டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய அஸ்வின்

206

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3ஆவது வீரர் மற்றும் 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனைகளை இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகள் மோதும் போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (09) நாக்பூரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, இந்தியாவின் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 63.5 ஓவர்களில் 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதில், அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்குப் (619 விக்கெட்டுகள்) பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

அதேபோல இந்த சாதனையை குறைவான போட்டிகளில் (89 இன்னிங்ஸ்) விளையாடி விரைந்து எட்டிய இரண்டாவது வீரராக அஸ்வின் இடம்பிடித்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 80 இன்னிங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் சுழல் பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களையும், 708 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.

அவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் ப்ரோட் 566 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களையும் எடுத்துள்ளார். தற்போது அஸ்வின் இந்த சாதனையை படைத்ததன் மூலம் இந்தியாவில் இருந்து இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

37 வயதான அஸ்வின் இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3043 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதில் 5 சதங்களும், 13 அரைச் சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், அஸ்வின் 113 ஒருநாள் போட்டிகளில் ஆடி 707 ஓட்டங்களையும், 151 விக்கெட்டுகளையும் வீழ்;த்தியுள்ளார்.

அதுதவிர, 65 T20I போட்டிகளில் ஆடி 184 ஓட்டங்களையும், 72 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் கடந்த 2011இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களமிறங்கினார். முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற அவர், இதுவரை 9 தடவைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள அஸ்வின், டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<