பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்கா அணியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி இங்கிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென்னாப்பிரிக்கா குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (13) அறிவித்துள்ளது.
டெம்பா பவுமா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ட்ரிச் நோர்ட்ஜே மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதில் ஆன்ட்ரிச் நோட்ர்ஜே கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காயத்துக்குள்ளாகினார். இதனால் அந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத்தை தவறவிட்ட அவர், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கிட்டத்திட்ட் 15 மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சம்பியன்ஷ் கிண்ணத்துக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு
- சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான ஆப்கான் குழாம் அறிவிப்பு
- சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு
அதேபோல, கடந்தாண்டு நவம்பர் மாதம் காயத்தை சந்தித்த மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடியும் தற்போது காயத்தில் இருந்து பூரண குணமடைந்துள்ளதால் மீண்டும் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதுதவிர்த்து டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸட்ப்ஸ், வியான் முல்டர் மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சென், காகிசோ ரபாடா ஆகியோரும் தங்களது இடத்தை உறுதிசெய்துள்ளனர்.
மறுபுறத்தில், ரீஸா ஹென்றிக்ஸ், ஜெரால்ட் கோட்ஸி, இளம் வீரர் குவேனா மபாகா உள்ளிட்டோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான தென்னாப்பிரிக்கா குழாம் விபரம்: டெம்பா பவுமா (தலைவர்), டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், எய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராஸ்ஸி வான்டெர் டுசென்.
தென்னாப்பிரிக்கா போட்டி அட்டவணை
பெப்ரவரி 21 – தென்னாப்பிரிக்கா எள ஆப்கானிஸ்தான், கராச்சி
பெப்ரவரி 25 – தென்னாப்பிரிக்கா எள ஆஸ்திரேலியா, ராவல்பிண்டி
மார்ச் 01 – தென்னாப்பிரிக்கா எள இங்கிலாந்து, கராச்சி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<