கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தார் ரோஹித் சர்மா!

India tour of England 2022

100

இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை (BCCI) அறிவித்துள்ளது.

ரோஹித் சர்மா கடந்த மாதம் 25ம் திகதி கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருப்பதாக இந்திய அணி அறிவித்திருந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகளை பெற்றுவந்தார்.

>> ரோஹித் சர்மாவிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று

இவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்ததன் காரணமாக தற்போது நடைபெற்றுவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன், டெஸ்ட் அணித்தலைவராக முதன்முறையாக வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா நியமிக்கப்பட்டார்.

ரோஹித் சர்மாவுக்கு இறுதியாக மேற்கொள்ளப்பட்டிருந்த கொவிட்-19 பரிசோதனையில், தொற்றிலிருந்து அவர் முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் T20I போட்டியிலிருந்து அணியுடன் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் விராட் கோஹ்லி, ஜஸ்ப்ரிட் பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இரண்டாவது T20I போட்டியுடன் அணியில் இணைந்துக்கொள்வர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றுலர இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடர் எதிர்வரும் 7ம் திகதி சௌதெம்டனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<