அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா

1534

அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான சம்பியன்ஸ் கிண்ணத்தின் ஐந்தாவது போட்டி மழையின் குறுக்கீட்டால் எந்தவொரு முடிவும் இன்றி நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன

லண்டன் கேன்னிடன் ஓவல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் A குழுவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

>> பூரண உடற்தகுதியுடன் இந்தியாவை எதிர்கொள்ள காத்திருக்கும் அஞ்செலோ மெதிவ்ஸ்

ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்த நம்பிக்கையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு ஏமாற்றமே எஞ்சியது. நியூசிலாந்து அணியுடான கடந்த போட்டியில் ஓட்டங்களை வாரி வழங்கிய பந்து வீச்சாளர்கள் இந்தப் போட்டியில் பங்களாதேஷ் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால் மற்றும் சௌமியா சாக்கர் முதல் விக்கெட்டுக்காக 22 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஜோஷ் ஹஸல்வூட்டின் பந்து வீச்சில் மத்திவ் வேடிடம் பிடி கொடுத்து 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் சௌமியா சாக்கர்.

[rev_slider ct17-dsccricket]

அவரைத் தொடர்ந்து இம்ருள் கைஸ் மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பெட் கம்மிங்க்ஸ் மற்றும் மொய்சஸ் ஹென்றிக்கஸ் ஆகியோரின் அதிரடி பந்து வீச்சில் முறையே 6 மற்றும் 9 ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேறினர்.

இக்கட்டான சூழ்நிலையில் நான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பாலுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். அந்த வகையில் 11.3 ஓவர்கள் வரை இணைந்தாடிய இவ்விருவரும் தங்களுகிடையில் 69 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்ட அதேவேளை, அணியின் ஓட்ட எண்ணிக்கையை 122 ஓட்டங்களுக்கு உயர்த்தியிருந்தனர். ஷகிப் அல் ஹசன் இரண்டு பவுண்டரிகள் உள்ளடங்களாக 29 ஓட்டங்களுக்கு த்ரேவிஸ் ஹெட்டின் பந்து வீச்சில்  LBW முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

>> பாகிஸ்தான் அணியுடனான சமரில் இந்திய அணி இலகு வெற்றி

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேஹாடி ஹஸன் மிராஸ் தவிர்ந்த ஏனையோர் ஒற்றை இலக்கங்களுடன் வெளியேறினர். 26 பந்துகளை எதிர்கொண்ட மேஹாடி ஹஸன் மிராஸ் ஒரு பவுண்டரி உள்ளடங்களாக 14 ஓட்டங்களை பெற்ற நிலையில், மிச்சேல் ஸ்டார்க்கின் அதிரடி பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

தனித்து நின்று போராடிய தமிம் இக்பால் தன்னுடைய இரண்டாவது சதத்தினை பதிவு செய்ய ஐந்து ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் மிச்சேல் ஸ்டார்க்கின் அதிரடி பந்து வீச்சில் நேரடியாக ஜோஷ் ஹசல்வுட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த வகையில், 44.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்த பங்களாதேஷ் அணி 182 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதிரடியாக பந்து வீசிய மிச்சேல் ஸ்டார்க், 43ஆவது ஓவரில் தமிம் இக்பால் உட்பட மஷ்ரஃபி மோர்டாசா மற்றும் ரூபெல் ஹுசைன் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். எனினும் தனது ஹட்ரிக் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார்.

அதனையடுத்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 45 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

எனினும் போட்டியின் எட்டாவது ஓவரில் ரூபெல் ஹுசைனின் பந்து வீச்சில் lbw முறையில் ஆரோன் பின்ச் ஆட்டமிழந்தார். அதனையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் ஸ்டீவென் ஸ்மித் டேவிட் வோர்னருடன் இணைந்து ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார்.

>> இலங்கை வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள்

போட்டியின் 16ஆவது ஓவரில் மழையின் குறுக்கிட்டால் போட்டி இடைநிறுத்தப்படும் பொழுது அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நீடித்ததால் போட்டி முடிவற்ற நிலையில் நிறைவடைந்தது.

இந்தப் போட்டி முடிவை டக்வர்த் லூயிஸ் முறைப்படி அறிவிக்க வேண்டுமானால் இரண்டாவது இன்னிங்சில் குறைந்த பட்சம் 20 ஓவர்கள் வீசப்பட்டிருக்க வேண்டும். எனினும் 16 ஓவர்களில் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியும் முடிவற்ற நிலையில் நிறைவடைந்தமையினால், எதிர்வரும் போட்டிகளில் வெற்றி பெறும் எந்த அணியும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் சூழ்நிலை காணப்படுகின்றது

போட்டியின் சுருக்கம்  

பங்களாதேஷ்: 182/10 (44.3 ஓவர்கள்) – தமிம் இக்பால் 95, ஷகிப் அல் ஹசன் 29, மேஹாடி ஹஸன் மிராஸ் 14, மிச்சேல் ஸ்டார்க் 29/4, அடம் சம்பா  13/2, பெட் கம்மிங்க்ஸ் 22/4  

அவுஸ்திரேலியா: 83/1 (16.0 ஓவர்கள்) – ஆரோன் பின்ச் 19, டேவிட் வோர்னர் 40*, ஸ்டீவன் ஸ்மித் 22*, ரூபெல் ஹுசைன் 21/1