சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் தொடருக்கு Ritzbury அனுசரணை

114

இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 90வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சேர். ஜோன் டாபர்ட் (சிரேஷ்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு, சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின், முன்னணி சொக்லட் வர்த்தக நாமமான Ritzbury தொடர்ச்சியாக 10ஆவது தடவையாக அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு மீண்டும் நடைபெறவுள்ள சேர் ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு கடந்த 23ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் குசல் பெர்னாண்டோ, கல்வி அமைச்சின் விளையாட்டுப் பணிப்பாளர் உபாலி அமரதுங்க, ரிட்ஸ்பரியின் விற்பனை பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா மற்றும் பொருட்கள் பிரிவு முகாமையாளர் அருண லியனபத்திரன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பாடசாலை மெய்வல்லுனர் துறையில் மிகவும் பழமையான மெய்வல்லுனர் போட்டித் தொடராக விளங்கும் சேர் ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் 90 ஆண்டு வரலாற்றைக் கொண்டுள்ளது. அத்துடன், இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டில் பல திறமையான வீரர்களை உருவாக்க காரணமாக விளங்கிய முதன்மையான மெய்வல்லுனர் தொடரும் இதுவாகும்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தவைவர் குசல் பெர்னாண்டோ,

”சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் போட்டித் தொடரை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இந்தப் போட்டித் தொடரை நடத்துமாறு கோரியவுடன் அதற்கு அனுசரணை வழங்க முன்வந்த Ritzbury நிறுவனத்துக்கு நன்றி. இதேவேளை, சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் ஒவ்வொரு கல்வி வலயங்களாக நடத்தப்பட்டு இறுதிப் போட்டி டிசம்பரில் நடைபெறும் மற்றும் சிரேஷ்ட போட்டித் தொடர் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறும்” என தெரிவித்தார்.

இதனிடையே, இம்முறை சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு அனுசரணை வழங்குவது குறித்து Ritzbury நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

”Ritzbury எப்போதும் பாடசாலை மட்டத்தில் உள்ள திறமையான மெய்வல்லுனர் வீரர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மேலும் இலங்கையின் பாடசாலை மட்ட முதன்மையான மெய்வல்லுனர் தொடருக்கு மீண்டும் அனுசரணை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

செப்டெம்பர் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் சேர் ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடர் நடைபெறவுள்ளது. இம்முறை போட்டித் தொடரில் 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட வீரர்கள் போட்டிகளில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இம்முறை போட்டித் தொடரில் 800 பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 18,000 வீரர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, இந்த ஆண்டுக்கான சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது வலய மட்டப் போட்டிகள் ஆகஸ்ட் 30 மற்றும் 31ஆம் திகதிகள் அநுராதபுரத்திலும், இரண்டாவது வலய மட்டப் போட்டிகள் செப்டெம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் அம்பிலிபிட்டிய மகாவலி மைதானத்திலும் மூன்றாம் வலய மட்டப் போட்டிகள் செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை பண்டராகம பொது மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இதன்படி, சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி 12, 13, 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவுகளின் கீழ் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<