உலகக் கிண்ண முதல் போட்டியில் சில அரிய சாதனை அடைவுகள்

129
AFP

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 12ஆவது அத்தியாயம் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான போட்டியுடன் நேற்று (30)  இங்கிலாந்து மண்ணில் ஆரம்பமாகியது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் குறித்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவினை 104 ஓட்டங்களால் தோற்கடித்து தமது வெற்றி ஓட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றது.

பென் ஸ்டோக்ஸின் திறமையைக் கண்டு ஈர்க்கப்பட்டேன் – மோர்கன்

பென் ஸ்டோக்ஸின் திறமையைக் கண்டு ……..

இதேநேரம், இப்போட்டியில் சில சாதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவற்றினை நோக்குவோம்.

உலகக் கிண்ணப் தொடரின் முதல் பந்தை போட்ட சுழல்வீரர்

இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியே முதலில் துடுப்பாடியது.

அந்தவகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டியின் முதல் பந்தினை தென்னாபிரிக்க அணியின் மணிக்கட்டு சுழல்வீரரான இம்ரான் தாஹிர் வீசியிருந்தார். அதன் மூலம் தாஹிர் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றின் முதல் பந்தினை வீசிய முதல் சுழல் பந்துவீச்சாளராக புதிய சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறித்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே தாஹிர் இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பேஸ்டோவின் விக்கெட்டினைக் கைப்பற்றியது சிறப்பம்சமாகும்.

இரண்டு, இரண்டாவது தோல்விகள்

தென்னாபிரிக்க அணி கேப்டவுன் நகரில் 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடன் 3 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது. இதனை அடுத்து நேற்றைய இங்கிலாந்து அணியுடனான போட்டியில் கிடைத்த தோல்வி தென்னாபிரிக்க அணிக்கு உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி ஒன்றில் கிடைத்த இரண்டாவது தோல்வியாகும்.

உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் 12 ஆவது …………..

அதேநேரம், இங்கிலாந்து அணியுடனான தோல்வி, உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் ஓட்டரீதியில் தென்னாபிரிக்க அணிக்கு கிடைத்த இரண்டாவது பெரிய தோல்வியாகும்.

தென்னாபிரிக்க அணிக்கு ஓட்டரீதியில் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் கிடைத்த பெரிய தோல்வி இந்திய அணிக்கு எதிராக 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில் பதிவாகியது.

மெல்பர்ன் நகரில் இடம்பெற்ற குறித்த உலகக் கிண்ணத் தொடரின் போட்டியில் தென்னாபிரிக்க அணி, இந்தியாவுடன் 130 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.

200ஆவது ஒருநாள் போட்டி, 7000 ஓட்டங்கள்

இந்தப் போட்டி இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கனுக்கு 200ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியாக அமைந்ததோடு, இப்போட்டியின் மூலம் மோர்கன் இங்கிலாந்து அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரராக மாறினார்.

மேலும், மோர்கன் இப்போட்டியில் 57 ஓட்டங்கள் குவித்து ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 7,000 ஓட்டங்கள் கடந்து புதிய மைல்கல்லினையும் பதிவு செய்தார்.  

கன்னி உலகக் கிண்ணப் போட்டியில் அரைச்சதம் பெற்ற ஐந்தாவது தென்னாபிரிக்க வீரர்

தென்னாபிரிக்க அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேனிற்கு இங்கிலாந்து அணியுடனான உலகக் கிண்ணப் போட்டி, கன்னி உலகக் கிண்ணப் போட்டியாக அமைந்தது.

இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 50 ஓட்டங்களை குவித்த ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன், கன்னி உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் அரைச்சதம் பெற்ற ஐந்தாவது தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார்.

12 வருடங்களின் பின்னர் ஸ்டோக்ஸ் வித்தியாச சாதனை

தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் சகல துறைகளிலும் ஜொலித்திருந்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் உலகக் கிண்ண முதல் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவாகியிருந்தார்.

ஸ்டோக்ஸ் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் அரைச்சதம் (89) ஒன்றினை கடந்திருந்ததோடு, இரண்டு விக்கெட்டுகளையும் (2/12) கைப்பற்றி, இரண்டு பிடியெடுப்புக்களையும் எடுத்திருந்தார்.

இதேமாதிரியான ஒரு அடைவு மட்டத்தினை கென்ய வீரரான ஸ்டீவ் டிக்கலோ 12 வருடங்களுக்கு முன்னர் 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் கனடா அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்திருந்தார். ஸ்டீவ் டிக்கலோ கனடாவுக்கு எதிரான போட்டியில் 72 ஓட்டங்கள் குவித்து, இரண்டு பிடியெடுப்புக்களுடன், இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<