இலங்கையின் இறுதி போட்டி வாய்பிற்கு ஆஸி. உதவும் – மஹேல

1959

இம்முறை ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற அவுஸ்திரேலியா உதவி செய்யும் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போர்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. போர்டர் கவாஸ்கர் கிண்ணத்துக்காக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வியாழக்கிழமை (09) நாக்பூர் மைதானத்தில் ஆரம்பமாகும்.

இந்த டெஸ்ட் தொடரானது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் அணிகள் எது என்பதை தீர்மானிக்கும் முக்கிய தொடராகவும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, 2004ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் அவுஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. அதேநேரம், இந்திய அணி கடைசியாக அவுஸ்திரேலியா சென்ற 2 சுற்றுப்பயணங்களிலும் டெஸ்ட் தொடர்களை அடுத்தடுத்து வென்று வரலாற்று சாதனை படைத்தது.  எனவே, இந்த முறை இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் அவுஸ்திரேலியா அணி உள்ளது.

சொந்த மண்ணில் மிக வலுவான மற்றும் வீழ்த்துவதற்கு கடினமான இந்திய அணியை டெஸ்ட்டில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவிடம் டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவாத இந்திய அணி, 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் எந்த அணியிடமும் டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை.

இந்த முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மற்றும் பெட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஆகிய 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த வலுவான அணிகளாக திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இந்த நிலையில், இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தனே கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மஹேல,

”இது மிகச்சிறந்த டெஸ்ட் தொடராக இருக்கும். இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்துவீச்சாளர்களை அவுஸ்திரேலிய வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் மற்றும் இந்திய வீரர்கள் அவுஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது முக்கியம். இந்த டெஸ்ட் தொடரை எந்த அணி வெற்றியுடன் ஆரம்பிக்குமோ, அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

இந்த டெஸ்ட் தொடரில் யார் வெற்றி பெறுவார் என்று கணிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனாலும் ஒரு இலங்கை அணியின் முன்னாள் வீரராக இதை என்னால் செய்ய முடியும். என்னை பொறுத்தவரை, இரண்டு அணிகளில் அவுஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்கள் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுவார்கள் என்று கணிக்கிறேன். அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ரோஹித் சர்மா எப்படி தலைவர் பதவியை வகிக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்க்கவும் ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு மஹேல ஜயவர்தனவின் சொந்த நாடான இலங்கை அணிக்கும் தகுதி பெற வாய்ப்புள்ளது.

அதற்கு அவுஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவுகள் இலங்கைக்கு சாதகமாக அமைய வேண்டும். அதே போல நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி சிறப்பாக ஆடி சிறந்த முடிவொன்றைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.

எவ்வாறாயினும், இம்முறை ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கும் தான் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில், இலங்கை அணி இம்முறை ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதியைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்து இருப்பது மற்றும் இலங்கை அணியின் இதுவரையான பயணம் மிகவும் ஊக்கமளிப்பதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

”உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஆரம்பத்தில இலங்கை அணி உலக டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் இருந்தது என்று நான் நினைக்கிறேன். இந்த 2 ஆண்டுகள் காலப்பகுதியில் இலங்கை அணி வீரர்கள் சில அற்புதமான கிரிக்கெட்டையும், நிலையான கிரிக்கெட்டையும் விளையாடியுள்ளனர், இதன்காரணமாகவே இம்முறை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புக்கான போட்டியில் இலங்கை அணியும் உள்ளது” என்றார்.

இதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி பங்கேற்கவுள்ள இறுதி டெஸ்ட் தொடர் நியூசிலாந்து அணிக்கெதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. எனவே இலங்கை அணி தமது கடைசி தொடரில் பிரபல நியூசிலாந்து அணியை சந்திப்பது தொடர்பில் மஹேல கருத்து தெரிவிக்கையில்,

”நியூசிலாந்து ஒரு சிறந்த அணியாகும், எனவே இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஒரு கண்கவர் தொடராக இருக்கும். மேலும் இலங்கைக்கு அந்த தொடரை வெற்றி கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு சில உதவிகளைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். இது கடினமான தொடராகவும் இருக்கும்” என்று மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<