FIFA கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ரியல் மெட்ரிட் தகுதி

348
@Getty Images

கரேத் பேல் மாற்று வீரராக வந்து கடைசி நேரத்தில் புகுத்திய கோல் மூலம் FIFA கழக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதியில் அல் ஜஸீரா அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 14ஆவது கழக உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதியிலேயே ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து தேர்வான ரியல் மெட்ரிட் அணி புதன்கிழமை (13) ஐக்கிய அரபு இராச்சியத்தின் அல் ஜஸீரா அணியை எதிர்கொண்டது.

UEFA சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் பரபரப்பு போட்டிகள்

உக்ரைனின் கீவ் நகரில் நடைபெறவுள்ள UEFA..

எனினும், பிரேஸில் முன்கள வீரர் ரொமரின்ஹோ போட்ட கோல்மூலம் அல் ஜஸீரா அணி முதல் பாதி ஆட்டத்தில் முன்னிலை பெற்று பலம்கொண்ட ஐரோப்பிய அணிக்கு நெருக்கடி கொடுத்தது. எனினும் பல கோல் முயற்சிகளுக்கு பின் போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ பதில் கோல் ஒன்றை புகுத்தி போட்டியை சமன் செய்ததோடு கடைசி நேரத்தில் அந்த அணியால் வெற்றி கோலையும் பெற முடிந்தது.

ஆண்டுதோறும் நடைபெறும் கழக உலகக் கிண்ண போட்டியில் FIFA அமைப்பின் ஆறு மண்டலங்களின் சம்பியன் கழகங்கள் பங்கேற்பதோடு இம்முறை தொடரில் ஏழாவது அணியாக போட்டியை நடாத்தும் ஐக்கிய அரபு இராச்சிய புரோ லீக் சம்பியனான அல் ஜஸீரா அணியும் பங்கேற்றது.

அல் ஜஸீரா பிளோ ஓப் சுற்றில் ஒக்லாந்து சிட்டி கால்பந்து கழகத்தையும் (1-0) காலிறுதியில் ஆசிய சம்பியன் லீக் கிண்ணத்தை வென்ற ஜப்பானின் உராவா ரெட் டயமண்ட்ஸ் (1-0) அணியையும் வீழ்த்தியே அரையிறுதிக்கு முன்னேறியது.

இம்முறை UEFA சம்பியன்ஸ் லீக்கை வென்றதன் மூலம் ஐரோப்பா மண்டலத்தில் இருந்து தகுதி பெற்ற ரியல் மெட்ரிட் அணி நேரடியாக அரையிறுதியில் ஆடுவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் வந்தது.

அபுதாபியில் நடைபெற்ற அரையிறுதியில் ரியல் மெட்ரிட் அணி ஆரம்பத்தில் இருந்தே கோல்கள் போட கடுமையாக முயன்றது. முதல் 20 நமிடங்களில் ரொனால்டோ, லூகா மொட்ரிக் மற்றும் கரிம் பென்செமா ஆகியோர் எதிரணி கோலுக்கு பந்தை புகுத்த பல தடவைகள் முயன்றபோதும் அல் ஜஸீரா கோல் காப்பாளர் அலி காசிப் அரண்போல் இருந்து அந்த வாய்ப்புகள் அனைத்தையும் சிதறடித்தார்.

அல் ஜஸீரா பலம்மிக்க அணியை எதிர்கொள்ளும் மூலோபாயத்துடனேயே இந்தப் போட்டியில் களமிறங்கியதை காண முடிந்தது. போதுமான வரை அழுத்தம் கொடுத்து எதிரணியின் தற்காப்பு அரணை முறியடிக்க அந்த அணி போராடியது.   

சிறந்த கால்பந்து வீரராக மெஸ்சியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ

இந்த தலைமுறையின் தலைசிறந்த கால்பந்து…

இந்த திட்டம் அல் ஜஸீரா அணிக்கு 41 ஆவது நிமிடத்தில் கைகொடுத்தது. ரியல் மெட்ரிட் கோல் காப்பாளர் நாவாஸ் சற்று முன்னேறி வந்து செய்த தவறை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட ரொமரின்ஹோ, பின்கள வீரரா ஏமாற்றி பந்தை வேகமாக உதைத்து கோல் புகுத்தினார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டம் முடிவடையும்போது அல் ஜஸீரா அணி அதிர்ச்சி தரும் வகையில் 1-0 என முன்னிலை பெற்றது.

எனினும் முதல் பாதியில் ரியல் மெட்ரிட் அடித்த இரண்டு கோல்களும் விதி மீறல்களாக அறிவித்து நிராகரிக்கப்பட்டன.  கரிம் பென்செமா தலையால் முட்டி கோல் புகுத்தியபோது ரொனால்டோ இழைத்த தவறால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. வீடியோ உதவியுடன் அது ஓப்சைட் என தீர்ப்பளிக்கப்பட்டது.

முதல் பாதி: அல் ஜஸீரா 1 – 0 ரியல் மெட்ரிட்

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவிலேயே அல் ஜஸீரா அணியின் அல் கசெய்ப் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தது. இதற்கு ஒரு நிமிடம் கழித்து இதுவரை நேரமும் கோல் போட போராடிக்கொண்டிருந்த ரொனால்டோவுக்கு வலைக்குள் பந்தை செலுத்த வாய்ப்பு கிடைத்தது.

53 ஆவது நிமிடத்தில் இடது கோணர் திசையில் இருந்து பந்தை பெற்ற விரைவில் ரொனால்டோ அதனை அபாரமாக கோலுக்குள் புகுத்தினார். இதன்மூலம் கழக உலகக் கிண்ண போட்டிகளில் அதிக கோல் புகுத்தியவராக அவர் சாதனை படைத்தார். இந்த தொடர்களில் அவர் பெறும் 6 ஆவது கோல் இதுவாகும். இதற்கு முன் FIFA கழக உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அதிக கோல் போட்டோர் வரிசையில் அவர் லியோனல் மெஸ்ஸி, லுவிஸ் சுவாரெஸ் மற்றும் செசார் டெல்கடோவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து போட்டியில் ரியல் மெட்ரிட்டின் ஆதிக்கம் நீடித்தது. பென்சமா அந்த அணிக்கு வெற்றி கோலை புகுத்த இரு தடவைகள் எதிரணியின் கோல் கம்பத்தை ஆக்கிரமித்தபோதும் அந்த முயற்சிகள் வெற்றி தரவில்லை.  

4ஆவது தடவையாகவும் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு

2017ஆம் ஆண்டுக்கான பிபாவின் (FIFA) சிறந்த கால்பந்து.

போட்டி இறுதி நேரத்தை எட்டியபோது ரியல் மெட்ரிட் முகாமையாளர் சினேடின் சிடேன் அதிரடி மாற்றம் ஒன்றை செய்தார். 81 ஆவது நிமிடத்தில் பென்சமாவுக்கு பதில் கரேத் பேல்லை களமிறக்கினார்.

கடந்த செப்டம்பரில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு பின் 28 வயதான கரேத் பேல் களமிறங்குவது இது இரண்டாவது முறையாக இருந்தது. எனினும் அவர் வந்த வேகத்திலேயே கோல் ஒன்றை போட்டார். அது ரியல் மெட்ரிட் அணியின் வெற்றி கோலாக இருந்தது.

இந்தப் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி கோல் போட 35 முயற்சிகளில் ஈடுபடும்போது அல் ஜஸீரா அணி 6 முயற்சிகளையே பெற்றது. போட்டியில் கிடைத்த 19 கோணர் கிக் வாய்ப்புகளையும் ரியல் மெட்ரிட் அணியே பெற்றது.   

முழு நேரம்: அல் ஜஸீரா 1 – 2 ரியல் மெட்ரிட்

கோல் பெற்றவர்கள்

ரியல் மெட்ரிட் – கிறிஸ்டியானோ ரொனால்டோ 53’, கரேத் பேல் 81’

அல் ஜஸீரா – ரொமரின்ஹோ 41’

கழக உலகக் கிண்ண போட்டியில் டிசம்பர் 12ஆம் திகதி நடைபெற்ற முதல் அரையிறுதியில் கொன்காகப் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற மெக்சிகோவின் பசுக்கா அணியை தென் அமெரிக்க கழக சம்பியனான பிரேசிலின் கிரிமியோ 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2012 ஆம் ஆண்டுக்கு பின் தென் அமெரிக்க அணியொன்று கழக உலகக் கிண்ணத்தை வெல்லும் இறுதிப் போட்டியில் கிரிமியோ அணி, ரியல் மெட்ரிட்டை எதிர்கொள்ளவுள்ளது.  

ரியல் மெட்ரிட் தனது கழக உலகக் கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளவும் 2017ஆம் ஆண்டில் ஐந்தாவது கிண்ணத்தை வெல்லவும் எதிர்பார்த்துள்ளது.  

சினேடின் சிடேனின் அணி ஏற்கனவே லா லிகா, சம்பியன்ஸ் லீக், UEFA சுப்பர் லீக் மற்றும் சுப்பர் கோபா டி இஸ்பானா கிண்ணங்களை வென்றுள்ளது.  

கடந்த ஆண்டு கழக உலகக் கிண்ண போட்டியில் ரியல் மெட்ரிட் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் ஜப்பானின் கசிமா அன்ட்லேர்ஸை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. அந்தப் போட்டியில் ரொனால்டோ ஹட்ரிக் கோல் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது.   

கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரும் சனிக்கிழமை (16) அபூதாபி செயித் ஸ்போட்ஸ் சிட்டி அரங்கில் நடைபெறவுள்ளது.