ஆசிய தகுதிகாண் போட்டியில் சண்முகேஸ்வரன் மற்றும் சப்ரினுக்கு வெற்றி

424

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் இன்று (22) ஆரம்பமாகிய ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 30.38 செக்கன்களில் நிறைவு செய்த அவர், தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுமதியைப் பதிவுசெய்தார்.

அன்று கார் மெக்கானிக்; இன்று சாதனை வீரராக மாறிய மலையகத்தின் சண்முகேஸ்வரன்

இதேநேரம், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தேசிய சம்பியனான வெலிகமையைச் சேர்ந்த சப்ரின் அஹமட் இரண்டாவது இடத்தைப் பெற்று ஆறுதல் அளித்தார்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் இன்று (22) காலை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாயின.

போட்டியின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கொண்ட சண்முகேஸ்வரன், குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 30.38 செக்கன்களில் நிறைவு செய்து 2019ஆம் ஆண்டில் தனது முதலாவாது வெற்றியைப் பதிவுசெய்தார்.

இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஹட்டனைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன், ஆண்களுக்கான நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் கடந்த வருடம் மாத்திரம் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருந்தார்.

அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவிலும் தங்கப் பதக்கம் வென்ற அவர், கடந்த வருடம் ஜுலை மாதம் நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபற்றி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று தனது முதலாவது சர்வதேச வெற்றியையும் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான W வட்சன் (31 நிமி. 03.78 செக்.) இரண்டாவது இடத்தையும், இலங்கை விமானப்படையின் பி. மதுரங்க (31 நிமி. 22.57 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு 2ஆவது இடம்

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட சப்ரின் அஹமட், 16.02 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இது சப்ரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 3ஆவது அதிசிறந்த தூரமாகவும் பதிவாகியது.

இப்போட்டியின் முதல் மூன்று சுற்றுக்களிலும் சிறப்பாக பாய்ந்த சப்ரின், அதன்பின்னர் கால் பாதத்தின் பின்பகுதியில் திடீரென ஏற்பட்ட உபாதையினால் மிகவும் கஷ்டப்பட்டார். எனினும், வலியையும் பொருட்படுத்தாமல் வெற்றிக்காகக் தொடர்ந்து போராடிய சப்ரின், முப்பாய்ச்சல் தேசிய சம்பியனான சன்ஜய ஜயசிங்கவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

100 மீற்றரில் அஷ்ரப்புக்கு ஆறுதல்

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிச் சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகள் இன்று (22) காலை நடைபெற்றன. இதில் கிழக்கு மாகாண வீரர்களான மொஹமட் அஷ்ரப், பாசில் உடையார் மற்றும் மொஹமட் சபான் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

2019இன் முதலாது மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் இவ்வாரம் ஆரம்பம்

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மொஹமட் அஷ்ரப், தகுதிச் சுற்றில் முதலிடத்தையும் (10.60 செக்.), அரையிறுதியில் இரண்டாவது இடத்தையும் (10.52 செக்.) பெற்றுக்கொண்டார். இதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார்.

மற்றுமொரு கிழக்கு மாகாண வீரரான பாசில் உடையார், இன்று காலை நடைபெற்ற 100 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியை அவர் 10.78 செக்கன்களில் நிறைவு செய்தார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட அவர், போட்டியை 10.79 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், அண்மைக்காலமாக 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மற்றுமொரு இராணுவ வீரரான மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 10.86 செக்கன்களில் நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றார்.

ஆனால், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியை அவர், 10.78 செக்கன்களில் ஓடிமுடித்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட சபான், போட்டித் தூரத்தை 21.57 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெறவுள்ள இறுதிப் போட்டித் தகுதிபெற்றார்.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க