கோலூன்றிப் பாய்தலில் யாழ். வீராங்கனை டக்சிதா புதிய சாதனை

47th National Sports Games

251

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 47ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (24) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

போட்டித் தொடரின் முதல் நாளில் 8 போட்டி நிகழ்ச்சிகளின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றதுடன், 2 புதிய போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணம் சார்பில் போட்டியிட்ட நேசராசா டக்சிதா தங்கப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 3.50 மீட்டர் உயரத்தை தாவியிருந்தார். இது புதிய போட்டிச் சாதனையாகவும் பதிவாகியது.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முன்னாள் தேசிய சம்பியனான வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரனால் 2018இல் நிலைநாட்டிய 3.48 மீட்டர் சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு டக்சிதா முறியடித்தார்.

முன்னதாக இந்த மாத முற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் யாழ். மெய்வல்லுனர் சங்கம் சார்பில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் போட்டியிட்ட டக்சிதா 3.60 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டியில் மேல் மாகாண வீராங்கனை யூ.ரி. விக்ரமசேகர (3.20 மீட்டர்.) வெள்ளிப் பதக்கத்தையும், மத்திய மாகாண வீராங்கனை கே. கொடிதுவக்கு (3.00 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

அதேபோல, பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த வி. லக்மாலி 44.59 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப் போட்டியில் பங்குகொண்ட வட மாகாண வீராங்கனை எஸ். செவ்வானம் (33.19 மீட்டர்) 7ஆம் இடத்தைப் பிடித்தார்.

இதனிடையே, பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் மத்திய மாகாண வீராங்கனை வத்சலா ஹேரத் தங்கப் பதக்கத்தை வென்றார். போட்டியை நிறைவு செய்ய 36 நிமிடங்கள், 10.20 செக்கன்களை அவர் எடுத்தார். இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகள் மெய்வல்லுனரில் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றவராகவும் அவர் இடம்பிடித்தார்.

ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் மேல் மாகாண வீரர் ஹேமன்த குமார (14 நி. 38.80 செக்.) தங்கப் பதக்கத்தை; வென்றெடுத்தார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சப்ரகமுவ மாகாணம் சார்பில் போட்டியிட்ட தேசிய சம்பியனான சுமேத ரணசிங்க 77.23 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். குறித்த போட்டியில் இளம் வீரர் ருமேஷ் தரங்க 76.45 மீட்டர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், மற்றுமொரு முன்னாள் தேசிய சம்பியனான சம்பத் ரணசிங்க 71.80 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.  இப் போட்டியில் ஊவா மாகாணம் சார்பில் போட்டியிட்ட கே.ஜீ. யோகராஜ் (68.14 மீட்டர்) 4ஆம் இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில், பெண்களுக்கான முப்பாய்ச்சலில் மேல் மாகாண வீராங்கனை எஸ். உபேஷ்கா (13.05 மீட்டர்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டம் (41.43 செக்.) மற்றும் பெண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டம் (48.54 செக்.) ஆகிய இரண்டு போட்டிகளிலும் தென் மாகாண அணிகள் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தின.

இதேவேளை இன்று (24) பிற்பகல் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் நிகழ்வையும் ஆரம்பித்துவைத்தார்.

இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா நிகழ்வில் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மகேசன், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் (பேராசிரியர்) ஷெமல் பெர்னாண்டோ, மாகாணங்களின் விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர்கள் மற்றும் விளையாட்டுத் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய விளையாட்டு போட்டிகள் தீபத்தை ஜீடோ மற்றும் மல்யுத்த வீரர் ஈ.எம்.சி ப்ரியங்கர மற்றும் மெய்வல்லுனர் வீராங்கனை ஷிவந்தி ஜயதிலக்க ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

அதேபோல, ஆரம்ப விழா வைபவத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்பு சேவைகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 1000 பேர் கலை, கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

நாளை போட்டிகளின் 2ஆவது நாளாகும்.

 >>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<