பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்தும் மொமினுல்?

181

தொடர் தோல்விகளை அடுத்து, பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் மொமினுல்  ஹக் நீடிப்பதில் சந்தேகம் நிலவுகின்றது.

மொமினுல் ஹக்கின் தலைமையில் அண்மையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரினை மோசமான 10 விக்கெட் தோல்வி ஒன்றுடன் 1-0 என பறிகொடுத்த பங்களாதேஷ் அணி, அதற்கு முன்னரும் அவரின் தலைமையில் பல டெஸ்ட் தொடர்களைப் பறிகொடுத்திருக்கின்றது.

இந்திய கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விருத்திமான் சஹா

அந்தவகையில் 17 டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை வழிநடாத்தியிருக்கும் மொமினுல் ஹக், 3 போட்டிகளில் வெற்றியினையும், 2 போட்டிகளில் சமநிலை முடிவினையும் தனது தலைமையில் பதிவு செய்திருக்கின்றார். இதேநேரம் மொமினுல் ஹக்கின் தலைமையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியினைப் பதிவு செய்திருக்கின்றது.

அதேநேரம் டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்கு நம்பிக்கைக்குரிய துடுப்பாட்டவீரராக காணப்பட்டிருந்த மொமினுல் ஹக், அணித்தலைவர் பொறுப்பினை ஏற்ற பின்னர் துடுப்பாட்டத்தில் பெரிதாக சோபித்திருக்கவில்லை.

அதன்படி மொமினுல் ஹக், தனது இறுதி 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 12.57 என்கிற மோசமான துடுப்பாட்ட சராசரியுடன் 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருக்கின்றார். அத்துடன் மொமினுல் ஹக்கின் இறுதி 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் ஒரு அரைச்சதம் மாத்திரமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு பங்களாதேஷ் டெஸ்ட் அணித்தலைவராக மொமினுல் ஹக் நீடிப்பது தொடர்பில் அவருடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருப்பதாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) சிரேஷ்ட அதிகாரியான நஷ்முல் ஹஸன் தெரிவித்திருக்கின்றார்.

புதிய வரலாறு படைத்த IPL 2022 இறுதிப் போட்டி

அதேநேரம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, பங்களாதேஷ் டெஸ்ட் அணிக்கான புதிய தலைவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவுகளை அடுத்து தீர்மானிக்கும் என நம்பப்படுகின்றது.

இதேவேளை பங்களாதேஷ் – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் 16ஆம் திகதி என்டிகுவா நகரில் ஆரம்பமாகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<