Mathews nearly pulls off miracle, but England prevail

35 போட்டிகளைக் கொண்ட  டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 6 போட்டிகளே  மீதமாக உள்ளது.குழு ஒன்றில் ஏற்கனவே மேகிந்திய தீவுகள் அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி உள்ள நிலையில் இலங்கை, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா இந்த மூன்று அணிகளில் எந்த அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் என்ற ஒரு நிலை காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மிக முக்கியமான ஒரு போட்டி இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பெரோஸ் ஷா கொட்லா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் அல்லாவிட்டால் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இருந்து வெளியேற நேரிடும் என்ற நிலையில்  எஞ்சலோ மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி பலம் பொருந்திய  இயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர் கொண்டது. இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர்  எஞ்சலோ மெதிவ்ஸ் எதிரணியான இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார். 

நேற்றைய போட்டியில் விளையாடிய அணிகளின்  விபரம்

இலங்கை அணி :

எஞ்சலோ மெதிவ்ஸ் (தலைவர்), திலகரத்ன தில்ஷன், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமன்ன, சாமர கபுகெதர,  மிலிந்த சிறிவர்தன, டசுன் சானக, திசர பெரேரா, துஷ்மன்த சமீர, ரங்கன ஹேரத், ஜெப்ரி வெண்டர்சே

இங்கிலாந்து அணி  :

இயோன் மோர்கன்  (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ரோய், ஜோய் ரூட், ஜொஸ்  பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, க்றிஸ் ஜோர்டன், டேவிட் வில்லே, ஆதில் ரசீட், லியம் ப்லங்கட்

நடுவர்கள் : போல் ரயிபால்  மற்றும் ரொட் டக்கர்

எஞ்சலோ மெதிவ்ஸின் அழைப்பை ஏற்று களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜேசன் ரோய் ஆகிய இருவரும் இங்கிலாந்து அணிக்கு நல்லதோர் ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை. இங்கிலாந்து இனிங்சின் 2ஆவது ஓவரில் கடந்த 5ஆவது டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம் பெற்ற  அலெக்ஸ் ஹேல்ஸ் இந்த போட்டியில் ஓட்டம் எதுவும் பெறாமல் சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சில் எல்.பி.டப்ளியு முறையில் ஆட்டம் இழந்தார். இவரின் விக்கட்டைத் தொடர்ந்து களம் புகுந்த ஜோய் ரூட், ஜேசன் ரோயோடு சேர்ந்து இரண்டாவது விக்கட்டுக்காக 61 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். அதன் பின் ஜோய் ரூட், 25 ஓட்டங்களோடு ஆட்டம் இழக்க அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜேசன் ரோய் 42 ஓட்டங்களைப் பெற்ற நிலையில்  களத்தில் இருந்து வெளியேறினார். இங்கிலாந்து அணி  13 ஓவர்கள் முடிவில் 88 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த தலைவர் இயோன் மோர்கன் மற்றும் ஜொஸ் பட்லர் ஜோடி போட்டியின் விதியையே மாற்றினார்கள். இயோன் மோர்கன் ஒன்று, இரண்டு ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க ஜொஸ்  பட்லர் வேகமாக பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழைகளைப் பொழிந்து இலங்கை பந்து வீச்சாளர்களை நொறுக்கி இங்கிலாந்து அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்தார்கள்.  4ஆவது விக்கட்டுக்காக 39 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் இயோன் மோர்கன் 22 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். இறுதியில் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜொஸ்  பட்லர் 37 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றார். இலங்கை அணியின் பந்து வீச்சில்  ஜெப்ரி வெண்டர்சே 2 விக்கட்டுகளையும் ரங்கன ஹேரத் ஒரு விக்கட்டையும் கைப்பற்றினார்கள்.

இங்கிலாந்து அணியின்  அபார ஆட்டத்தைத் தொடர்ந்து 172 ஓட்டங்கள் என்ற பாரிய வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திலகரத்ன தில்ஷான் மற்றும் தினேஷ் சந்திமால் ஜோடி களம் இறங்கியது. ஆனால் அவர்களால் இலங்கை அணிக்கு எதிர்பார்க்கப்பட்ட சிறந்த ஒரு  ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இலங்கை இனிங்ஸின் 3ஆவது பந்து வீச்சில் திலகரத்ன தில்ஷான் 2 ஓட்டங்களோடு ஏமாற்றம் அளிக்க முதல் ஓவரிலேயே இலங்கை அணி பெரும் சவாலை எதிர் கொண்டது. தில்ஷானின்  விக்கட்டைத் தொடர்ந்து இலங்கை அணியின் விக்கட்டுகள் அடுத்தடுத்து சரிந்து முதல் மூன்று ஓவர்களில் 4 விக்கட்டுகளைப் பறி கொடுத்து பாரிய ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது இலங்கை அணி. அதன் பின் ஜோடி சேர்ந்த எஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் சாமர கபுகெதர மெதுவாக இலங்கை அணியை மீட்டார்கள். ஆரம்பத்தில் மெதுவாக ஓட்டங்களைப் பெற்றாலும் போகப் போக வேகமாக ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணிக்கு ஒரு நம்பிக்கையை வரவழைத்தார்கள். மிகச் சிறப்பாக 5ஆவது விக்கட்டுக்காக 60 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து இருந்த போது சாமர கபுகெதர 30 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து திசர பெரேரா 11 பந்துகளில் 20 ஓட்டங்களோடும் டசுன் சானக 9 பந்துகளில் 15 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்க போட்டி இங்கிலாந்து அணியின் பக்கம் சாய்ந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை 8 விக்கட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை மட்டுமே பெற்று 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியைச் சந்தித்து டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரில் இருந்து வெளியேறியது. இலங்கை அணி சார்பாக அதிக பட்சமாக 15 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து தனது அணி தடுமாற்றத்தில் இருக்கும் போது இறுதிப் பந்து வரை கால் உபாதைக்கு உள்ளாகியும் தனி மரமாக வெற்றிக்கு போராடிய தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் 54 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 73 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் க்றிஸ் ஜோர்டன் 4 விக்கட்டுகளையும்  டேவிட் வில்லே 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி குழு ஒன்றில் மேற்கிந்திய தீவுகள் அணியோடு அரையிறுதிக்குத் தெரிவாகியது. நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக  28 பந்துகளில் அரைச் சதம் அடித்த ஜொஸ் பட்லர் தெரிவு செய்யப்பட்டார். குழு இரண்டில் ஏற்கனவே நியுசிலாந்து அணி அரையிறுதிக்குத் தெரிவாகி உள்ள நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி குழு இரண்டில் நியுசிலாந்து அணியுடன்  அரையிறுதிக்குத் தெரிவாகும்.

o.