இலங்கையில் நிலவும் கொவிட் 19 – வைரஸ் அச்சுறுத்தலின் மத்தியிலும் விளையாட்டுத் துறையின் முக்கியத்துவத்தை கவனத்திற் கொண்டு 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் இன்று (26) ஆரம்பிக்கப்பட்டது.
இவ்விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று ஆண்களுக்கான குண்டெறிதல், நீளம் பாய்தல், ஆண்களுக்கான 5000 மீற்றர், பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் மற்றும் 200 மீற்றர் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
>> டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆறு இலங்கை வீரர்கள் தேர்வு
ஆண்களுக்கான 200 மீற்றர்
ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் வடமேல் மாகாணத்தை சேர்ந்த மொஹமட் சபான் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் சார்பாக பங்கேற்ற மொஹமட் சபான், போட்டி தூரத்தை 21.41 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டார். முதலிடத்தை இலங்கை இராணுவ விளையாட்டு கழகத்தின் காலிங்க குமாரகே போட்டித்தூரத்தை 20.79 செக்கன்களில் நிறைவு செய்து பிடித்துக்கொண்டதுடன், மூன்றாவது இடத்தை அருன தர்ஷன பிடித்துக்கொண்டார்.
நீளம் பாய்தல் (ஆண்கள், மகளிர்)
ஆண்களுக்கான நீளம் பாய்தலின் தங்கப் பதக்கத்தை, 7.71 மீற்றர் தூரம் பாய்ந்து, ஸ்ரெசன் தனன்ஜய வெற்றிக்கொண்டதுடன். சாரங்கி சில்வா 0.1 மீற்றர் வித்தியாசத்தில் தேசிய சாதனையை பதிவுசெய்து மகளிருக்கான நீளம் பாய்தலில் (6.33) தங்கம் வென்றார்.
3000 மீற்றர் தடை தாண்டல் (மகளிர்)
மகளிருக்கான 3000 மீற்றர் தடை தாண்டலின் தங்கப் பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலனி ரத்நாயக்க முதலிடம் பெற்றார். இவர் போட்டித்தூரத்தை 10:15:86 நிமிடங்களில் நிறைவுசெய்தார். இரண்டாவது இடத்தை உதய குமாரியும் (11:13:35), மூன்றாவது இடத்தை H.N. குமாரியும் (11:36:02) பிடித்துக்கொண்டனர்.
5000 மீற்றர் (ஆண்கள்)
கடந்த ஆண்டு 5000, 10000 மீற்றர் ஓட்டப் பந்தயங்களை வெற்றிக்கொண்ட புஷ்பகுமார இலகுவாக வெற்றியை பெற்றுக்கொண்டார். அவர் 14:29:45 நிமிடங்களில் போட்டித்தூரத்தை கடந்ததுடன், இரண்டாவது இடத்தை ஏ.கே. தரங்கவும் (14:36:39), மூன்றாவது இடத்தை டி. எம். சமரகோனும் (14:46:07) பிடித்துக்கொண்டனர்.
குண்டெறிதல் (ஆண்கள்)
சமித் பெர்னாண்டோ வழமைப்போன்று தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டதுடன், இவர் 16.12 மீற்றர் தூரத்தை பதிவுசெய்திருந்தார். இரண்டாவது இடத்தை அனுபவ வீரர், சமித் ஜயவர்தன (15.07) பெற்றுக்கொண்டார்.
>> ஒரு வருடத்தின் பின் நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுனர் போட்டிகள்
ஈட்டி எறிதல் (ஆண்கள்)
எஸ்.ஜே. ரணசிங்க ஆடவருக்கான ஈட்டி எறிதலின் தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டார். இவர், 76.10 மீற்றர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை தக்கவைத்தார். இரண்டாவது இடத்தை W.L. தயரத்ன பிடித்துக்கொண்டதுடன், மூன்றாவது இடத்தை ரன்ஜித் குமார பிடித்துக்கொண்டார்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<