ஆசிய மெய்வல்லுனரில் புது சரித்திரம் படைத்த இலங்கை

Asian Athletics Championship 2023

3847
Asian Athletics Championship 2023

தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்ற 25ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான இன்று (16) இலங்கை அணி 2 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று புதிய சாதனை படைத்தது.

இதன்மூலம் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 8 பதக்கங்களை வென்ற இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய பிரபல நாடுகளுக்குப் பிறகு 4ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியது.

25 ஆண்டுகால ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் வரலாற்றில் ஒரு அத்தியாயம் ஒன்றில் இலங்கை அணி வென்ற அதிகபட்ச பதக்கங்களாகவும், புள்ளிப் பட்டியலில் அதிஉயர் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தது.

இதற்கு முன் 2002இல் இலங்கையில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அதிகபட்சமாக 3 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது.

>>ஆசிய மெய்வல்லுனரில் கயன்திகா, நதீகாவுக்கு வெண்கலம்

அதுமாத்திரமின்றி, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியிலும், 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியிலும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் சாதனைகளையும் இலங்கை அணி வீரர்கள் முறியடித்திருந்தனர். அதேபோல, ஒரு தெற்காசிய போட்டி சாதனையும் முறியடிக்கப்பட்டது.

மேலும், இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 5 இலங்கை சாதனைகள் முறியடிக்கப்பட்டன. பெண்களுக்கான 800 மீட்டர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டம், பெண்களுக்கான ஈட்டி எறிதல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை சாதனைகள் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,  இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட 13 வீரர்களில் 11 பேர் பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சாதனை நாயகி தருஷி

அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகள் மற்றும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற வலள ஏ ரத்நாயக கல்லூரியின் தருஷி கருணாரத்ன, இன்று பிற்பபகல் நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

போட்டி தூரத்தை 2 நிமிடங்கள், 00.66 செக்கன்களில் நிறைவு செய்த அவர், ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனையையும், இலங்கை சாதனையையும் முறியடித்து அசத்தினார். இந்த நேரப் பெறுதியானது அவரது தனிப்பட்ட சிறந்த நேரப் பெறுதியாகவும் பதிவாகியது.

ஆத்துடன், 18 வயது பாடசாலை மாணவியான தருஷி கருணாரத்ன, ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டி ஒன்றில் வென்றெடுத்த முதலாவது தனிநபர் தங்கப் பதக்கம் இதுவாகும்.

முன்னதாக நேற்று (15) நடைபெற்ற 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியிலும், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியிலும் இடம்பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>இலங்கைக்காக வரலாற்று தங்கப் பதக்கதை வென்ற நதீஷா

அதேபோல, தருஷி கருணாரத்னவின் தங்கப் பதக்கமானது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் தனிநபருக்கான போட்டி ஒன்றில் இலங்கைக்கு கிடைத்த 9ஆவது பதக்கமாகும்.

இதனிடையே, தருஷியுடன் பெண்களுக்கான 800 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணியின் தலைவி கயன்திகா அபேரத்ன, 2 நிமிடங்கள், 03.25 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார். இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் அவரது 2ஆவது பதக்கம் இதுவாகும். முன்னதாக பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள் 14.39 செக்கன்களில் நிறைவுசெய்து கயன்திகா அபேரத்;ன வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அஞ்சலோட்ட அணி சாதனை

இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 01.56 செக்கன்களில் நிறைவுசெய்து இலங்கை அணியினர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

இலங்கை அணி பதிவுசெய்த நேரம் இந்த பருவகாலத்திற்கான உலகின் அதிசிறந்த 2ஆவது நேரப் பெறுதியாகவும், இலங்கை சாதனையாகவும் பதிவானது. அத்துடன், ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்துக்கான உலக சம்பியன்ஷிப் அணிகள் தரவரிசையில் 12ஆவது இடத்தையும் இலங்கை அணி பிடித்தது.

தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் அருண தர்ஷன, காலிங்க குமாரகே, பபசர நிகு, பசிந்து கொடிகார ஆகியோர் இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தனர்.

அப் போட்டியில் இலங்கை அணிக்கு பலத்த போட்டியைக் கொடுத்த இந்திய அணியினர் (3:01.80) வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொள்ள, கத்தார் அணியினர் (3:04.26) மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதகத்தை தமதாக்கினர்.

>>கலப்பு அஞ்சலோட்டத்தில் பதக்கம் வென்று இலங்கை அணி சாதனை

மறுபுறத்தில் பெண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தது. போட்டியை நிறைவு செய்ய 3 நிமிடங்கள், 33.27 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக் கொண்டது.

பெண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணியினால் பதிவு செய்யப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாக இது இடம்பிடித்ததுடன், இலங்கை சாதனையாகவும் பதிவானது.

இந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் இலங்கை அணியில் சயுரி மெண்டிஸ், தருஷி கருணாரத்ன, நிஷேந்திரா பெர்னாண்டோ மற்றும் நதீஷா ராமநாயக்க ஆகியோர் இடம்பெற்றனர்.

பெண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் வியட்நாம் அணி (3:32.36) தங்கப் பதக்கத்தையும், இந்திய அணி (3:33.73) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இதேவேளை, ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட இலங்கை அணி நாளை (17) இரவு நாடு திரும்பவுள்ளது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<