனைய சுழல் பந்துவீச்சாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்துவீச்சை பொருத்தவரை நவீன் உல் ஹக், பரீட் அஹ்மட் மற்றும் பஷல்லாக் பரூகி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி துடுப்பாட்ட வீரர்களாக ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், இப்ரஹிம் ஷர்டான், நஜிபுல்லாஹ் ஷர்டான் போன்ற வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 4ம் திகதி உகண்டா அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<