மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் சபான், சபியாவுக்கு வெற்றி

139

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் சுப்பர் மற்றும் தேசிய குழாம்களில் இடம்பெற்றுள்ள வீர, வீராங்கனைகளின் உடல் தகுதியினை பரிசோதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தகுதிகாண் போட்டிகள் நேற்று (17) சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.  

இதில் பெண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட ஆசியாவின் கனிஷ்ட அதிவேக வீராங்கனையான அமாஷா டி சில்வா, 7.44 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து முதலிடத்தைப் பெற்றுக்கெண்டார்.

குறித்த போட்டியில் அமாஷாவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த சபியா யாமிக் (7.63 செக்.) இரண்டாமிடத்தையும், மெதானி ஜயமான்ன (7.75 செக்.) மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் ஏப்ரலில்

இதனிடையே, ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியை 6.67 செக்கன்களில் நிறைவுசெய்த தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஹேஷான் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, சானுக சந்தீப் (6.82 செக்.) இரண்டாமிடத்தையும், மொஹமட் சபான் (6.88 செக்.) மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர். 

இலங்கையின் முன்னணி ஏழு வீரர்கள் பங்குகொண்ட ஆண்களுக்கான 300 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை தேசிய சம்பியனான காலிங்க குமாரகே பெற்றுக்கொண்டார். அவர் போட்டித் தூரத்தை 33.20 செக்கன்களில் ஓடிமுடித்தார்

இந்தப் போட்டியில் அருண தர்ஷன (33.57 செக்.) இரண்டாமிடத்தையும், இசுரு லக்ஷான் (33.72 செக்.) மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதேநேரம், பெண்களுக்கான 300 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனியொருவராகப் பங்குகொண்ட தேசிய சம்பியனான நடீஷா ராமநாயக்க, போட்டித் தூரத்தை 38.76 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

இதுஇவ்வாறிருக்க, பலத்த போட்டிக்கு மத்தியில் நடைபெற்ற பெண்களுக்கான 600 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை டில்ஷி குமாரசிங்க (ஒரு நிமி. 30.14 செக்.) பெற்றுக்கொள்ள, நிமாலி நிலயனாஆரச்சி (ஒரு நிமி. 30.73 செக்.) இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அமெரிக்காவில் சிறந்த வீரருக்கான விருதை வென்ற உஷான்

இதன் ஆண்கள் பிரிவில் தனியொருவராகப் பங்குகொண்ட ருசிரு சதுரங்க, போட்டியை ஒரு நிமிடம் 20.36 செக்கன்களில் நிறைவுசெய்தமை குறிப்பிடத்தக்கது

இதேநேரம், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் மஹேஷ் குமார 6.84 மீற்றர் தூரத்தையும், பெண்கள் பிரிவில் அஞ்சானி புலவன்ச 5.98 மீற்றர் தூரத்தையும் பாய்ந்து தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்

இந்த நிலையில், பெண்களுக்கான 60 மீற்றர் தடைதாண்டலில் முதலிடத்தை லக்ஷிகா சுகன்தியும் (8.45 செக்.), இரண்டாமிடத்தை இரேஷானி ராஜசிங்கவும் (8.56 செக்.) பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தேசிய சம்பியனான நதீகா லக்மாலி, 52.29 மீற்றர் தூரத்தை எறிந்து திறமையை வெளிப்படுத்தியிருந்தார்

இன்று போட்டிகளின இரண்டாவதும், கடைசியும் நாளாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<