தசுன் ஷானக தலைமையில் சாதிக்க காத்திருக்கும் தம்புள்ள ஜயண்ட்ஸ்

Lanka Premier League 2021

123

லங்கா பிரீமியர் லீக்கில் கடந்த ஆண்டு அரையிறுதிவரை முன்னேறியிருந்த தம்புள்ள வைகிங் அணி, இந்த ஆண்டு புதிய உரிமையாளர்களுடன் தம்புள்ள ஜயண்ட்ஸ் என்ற பெயரின் கீழ் தங்களுடைய கிண்ண கனவை நனவாக்கும் நோக்கில் களம் காணுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான தலைவர் தசுன் ஷானக தலைமையில், தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி தங்களுடைய பயணத்தை இந்த ஆண்டும் தொடர்கிறது.

>>LPL 2021 இல் களமிறங்கும் தமிழ் பேசும் வீரர்கள்

தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியானது, மிகவும் சமனிலைவாய்ந்த குழாமாக இந்த ஆண்டு LPL தொடரில் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, அணித்தலைவர் தசுன் ஷானக அனுபமற்ற இலங்கை அணியை T20 T20 உலகக்கிண்ணத்தில் சிறப்பாக வழிநடத்தியிருந்த நிலையில், பலமான குழாத்துடனும், தனது சொந்த மண்ணில் சிறந்த திட்டங்களை வகுத்து வெற்றிகளை பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கையும் அணியின் மத்தியில் உருவாகியுள்ளது.

தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியின் உள்ளூர் வீரர்களை பொருத்தவரை, இலங்கை கிரிக்கெட் சபையின் தடைக்கு முகங்கொடுத்திருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவர், தன்னுடைய திறமையை LPL தொடரில் வெளிப்படுத்தி, தேசிய அணியின் வாய்ப்பை உறுதிசெய்யும் மனநிலையுடன் உள்ளார்.

அதேநேரம், கடந்த ஆண்டு LPL தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியேற்றப்பட்ட சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன, இம்முறை தொடரில் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த காத்திருக்கிறார்.

ரமேஷ் மெண்டிஸ் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்த விதத்தை பார்க்கும் போது, தென்னாபிரிக்க சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீருடன் அணியின் சுழல் பந்துவீச்சுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இளம் வீரர் நுவனிந்து பெர்னாண்டோ கடந்த காலங்களில் சிறப்பாக பிரகாசித்துவருவதன் காரணமாக அவர் அணியின் பிரதான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுவதுடன், இரண்டு கைகளால் பந்துவீசும் தரிந்து ரத்நாயக்கவுக்கும் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்களை பொருத்தவரை அனுபவமிக்க சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர்,  சிக்ஸர்களை குவிக்கக்கூடிய ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் நஜிபுல்லாஹ் ஷர்டான், பில் ஷோல்ட், சொஹைப் மக்சூட் மற்றும் T20 உலகக்கிண்ணத்தில் வேகப்பந்துவீச்சில் அசத்திய ஜோஸ் லிட்ல் போன்ற வீரர்கள் தம்புள்ள வைகிங் அணிக்கு மேலதிக ஆற்றலை கொடுக்கக்கூடியவர்கள்.

வேகப்பந்துவீச்சை பொருத்தவரை இலங்கை அணியில் தற்போதுள்ள அனுபவமிக்க வீரர் நுவான் பிரதீப் இணைக்கப்பட்டுள்ளதுடன், தென்னாபிரிக்காவின் மார்ச்சண்ட் டி லேன்ங் சிறந்த அனுபவத்தையும், திறமையையும் கொண்டுள்ள வேகப்பந்துவீச்சாளராக உள்ளார். எனினும், நுவான் பிரதீப் தொடர்ந்து உபாதைக்கு முகங்கொடுத்து வருவதன் காரணமாக, உள்ளூரில் விளையாடிய அனுபவம் கொண்ட ஏனைய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமை அணிக்கு சற்று பின்னடைவாகவே தெரிகின்றது.

எவ்வாறாயினும் ஒட்டுமொத்தமாக தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியானது, இளம் மற்றும் திறமையின் மீது முற்றுமுழுதான நம்பிக்கை வைத்துள்ள குழாமாக தங்களை வெளிக்காட்டுவதற்கான திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. எனவே, அவர்களின் இந்த இளம் மற்றும் திறமையை கொண்டுள்ள அணி எந்தளவு பிரகாசிப்புகளை வழங்கும் என்பதை பொருத்திருந்ததான் பார்க்கவேண்டும்.

உள்ளூர் வீரர்கள் – தசுன் ஷானக (தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, நுவான் பிரதீப், தரிந்து ரத்நாயக்க, லஹிரு உதார, சச்ச டி அல்விஷ், முதித லக்ஷான், கலன பெரேரா, சச்சித்த ஜயதிலக்க, மதுஷான் ரவிச்சந்திரகுமார், ஜனித் லியனகே, சாமிக்க எதிரிசிங்க, டில்ஷான் முனவீர, நுவனிந்து பெர்னாண்டோ

வெளிநாட்டு வீரர்கள் – இம்ரான் தாஹீர் (தென்னாபிரிக்கா), சொஹைப் மக்சூட்(பாகிஸ்தான்), பில் ஷோல்ட் (இங்கிலாந்து), மார்ச்சண்ட் டி லேன்ங் (தென்னாபிரிக்கா), ஜோஸ் லிட்ல் (அயர்லாந்து), நஜிபுல்லாஹ் ஷர்டான் (ஆப்கானிஸ்தான்)

உத்தேச பதினொருவர் நிரோஷன் டிக்வெல்ல, டில்ஷான் முனவீர, நுவனிந்து பெர்னாண்டோ, தசுன் ஷானக (தலைவர்), நஜிபுல்லாஹ் ஷர்டான், சாமிக்க கருணாரத்ன, ரமேஷ் மெண்டிஸ், மார்ச்சண்ட் டி லேன்ங், இம்ரான் தாஹீர், நுவான் பிரதீப்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<