கடந்த 1992ஆம் ஆண்டு, நியூ பிளைமவுத் நகர மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக நடைபெற்றிருந்த ஒரு நாள் போட்டியொன்றில், அவ்வணியினால் முதலில் துடுப்பாடி பெறப்பட்ட 312 ஓட்டங்கள் என்கிற இலக்கினை விரட்டிய இலங்கை அணியானது, ஒரு நாள் போட்டிகளில் 300 இற்கு மேலான ஓட்டங்களினை எட்டிப்பிடித்த முதல் அணி என்னும் வரலாற்று சாதனையை பதிவு செய்திருந்தது.

இது நடந்து, 25 வருடங்களின் பின்னர் இதற்கு பரிகாரமாக ஜிம்பாப்வே அணியானது காலியில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள்  போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி, இலங்கை மண்ணில் 300 இற்கு மேலான ஓட்டங்களை விரட்டி வெற்றி பெற்ற முதலாவது அணியாக தம்மை பதிவு செய்துள்ளது.

இலங்கை மண்ணில் வரலாறு படைத்தது ஜிம்பாப்வே

போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கி, இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்ததன் பின்னர், ஜிம்பாப்வே அணியானது இலக்கை எட்ட மேற்கொண்டிருந்த பிரயத்தனமானது மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது. போட்டியின் ஆட்ட நாயகனாக மாறியிருந்த சோலமன் மிர், தான் மொத்தமாக பெற்ற 112 ஓட்டங்களில் 87 ஓட்டங்களினை லெக் திசைகளில் மாத்திரம் லாவகமாக பந்துகளைத் தட்டிவிட்டு  சேர்த்திருந்தார். இதனால், ஜிம்பாப்வே அணியானது இலகுவாக வெற்றியினை சுவைத்திருந்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் பின்னர் இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஜிம்பாப்வே அணியினை பாராட்டும் விதமாக கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது சுழல் வீரர்களினை சமாளித்து, ரிவர்ஸ் ஸ்வீப் (அடிகள்) மூலமும், ஸ்வீப் (அடிகள்) மூலமும் ஓட்டங்களினை சேகரித்த ஜிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்களை பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். அவர்கள் எமது சுழல் வீரர்களின் பந்து வீச்சு பாணிகளை முழுமையாக தமக்கு சாதமாக்கியிருந்தனர். எது எவ்வாறு இருப்பினும், நாம் பந்து வீச்சிலும், களத்தடுப்பிலும் மிகவும் மோசமாக செயற்பட்டிருந்தோம். அவர்களது துடுப்பாட்டத்திற்குரிய பலனை அவர்கள் பெற்றுக்கொண்டனர்.

அண்மைய காலங்களில் இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பானது அனைவராலும் விமர்சிக்கப்பட்ட பேசுபொருளாக மாறியிருந்தது. இந்நிலையில், இலங்கை அணி வீரர்களால் இந்தப் போட்டியிலும் மூன்று பிடியெடுப்புக்கள் தவறவிடப்பட்ட காரணத்தினால் இலங்கை அணியின் மீது விமர்சனங்கள் மேலும் தொடர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இலங்கை அணியின் களத்தடுப்பு குறித்து அணித் தலைவர் மெதிவ்ஸ் கடும் விசனத்தினையும் கோபத்தினையும் வெளிக்காட்டியிருந்தார்.

நாங்கள் முக்கிய தருணங்களில் பல பிடியெடுப்புக்களை தவறவிட்டிருந்தோம். நாங்கள் களத்தடுப்பிற்காக கடுமையான பயிற்சிகளை முன்னர் மேற்கொண்டிருந்தோம். ஆன போதிலும், முக்கிய தருணங்களில் நாம் தொடர்ந்தும் பிடியெடுப்புக்களை தவறவிடுவதானது எமது வெற்றியை கோட்டை விட காரணமாக அமைந்து விடுகின்றது. இந்த விடயங்களில் நாம் (அணியாக) நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் ஏமாற்றத்தினையும், மனவேதனையினையும் அளிக்கின்றது.

என தெரிவித்திருந்தார்.

இலங்கை அணியானது ஜிம்பாப்வே அணியுடனான முதல் போட்டியில் தவற விட்ட பிடியெடுப்புக்கள்

  • அமில அபொன்சோ வீசிய போட்டியின் பத்தாவது ஓவரின் போது சோலமன் மிர் (17 ஓட்டங்களுடன் இருந்த போது) இன் பிடியெடுப்பினை நிரோஷன் திக்வெல்ல தவறவிட்டிருந்தார்.
  • லஹிறு மதுசங்க வீசிய போட்டியின் 16 ஆவது ஓவரின் போது சீன் வில்லியம்ஸ் (13 ஓட்டங்களுடன் இருந்த போது) இன் பிடியெடுப்பினை தனுஷ்க குணத்திலக்க தவறவிட்டிருந்தார்.
  • அசேல குணரத்ன வீசிய போட்டியின் 29 ஆவது ஓவரில், மீண்டும் சோலமன் மிர் (94 ஓட்டங்களுடன் இருந்த போது) இன் பிடியெடுப்பு ஒன்றினை லசித் மாலிங்க தவறவிட்டிருந்தார்.

கடந்த வாரம் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் போதிய தரத்துடனான உடற்தகுதியில் காணப்படவில்லை என கடுமையான விமர்சனத்தினை வெளியிட்டிருந்தார்.

உலகில் காணப்படும் (கிரிக்கெட் அணிகளில்) இலங்கை வீரர்கள் மாத்திரமே தொப்பையான வயிற்றுடன் காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் இருப்பவர்கள் அதிக பிடியெடுப்புக்களை தவறவிடுவது ஆச்சரியமான விடயம் இல்லை. பிடியெடுப்புக்களை ஒரு புறம் வைத்துவிடுவோம், (இவர்களால்) மைதானத்தில் எத்தனை ஓட்டங்கள் விரயமாக்கப்படுகின்றன. பங்களாதேஷ் அணியினை எடுத்துப்பாருங்கள், அவர்களில் கூட எவரும் பாரிய தொப்பையான வயிற்றுடன் காணப்படவில்லை.என அமைச்சர் ஜயசேகர கூறியிருந்தார்.

ஷாமரியின் சதம் வீண்; அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு இலகு வெற்றி

மேலும், இந்தப் போட்டியில் அணியில் இணைக்கப்பட்டிருந்த அமில அபொன்சோ மிகவும் மோசமான பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்தார். அவரின் மூலம், வெறும் 7.8 ஓவர்களில் 77 ஓட்டங்கள் வரையில் வாரி வழங்கப்பட்டிருந்தது. ஜிம்பாப்வே வீரர்கள் சார்பில், அபொன்சோவின் ஓவரில் விக்கெட்டிற்கு பின்னால் அமைந்த திசையில் இலகுவாக 46 ஓட்டங்கள் வரையில் பெறப்பட்டிருந்தன. அணியில், எதிரணிக்கு தாக்குதல் தரும் விதமாக பந்து வீசும் ஆற்றல் கொண்டிருக்கும் லக்ஷன் சந்தகன் இருக்கும் போது அபொன்சோவிற்கு வாய்ப்பளித்தமை குறித்து பல கேள்விகள் எழுந்தன.  

இது குறித்து கருத்து தெரிவித்த மெதிவ்ஸ், சந்தகன் போட்டிக்கு முந்தைய நாளில் சற்று சுகவீனமுற்றிருந்தார். அதனால் அவருக்கு (பயிற்சி ஆட்டங்களிலிருந்து) முன்னரே வெளியேறும் நிலைமை ஏற்பட்டிருந்தது. எங்களது உடற்பயிற்சியாளர் அவருக்கு போட்டியின் நாளில் பந்து வீச முடியும் என அறிவித்திருந்தார். எனினும், சந்தகன் எதிர்பார்த்த பூரண சுகத்தினை பெற்றிருக்காத காரணத்தினாலும், அபொன்சோ பயிற்சிகளிலும், உடற்தகுதியிலும் சிறப்பாக காணப்பட்டிருந்ததாலும் நாம் அபொன்சோவினை அணியில் இணைத்து விளையாடுவது சிறப்பானது என எண்ணியிருந்தோம்.என குறிப்பிட்டிருந்தார்.

கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரரும், அது பெரியவராக இருப்பினும் சரி அல்லது சிறியவராக இருப்பினும் சரி, தமது பயிற்றுவிப்பாளர் மூலம் சொல்லப்பட்ட, “ பிடியெடுப்புக்கள் போட்டியினை வெற்றியாக்கும்” என்னும் விசேட விதியினை கற்றிருப்பார். ஆனால், சர்வதேச கிரிக்கெட் வீரர்களாக காணப்படும் இலங்கை அணி வீரர்கள் அந்த விதியினை துரதிஷ்டவசமாக மறந்து விட்டனர் போலத் தெரிகின்றது.

ஜிம்பாப்வேயுடனான தொடரில் இருந்து முழுமையாக நீக்கப்பட்ட குசல் பெரேரா

பிடியெடுப்புக்கள் போட்டியினை வெற்றியாக்கும் என்பது எமக்கு தெரியும். நாம் பிடியெடுப்புக்களை விடும் வேளையில், போட்டியில் தோல்வியடைவோம். இந்த போட்டியின் கதை போன்று, பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் பிடியெடுப்புக்களை தவற விட்ட காரணத்தினால் தான் நாம் தோல்வியுற்றிருந்தோம்.

அதோடு, அணியில் மிகவும் சிறந்த களத்தடுப்பு வீரர்களாக காணப்படுபவர்களும் பிடியெடுப்புக்களை கோட்டை விடுவது மிகவும் ஏமாற்றம் தருகின்றது. எம்மிடம் பல இளம் வீரர்கள் காணப்படுகின்றனர். நாம் மைதானத்தில் களத்தடுப்பிற்காக  நிற்கின்ற வேளையில், நேரான மனப்பாங்குடனும் சரியான உறுதியுடனும் காணப்பட வேண்டும். அதாவது, எமது மனப்பாங்கு களத்தடுப்பில் முழுமையாக  மாறவேண்டும். “

என மெதிவ்ஸ் மேலும் கருத்து வெளியிட்டிருந்தார்.

எதிர்வரும், ஜூலை 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலி மைதானத்தில் இரண்டாவது ஒரு நாள் போட்டி இடம்பெற இருப்பதால், இலங்கை அணிக்கு, ஜிம்பாப்வே அணியுடன் பெற்ற இந்த அவமான தோல்வியில் இருந்து மீள்வதற்கு ஒரு நாளே மீதமாக எஞ்சியிருக்கின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த மெதிவ்ஸ் நாங்கள் பயப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இன்னும் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. நாங்கள் சரியான மனநிலையை அடைந்து ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பாக செயற்பட வேண்டும். “ என இறுதியாகக் குறிப்பிட்டார்.