மேஜர் கழக வளர்ந்துவரும் அணிகளுக்கான தொடரின் சம்பியனாகிய தமிழ் யூனியன்

Major Club Emerging 3-Day Tournament 2021/22

128

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவந்த மேஜர் கழக வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட போட்டித்தொடரின் சம்பியனாக தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் முடிசூடியுள்ளது.

போட்டித்தொடரின் இறுதிப்போட்டிக்கு செபஸ்தியனிட்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் தமிழ் யூனியன் கழகங்கள் தகுதிபெற்றிருந்தன. இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற செபஸ்தியனிட்ஸ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது.

>> இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

அதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தமிழ் யூனியன் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறியபோதும், ரவிந்து பெர்னாண்டோ தனியாளாக அரைச்சதம் கடந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுக்கொடுத்தார்.

ரவிந்து பெர்னாண்டோ 76 ஓட்டங்களையும், ரவீன் டி சில்வா 30 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, தமிழ் யூனியன் அணி முதல் இன்னிங்ஸில் 254 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில், தரிந்து ரத்நாயக்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்த செபஸ்தியனிட்ஸ் அணிக்கு, தமிழ் யூனியன் அணியின் டிலும் சுதீர அபார பந்துவீச்சால் அழுத்தம் கொடுத்தார். இவர் 7 விக்கெட்டுகளை மொத்தமாக சாய்க்க, தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய செபஸ்தியனிட்ஸ் அணி 167 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. செபஸ்தியனிட்ஸ் அணி சார்பில், விமுத் சப்னக 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் 87 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தமிழ் யூனியன் அணி ஓட்டங்களை குவிக்க தடுமாறியது. பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த டிலும் சுதீர அதிகபட்சமாக 36 ஓட்டங்களையும், சந்தூஷ் குணதிலக்க 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, தமிழ் யூனியன் அணி வெறும் 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் மனெல்கர் டி சில்வா 5 விக்கெட்டுகளையும், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தரிந்து ரத்நாயக்க 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 211 என்ற வெற்றியிலக்கை நோக்கி மூன்றாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய செபஸ்தியனிட்ஸ் அணியின் முதல் 3 விக்கெட்டுகளும் 19

ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. எனினும் விசால் சில்வா மற்றும் விமுத் சப்னாக ஆகியோர் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பி அணியை மீட்டெடுத்தனர்.

ஆனால் விஷால் சில்வா 33 ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேற, அரைச்சதம் கடந்த விமுத் சப்னக 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவர்களின் ஆட்டமிழப்புகள் அணிக்கு பின்னடைவை கொடுத்தது. இறுதியாக சமில்க விக்மரதிலக்க (14) மற்றும் டெஹான் ஸ்கெப்டர் (8) ஆகியோர் போட்டியை சமநிலைக்கு அழைத்துச்செல்ல முற்பட்டபோதும், ஆட்டநேரம் நிறைவடையவிருந்த ஒருசில நிமிடங்களுக்கு முன்னர் தன்னுடைய ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி டிலும் சுதீர அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

செபஸ்தியனிட்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தமிழ் யூனியன் வளர்ந்துவரும் அணி சம்பியனாக முடிசூடியது.

இந்த போட்டித்தொடரை பொருத்தவரை கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் வீரர் அவிஷ்க பெரேரா 9 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் மற்றும் 2 அரைச்சதங்கள் அடங்கலாக 663 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டதுடன், தமிழ் யூனியன் அணியின் பந்துவீச்சாளர் டிலும் சுதீர 10 இன்னிங்ஸ்களில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் – 254/10 (71.5), ரவிந்து பெர்னாண்டோ 76, ரவீன் டி சில்வா 30, தரிந்து ரத்நாயக்க 115/5

செபஸ்தியனிட்ஸ் – 167/10 (67.1), விமுத் சப்னாக 46, டிலும் சுதீர 65/7

தமிழ் யூனியன் (2வது இன்னிங்ஸ்) – 123/10 (45), டிலும் சுதீர 36, சந்துஸ் குணதிலக்க 32, மானெல்கர் டி சில்வா 27/5, தரிந்து ரத்நாயக்க 56/4

செபஸ்தியனிட்ஸ் (2வது இன்னிங்ஸ்) – 166/10 (57.4), விமுத் சப்னாக 52, விசால் டி சில்வா 33, டிலும் சுதீர 61/5

முடிவு – தமிழ் யூனியன் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<