ஹார்ட்லியின் சுகிஸ்டன் தங்கம் வெல்ல; அபிநாயாவிற்கு 3ஆவது பதக்கம்

Ritzbury Sir John Tarbat Athletic Championship 2023

47

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று (14) ஆரம்பமாகிய சேர். ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் வடக்கு மாகாணத்துக்கான முதல் பதக்கத்தை யாழ். பருத்தித்துறை, ஹார்ட்லி கல்லூரி வீரர் ஏ. சுகிஸ்டன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்து அசத்தினார்.

18 வயதின் கீழ் ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குகொண்ட சுகிஸ்டன், 41.60 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

கல்வி அமைச்சு மற்றும் ,லங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 91ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்று (13) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

16, 18 மற்றும் 20 வயது ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் நான்கு புதிய போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் 3 சாதனைகளும், பெண்கள் பிரிவில் ஒரு சாதனையும் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

18 வயதின் கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி தகுதிகாண் ஓட்டப் போட்டியில் அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அயோமால் அகலங்க புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அதே பாடசாலையைச் சேர்ந்த எஸ். ஹிமாஷனி, 1 நிமிடம் 05.3 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

16 வயதின் கீழ் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ரி. மெண்டிஸ் 2.00 மீட்டர் உயரம் தாவி புதிய போட்டிச் சாதனை நிலைநாட்டினார்.

அதேபோல, 18 வயதின் கீழ் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் காவத்தை மத்திய கல்லூரியைச் சேர்ந்த கெ.எம். யசிறு 16.19 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேவேளை, 16 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் விக்டோரியா கல்லூரியைச் சேர்ந்த ஜே. ரூபிகா (2.20 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும் அவரது சக கல்லூரி வீராங்கனை பீ. தர்ஷிகா (2.20 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். அதே கல்லூரியைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை கே. வைஷ்ணவி (2.20 மீட்டர்) 4ஆவது இடத்தைப் பெற்றார்.

20 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீராங்கனை பீ. டன்ஷிகா 2.70 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும், விக்டோரியா கல்லூரி வீராங்கனை எஸ். கிறிஸ்டிகா 2.40 மீட்டர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.

இதனிடையே, 18 வயதின் கீழ் பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப் போட்டியை 11 நிமிடங்கள், 10.2 செச்கன்களில் நிறைவு செய்த கண்டி திகன ரஜவெல்ல இந்து தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். அபிநயா வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

முன்னதாக, இவர் கடந்த மே மாதம் நடைபெற்ற சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 18 வயதின்கீழ் பெண்களுக்கான 2 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் ஓட்டம் மற்றும் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார்.

எனவே, இந்த ஆண்டில் ,துவரை நடைபெற்ற சேர். ஜோன் டாபர்ட் மெய்யவல்லுனர் போட்டிகளில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என 3 பதக்கங்களை அபிநயா வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<