அமெரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சந்தர்போல்

44
 

அமெரிக்க தேசிய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதின் மகளிர் அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சிவ்நரைன் சந்தர்போல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, அடுத்தாண்டு நடுப்பகுதி வரையிலான 18 மாதங்களிற்கு அந்த இரண்டு அணிகளினதும் பயிற்சியாளராக அவர் செயல்படுவார் என அமெரிக்க கிரிக்கெட் சபை நேற்று (03) உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

பயிற்சியாளர் பதவி தொடர்பில் அறிவிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு செயல்முறை முடிந்ததைத் தொடர்ந்து அமெரிக்க மகளிர் மற்றும் 19 வயதின் கீழ் தேசிய அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக சிவனாரைன் சந்தர்பால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இம்மாதம் 5ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை டிரினிடாட் அண்ட் டொபாகோவில் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணியுடனான T20I தொடரில் இருந்து அவர் அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

இதுதொடர்பில் சந்தர்பால் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்க தேசிய மகளிர் அணி மற்றும் 19 வயதின் கீழ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்ற 47 வயதான சந்தர்போல், மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் ஆண்கள் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகவும், தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஜமைக்கா தலைவாஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளாகவும். செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 14ஆவது வீரராக வலம்வருகின்ற சந்தர்போல், மேற்கிந்தியத் தீவுகளுக்காக 164 டெஸ்ட் மற்றும் 268 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 125 அரைச் சதங்களும், 41 சதங்களும் அடங்கும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<