ஜிம்பாப்வேயுடனான தொடரில் இருந்து முழுமையாக நீக்கப்பட்ட குசல் பெரேரா

2692
Kusal Perera

இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, நாளை ஆரம்பமாகும் ஜிம்பாப்வே அணியுடனான கிரிக்கெட் தொடரில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நிறைவுற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணியுடனான மோதலின்போது சிறந்த முறையில் துடுப்பாடி வந்த குசல் பெரேரா, தொடை எலும்பில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக முழுமையாகத் துடுப்பாடாமல், மைதானத்தில் இருந்து இடையில் வெளியேறினார்.

விருந்தாளியாக வரும் ஜிம்பாப்வேயை இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளும்?

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட 17 வருடங்களின் பின்னர் இருதரப்பு..

குறித்த காயம் முழுமையாகக் குணமடையாத காரணத்தினாலேயே இவர் இத்தொடரில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், தொடர்ந்து ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கும் அவர் உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குசல் பெரேரா தொடரில் இருந்து நீக்கப்பட்டமை மற்றும் அவரது அடுத்த கட்டம் குறித்து கருத்து தெரிவித்த அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், ”குசல் பெரேரா இத்தொடரில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார். அவரது உபாதை குணமடைய சுமார் 8-12 வாரங்கள் காலம் எடுக்கும் என மருத்துவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான ஒரு நிலையில், அடுத்து இடம்பெறவுள்ள இந்திய அணியுடனான தொடரிலும் குசல் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. எனவே, அவர் குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டி உள்ளது” என்றார்.

அண்மையில் பங்களாதேசுடன் இடம்பெற்ற போட்டிகளுக்கு முன்னரான பயிற்சி ஆட்டத்தின்போதும் குசல் பெரேரா தொடை எலும்பு உபாதைக்கு உள்ளாகியிருந்தார். எனினும் ஒரு வாரம் அளவில் ஓய்வில் இருந்த அவர், உபாதையில் இருந்து மீண்டு, அவ்வணியுடனான T-20 போட்டியில் விளையாடியிருந்தமை நினைவுகூறத்தக்கது.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் குசல் பெரேராவிற்குப் பதிலாக அணியில் இணைக்கப்பட்ட தனன்ஜய டி சில்வாவும் ஜிம்பாப்வே அணியுடனான முதல் இரண்டு போட்டிகளுக்குமான குழாமில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.